உள்ளூர் செய்திகள்

இதய நோயாளிக்கு தினசரி எவ்வளவு நேரம் தூக்கம் தேவை?

எஸ்.டி.கிறிஸ்துதாஸ், கோவை: எனக்கு 83 வயதாகிறது. கடந்த எட்டு மாதங்களாக அவ்வப்போது மயக்கம் வருகிறது. இ.சி.ஜி., பரிசோதனையில் முடிவு நார்மலாக உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்?83 வயதில் மயக்கம் வருவதை அலட்சியப்படுத்தக் கூடாது. இது இதயம் காரணமாகவோ, மூளை நரம்பு காரணமாகவோ, ரத்தத்தில் கோளாறு காரணமாகவோ ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதயத்தை பொறுத்தவரை, 'எக்கோ' பரிசோதனை அவசியம் தேவைப்படும். இதில் வால்வு கோளாறு, இதயத்தின் பம்பிங் திறனை எளிதில் கண்டறியலாம்.  இந்த வயதில், Aortic Stenosis என்ற இதய வால்வில் அடைப்பு ஏற்பட்டு, மயக்கம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. மூளையில் பிரச்னையோ அல்லது அதற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பிரச்னையோ ஏற்பட்டால், மயக்கம் ஏற்படலாம். ரத்தத்தில் ஏற்படும் சில மாறுதல்களாலும் மயக்கம் ஏற்படலாம். எனவே எதனால் மயக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டறிவது அவசியம். அதற்கு ஏற்பவே சிகிச்சை முறை அமையும்.எஸ்.கேசவன், மதுரை: எனக்கு இரண்டு ஆண்டுகளாக இதயத்தின் பம்பிங் திறன் குறைவாக உள்ளது. அதற்காக பல மாத்திரைகள் எடுத்து வருகிறேன். தற்போது எனது இதய டாக்டர் எனக்கு Ivabradine என்ற மாத்திரையை தந்துள்ளார். இதை நான் எடுத்து கொள்ளலாமா?இதயத்தின் பம்பிங் திறன் குறைவதை Heart Failure  என்பர். இதற்கு முதலில் நாம் எடுத்து கொள்ளும் நீரின் அளவை குறைப்பது அவசியம். அத்துடன் உணவில் உப்பையும் நன்கு குறைத்தாக வேண்டும். Heart FailureUS  தற்போது மிக நல்ல மருந்துகள் உள்ளன.Ivabradine   என்பது ஒரு புதிய வகை மருந்து. இது இதய துடிப்பின் அளவை குறைக்கிறது. அத்துடன் மிக முக்கியமாக பம்பிங் திறனையும் ஓரளவு சரி செய்கிறது. எனவே இதை நீங்கள் தாராளமாக எடுத்து கொள்ளலாம்.எஸ்.கல்யாணசுந்தரம், சிவகாசி: எனக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென வலது கை செயலிழந்தது. அப்போது,' Heparin'   ஊசியும், சில மருந்துகளும் தந்தனர். செயலிழந்த கை இரு மாதங்களில் குணமாகி விட்டது. தற்போது Aspirin, Statin  என இருவகை மாத்திரைகளை வாரம் இருமுறை சாப்பிட்டு வருகிறேன். இந்த மாத்திரைகளை நிறுத்திவிடும்படி எனது குடும்ப டாக்டர் கூறுகிறார். அதை நிறுத்துவதா, தொடர்ந்து எடுப்பதா?உங்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் வந்தது ஒரு வகை பக்கவாதம் தான். அதற்காக தான்  ' ' Heparin'  ஊசியும், Anti Platelets, Statin  வகை மாத்திரைகளும் கொடுக்கப்பட்டன. நீங்கள் தற்போது வாரம் இருமுறை ஸ்டேட்டின், ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுப்பதாக கூறுகிறீர்கள். இது மிகவும் தவறானது. இந்த மாத்திரைகளை தினசரி எடுப்பது தான் அத்தியாவசியமானது. ஏனெனில் இம்மாத்திரைகளை எடுத்தால் மீண்டும் பக்கவாதம் போன்ற கொடூர ரத்தக்குழாய் நோய்களை வரவிடாமல் தடுக்கலாம். இதை வாரம் இருமுறை எடுத்தாலோ அல்லது நிறுத்தினாலோ அது சில கொடூர விளைவுகளை ஏற்படுத்தலாம்.கே.முருகேசன், பாம்பன்: இதய நோயாளிகளுக்கு தினசரி எவ்வளவு நேரம் தூக்கம் தேவை?மனிதனுக்கு தூக்கம் இன்றியமையாதது. ஒரு பேட்டரியை ரீசார்ஜ் செய்வது போன்றது இது. தூக்கம் நன்கு இருந்தால் தான், மறுநாள் உடலளவிலும், மனதளவிலும் பணிகளை நன்கு கவனிக்க முடியும். அதுமட்டுமின்றி தூக்கம் குறைவதால் மாரடைப்பு வரும் தன்மை பலமடங்கு கூடுவதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன.  ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் ஏழு மணி நேரம் தூக்கம் தேவை. மாரடைப்பு உள்ளவர்கள் எட்டு மணி நேரம் தூங்குவது நல்ல பழக்கம். - டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !