தங்கச் சான்றிதழ் பெற்ற பப்பாளி, சூப்பர் ஸ்டார் கீரைகள்!
'பிக்மென்டேஷன்' எனப்படும் தோலில் சில பகுதிகளில், 'மெலனின்' உற்பத்தி அதிகமாக இருந்தால், டாக்டரின் ஆலோசனையின்படி, இணை உணவான 'விட்டமின் சி, இ, ஏ' மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.பழங்களில் தங்க தரச் சான்றிதழ் பெற்றது பப்பாளி. உடனே பப்பாளி பழத்தை பிசைந்து முகத்தில் தேய்க்க வேண்டாம். எந்த உணவுப் பொருளையும் முகத்தில் தேய்க்க நான் சிபாரிசு செய்ய மாட்டேன். காரணம், ஒருவரின் தோலுக்கு பொருந்தும் தக்காளி இன்னொருவருக்கு பிரச்னையாகலாம். பதிலாக, நறுக்கிய பப்பாளி துண்டுகளை தினமும் ஒரு கப் சாப்பிடலாம். இரண்டு கமலா ஆரஞ்சு, வாரத்தில் மூன்று நாட்கள் புதினா கலந்த மோர், மோரில் உள்ள லேக்டிக் அமிலம், புதினாவுடன் சேர்ந்து தோலின் அடர்த்தியைக் குறைக்கும். கேரட் ஜூஸ் குடிக்கலாம்.உடல் உஷ்ணத்தைக் குறைக்க தினமும் இரண்டு இளநீர், வெள்ளரிக்காய் எடுத்துக் கொள்ளலாம். கண்களை சுற்றி கருவளையம் இருந்தால், 'விட்டமின் கே' அதிகமுள்ள கீரைகள், குறிப்பாக பொன்னாங்கண்ணி, மணித்தக்காளி, முருங்கைக் கீரை சாப்பிடலாம். இந்த மூன்றும் கீரைகளில் சூப்பர் ஸ்டார்கள். தொப்பை அதிகம் இருந்தால், வாரத்தில் மூன்று நாட்கள் வாழைத்தண்டு ஜூஸ், வெறும் வயிற்றில் குடிக்கலாம்.மற்றபடி தலைமுடி உதிர்ந்தால், ஒரு பிடி கருவேப்பிலை, ஒரு நெல்லிக்காய் இரண்டையும் அரைத்து, மோரில் கலந்து குடிக்கலாம். தொடர்ந்து, 30 நாட்கள் இதை செய்தால், முடி நன்றாக இருக்கும்.வறட்சியான தோலாக இருந்தால் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய், பால் சேர்க்காத காபியில் ஒரு ஸ்பூன், உணவில் ஒரு ஸ்பூன் என்று தினமும் மூன்று ஸ்பூன்கள் சேர்த்துக் கொள்ளலாம். ரத்தக் கொழுப்பு அதிகம் இருந்தால் டாக்டரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம். தினமும் பாதாம் பால், தேங்காய் பால் 100 -- 150 மில்லி குடிக்கலாம்.நாள் முழுதும் 'ஏசி'யில் இருந்தால், உடலில் உள்ள நீர்ச்சத்தை 'ஏசி' உறிஞ்சிவிடும். தோல் உரியத் துவங்கும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும்.திவ்யா சத்யராஜ்,ஊட்டச்சத்து நிபுணர்,சென்னை,98400 27680 divyasathyaraj7@gmail.com