மலச்சிக்கலை ஏற்படுத்தும் உணவு பழக்கம்
எனக்கு அடிக்கடி வயிற்று போக்கு போல் ஏற்படுகிறது. என்ன காரணமாக இருக்கலாம்? அதற்கு சிகிச்சை என்ன?அடிக்கடி வயிற்று போக்கு ஏற்படுவது எப்பொழுது, எப்படி, எவ்வாறு ஏற்படுகிறது என்பதை அறிய வேண்டும். உதாரணமாக காலை, மாலை, இரவு உணவுக்கு பிறகு வருகிறதா? அல்லது இரவு நேரங்களில் ஏற்படுகிறதா? சில உணவு பொருட்களை சாப்பிடும் போது ஏற்படுகிறதா? என்பதை ஆராய வேண்டும். சிலருக்கு கீரை போன்ற உணவை சாப்பிடும்போது ஏற்படலாம். அதற்கு கீரையை நன்றாக கடைந்து, அதை மசியல் போல் ஆக்கி சாப்பிட்டால் வயிற்று போக்கு ஏற்படாது. கேழ்வரகு, கோதுமை போன்ற உணவுகளை உட்கொள்ளும் சர்க்கரை நோயாளிகளுக்கு வயிற்று போக்கு ஏற்படலாம். கேழ்வரகு, கோதுமையில் 'குளூட்டன்' என்ற சத்து உள்ளது. அதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். ஒவ்வொரு முறையும் சாப்பாட்டுக்கு பிறகும் மலம் இருத்தல், மனக் கவலை மற்றும் மன அழுத்தத்தினாலும் வயிற்று போக்கு ஏற்படலாம். இதற்கு 'இரிட்டபில் பவர் சின்ட்ரோம்' என சொல்வார்கள். எப்படி மனக்கவலையின் போது படபடப்பு ஏற்படுகிறதோ, அதே போல் வயிற்றில் ஏற்படும் படபடப்பு ஆகும்.முக்கியமாக வயிற்று போக்கு ஏற்படும் போது சாப்பிடும் உணவு செமிக்காமல் வருகிறதா, மலத்தின் நிறம் எப்படி இருக்கிறது, என்பதை பார்க்க வேண்டும். ஒரு மாதத்திற்கு மேல் ஏற்படும் அடிக்கடி வயிற்று போக்கால் உடல் எடை குறைவு ஏற்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். தைராய்டு சுரப்பிகள் அதிகமாக இருந்தாலும், சில ஒவ்வாமை போன்ற காரணங்களாலும் அடிக்கடி வயிற்று போக்கு ஏற்படலாம். சர்க்கரை நோயால் ஏற்படும் 'தானியங்கி நரம்பு மண்டலம்' பாதிப்பாலும் வயிற்று போக்கு ஏற்படலாம். இப்பிரச்னைக்கு மருத்துவரிடம் காண்பித்து உரிய சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.எனக்கு நான்கு நாட்களுக்கு ஒருமுறை தான் மலம் வருகிறது. அப்படி மலம் செல்லாமல் இருக்கும்போது வயிற்று வலி ஏற்படுகிறது. என்ன காரணமாக இருக்கலாம்.சாதாரணமாக ஒவ்வொரு மனிதனும் தினம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும். நான்கு நாள் அல்லது ஐந்து நாளுக்கு ஒரு முறை மலம் கழிப்பது வியாதிகளின் அறிகுறியாகும். பல காரணங்களினால மலச்சிக்கல் ஏற்படும். உண்ணும் உணவில் நார்ச் சத்துக்கள் இல்லாமல் இருப்பது, தண்ணீர் அதிகமாக குடிக்காமல் இருப்பது, உடல் உழைப்பு இல்லாமல் ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வதாலும் மலச்சிக்கல் ஏற்படலாம்.சில நரம்பு சம்பந்தமான வியாதிகள், அதாவது பக்கவாதம், எலும்பு தண்டுவட வியாதி, அடிக்கடி மலச்சிக்கல் நோய்க்கான மாத்திரைகளை உண்ணுவதாலும் மலச்சிக்கல் ஏறபடலாம். உரிய மருத்துவரின் ஆலோசனை பெறாமல் மருந்து கடைகளில் மருந்து வாங்கி உண்பதாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. குடல் அடைப்பு, குடல் கட்டி, குடலுக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைதல், கிருமிகளால் குடல் பாதிக்கப்படும் போதும் மலச்சிக்கல் ஏற்படும்.போதை மருந்து பயன்படுத்துவோர், மனச்சிதைவு, மன அழுத்தத்திற்கு ஆளாவோர் பயன்படுத்தும் மாத்திரைகளாலும், தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பது, 'பார்க்கின்சன்' நரம்பு நோய், கால்சியம் சத்து கூடுவது பதட்டத்தாலும் மலச்சிக்கல் வரும். சிலர் குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தாலும் நன்றாக மலம் கழிக்க மாட்டார்கள். இதுவே மலச்சிக்கலுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. சிலருக்கு மூன்று நாள், நான்கு நாள் மலச்சிக்கலுடன் வயிற்று போக்கு ஏற்படும். மலச்சிக்கலுடன், வயிற்று போக்கும் மாறி மாறி ஏற்படும். அப்படி ஏற்படுவோருக்கு நரம்பு மண்டல கோளாறு இருக்கிறதா, என ஆராய வேண்டும்.- டாக்டர் ஏ.சங்குமணி சர்க்கரை நோய் நிபுணர், மதுரைsangudr@yahoo.co.in