உள்ளூர் செய்திகள்

பாயில் படுத்து உறங்கினால்

நம்முடைய சோம்பேறித்தனத்தால், பழங்கால வாழ்க்கை முறையையே, நவீனம் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். முதலில், நம்முடைய உணவில் ஆரம்பித்து, படிப்படியாக முன்னேறிய மாற்றம், இன்று, நம் படுக்கையறை வரை வந்துவிட்டது. முந்தைய காலத்தில் தரையில், பாய் விரித்து உறங்குவது தான் வழக்கம். ஆனால், இன்றோ, கட்டிலுக்கும், மெத்தைக்கும், இடமாற்றம் செய்து விட்டோம்.இதனால், பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. உடலுக்கு நன்மை கொடுக்கும் இயற்கையான பாயை வாங்காமல், பிளாஸ்டிக் பாய் பயன்படுத்துவதாலும், நம் ஆரோக்கியத்துக்கு கேடு தான் விளைகிறது. இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பாய்களில் உறங்கினால், நமக்கு நிம்மதியான தூக்கம் கிடைப்பதோடு, பல்வேறு மருத்துவ நன்மைகளும் கிடைக்கின்றன. நம் உடலுக்கு இயற்கையாகவே குளிர்ச்சித் தன்மை கிடைக்கும்.வீட்டில் சாணம் மெழுகிய வெற்று தரையில் படுத்து உறங்கிய ஆதி மனிதர்கள், சற்று சுகமாக படுத்து உறங்க வேண்டி, பாய்களை பின்ன ஆரம்பித்தனர். முதன் முதலில், தென்னை ஓலையில், இருந்து தான் பாய்களை தயாரித்தார்கள். முற்றாத இளம் தென்னை ஓலைகளை வெட்டி எடுத்து, நடுவில் உள்ள தண்டு போன்ற மட்டையை இரண்டாக வெட்டிப் பிளந்து விட்டால், மட்டையுடன் கூடிய இரண்டு துண்டு ஓலைகள் கிடைக்கும். இரண்டு துண்டுகளில், மட்டைப்பகுதிகளும், வெளிப்புறமாக வரும்படி வைத்து ஓலைகளை பின்னினால், நமக்கு தென்னம் பாய் கிடைக்கும்.பாய்களில், கோரைப் பாய், பிரம்பு பாய், ஈச்சம் பாய், மூங்கில் பாய், தாழம் பாய்,பேரிச்சம் பாய், நாணல் கோரைப் பாய் என, பல வகைகள் இருக்கின்றன. கொஞ்சம் வசதி வாய்ப்புள்ளவர்கள், தாழை மடல்களால் பின்னப்பட்ட பாய்களில் படுத்து உறங்குவர். இது, மெத்தை போன்று சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். தாழை மடல்களை வெட்டி தண்ணீரீல் ஊற வைத்து, அதை இதழ்களாக பிரித்து, அதிலிருந்து தாழம்பாய்களை பின்னுவார்கள்.கோரைப் பாய்: கோரைப்பாயில் உறங்கினால், உடல் சூடு போக்கி குளர்ச்சியை தரும். அதே போல, பிரம்பு பாயை பயன்படுத்தினால், சீதபேதி நலம் பெறும்.ஈச்சம் பாய்: ஈச்சம் பாயில், தொடர்ந்து படுத்து உறங்கினால், வாதம் தொடர்பான நோய்கள் குணமாகும். ஆனால், இது உடல் சூட்டை அதிகப்படுத்தி கபத்தை அதிகரிக்கும் என்பதால், கவனம் வேண்டும்.மூங்கில் பாய்: மூங்கில் பாயை பயன்படுத்தினால், உடல் சூடு அதிகரிக்கும் என்பதால், இதை பயன்படுத்துவதில் தயக்கம் கொள்வர். மாறாக, வெளிச்சத்தை மறைக்க, அலங்காரத்துக்கு பயன்படுத்துவதுண்டு.பனையோலை பாய்: பித்தத்தை போக்கி உடல் சூட்டை குறைத்திடும். அதே போல, தென்னம் ஓலையில் செய்யப்பட்ட பாயை பயன்படுத்தினால், உடலின் தட்பவெப்பத்தை சமன் செய்திடும்.இயற்கையாக தயாரிக்கப்படும் இதுபோன்ற பாய்களில் படுத்து உறங்கினால், மூட்டு, முதுகு, தசை தொடர்பான நோய்கள் வராமல் தவிர்க்கலாம். உடலின் ரத்த ஓட்டம் சீராகும். நாணல் புல் நீண்டு வளரும். அதை அறுத்து வந்து, மிதமாக வைத்து, அவைகளை பனை நாரால் கோத்து ஒரு வித பாயை உருவாக்குவார்கள். இதற்கு நாணல் பாய் என்று பெயர். பாயில் படுத்து உறங்குவதை, கர்ப்பிணிகள் தொடர்ந்து வந்தால், இடுப்பு எலும்பு விரிவடையும். இதனால், சுகப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !