உள்ளூர் செய்திகள்

நீரிழிவு நோய்க்கு உணவே மருந்து!

நீரிழிவு நோய் சிகிச்சை முறையில் உணவு கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மிக முக்கியம். இக்கட்டுப்பாட்டினை செய்யாமல் உயர்ந்த ஊசி, மாத்திரை சாப்பிட்டாலும் பலன் குறைவாக இருக்கும். அரிசி, கோதுமை, ராகி, பார்லி, மக்காச் சோளம் போன்ற அனைத்திலும் 70% மாவுச்சத்து உள்ளது. ஆகவே அவற்றை சரியான அளவில் உட்கொள்ளுதல் அவசியம். கலோரி குறைந்த, புரதம் அதிகமாக உள்ள உணவை சாப்பிட வேண்டும். பயறு, பருப்பு போன்ற தாவரங்களிலிருந்து கிடைக்கின்ற நார்ச்சத்து தரமானவையாகவும், சிறப்பானைவையாகவும் இருக்கும். நார்ச்சத்து மிகுந்த உணவு, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி கொலஸ்டிராலைக் குறைப்பதால், இயற்கையான நார்ச்சத்துள்ள உளுந்து, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு போன்ற முழு தானியப் பயறு வகைகள் மற்றும் கீரை வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவில், கொழுப்பை குறைத்தால் ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாவதையும் ரத்தக் குழாய்களில் அடைப்பு உண்டாவதையும் தடுக்கலாம். இதில் சமையலுக்கு பயன் படுத்தும் எண்ணெய் மிக முக்கியம். தாவர எண்ணெய்களை குறைந்த அளவில் உபயோகிக்கலாம். ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றை மாற்றி மாற்றி உபயோகித்தால் பலன் அதிகம். விரதம் இருப்பதையும், விருந்தில் சாப்பிடுவதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். உணவையும் பல வேளைகளாகப் பிரித்து, சிறு சிறு இடைவெளிகளில் உண்ணுவது நல்லது. உணவில் கலோரி அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். என்ன சாப்பிடுகின்றோம் என்பதைக் காட்டிலும், எவ்வளவு சாப்பிடுகின்றோம் என்பது தான் முக்கியம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு, குறைப்பிரசவத்தில் குழந்தைப் பேறு, கருச்சிதைவு, உடல் ஊனம், குழந்தை இறந்து பிறப்பது போன்ற சிக்கல்கள் இருந்தன. இன்சுலின் உபயோகிப்பதால் தற்காலத்தில் குறைந்து விட்டது. கருத்தரிப்பதற்கு முன்பும் கருவுற்ற பின்பும், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். கருத்தரிககும் காலங்களில் நோய்த் தொற்று சிறுநீரக பாதையில் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தையின் வளர்ச்சியை ஸ்கேன் செய்து பார்த்து மருத்துவரின் ஆலோசனைப்படி, குழந்தையின் வளர்ச்சிக் குறைகளைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பத்தின் போது ஊசிக்கு பதிலாக மாத்திரைக்கு மாறக்கூடாது. சிறுநீரில் கீட்டோன் இருக்கிறதா என்பதை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பார்க்க வேண்டும். கீட்டோன் இருந்தால் தேவையான சக்தி உணவில் கிடைக்கவில்லை என்று பொருள். கர்ப்பத்தில் உடல் எடை வாரத்திற்கு 0.2 கிலோ எடை அதிகரிக்கலாம். இந்த எடை அதிகரிப்பு படிப்படியானதாக இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாடு மிகமிக அவசியம். கருப்பையில் குழந்தையின் வளர்ச்சியையும், அதனுடைய அசைவுகளையும் இதயத் துடிப்பினை கணக்கிட்டு கண்காணிக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகளின் குழந்தை பருமனாகி விடும் என்பதால், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம்தான் பிரசவிக்க வேண்டி வரும். அக்குழந்தைகளுக்கு குறை மாதத்தில் பிறந்ததைப் போல், சுவாசத்தில் பிரச்னை ஏற்படலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !