உள்ளூர் செய்திகள்

பிராணாயாமம் செய்வது நுரையீரலுக்கு நல்லதா?

நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க பிராணாயாமம் தினமும் செய்வதாக பலரும் சொல்கின்றனர். நுரையீரலின் வேலை என்ன என்பதை தெரிந்து கொண்ட பின் இதைச் செய்தால் நல்லது. நாம் சுவாசிக்கும் காற்று, சுவாசக் குழாய் வழியாக நுரையீரலில் உள்ள அல்வியோலை என்ற சிறிய காற்றுப் பைகளுக்குள் செல்கிறது. அங்கு காற்றில் உள்ள ஆக்சிஜனை பிரித்து, ரத்த ஓட்டத்தில் கலக்கச் செய்து உடல் முழுதும் செல்களுக்கு அனுப்புகிறது. செல்கள் ஆக்சிஜனை உபயோகிக்கும் போது, உருவாகும் கார்பன்டை ஆக்ஸ்சைடு மூச்சை வெளி விடும் போது வெளியேறுகிறது. இது தான் நுரையீரலின் முக்கிய பணி. எனவே, காற்று நுரையீரலுக்குள் செல்வது முக்கியம். ரத்த ஓட்டம் அதிகமாகும் போது நுரையீரலை பரிசோதனை செய்தால் தான் இந்த பணி சரியாக நடக்கிறதா என்று தெரியும். பொதுவாக உட்கார்ந்து கொண்டு தான் பிராணாயாமம் செய்வோம். மூச்சை நன்றாக உள்ளிழுக்கும் போது, நுரையீரல்விரியும். ஆனால் ரத்த ஓட்டம் குறைவாகவே இருக்கும். காரணம், நுரையீரலின் வேலையை நாம் அதிகப்படுத்தவில்லை. சுறுசுறுப்பாக நடக்கும் போது எப்படி இதயத் துடிப்பு அதிகமாகி, ரத்தத்தை வேகமாக 'பம்ப்' செய்கிறதோ, அது போல தான் வேகமாக நடக்கும் போது நுரையீரலுக்கும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதயமும் நுரையீரலும் எல்லா நேரமும் இணைந்தே செயல்படுகிறது. இதயத்திற்கு செல்லும் ரத்தம் முழுதையும் சுத்தம் செய்வது நுரையீரல் தான். வேகமாக நடக்கும் போது அதிக ஆக்சிஜனை நுரையீரலால் தர முடிந்தால், நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கிறது, நுரையீரலின் செயல்பாடு நன்றாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். உட்கார்ந்து செய்யும் பிராணாயாமத்தை விட, சுறுசுறுப்பாக நடப்பது நுரையீரலுக்கு நல்லது என்று சொன்னால், பிராணா யாமம் தேவையில்லையா என்று கேட்பார்கள். பிராணாயாமம் மட்டும் செய்வதால் பலன் முழுமையாகக் கிடைக்காது. ஒன்று பிராணாயாமம் செய்து விட்டு, சுறுசுறுப்பாக நடக்க வேண்டும். சுறுசுறுப்பாக 20 நிமிடங்கள் நடந்த பின் பிராணாயாமம் செய்யலாம். அப்போது தான் நுரையீரலுக்கு முழுமையாக ஆரோக்கியம் கிடைக்கும். டாக்டர் சீனிவாஸ் ராஜகோபாலா, சுவாச மண்டல சிறப்பு மருத்துவ ஆலோசகர், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை 80564 74138, 044 6115 1111drsrinivas_ra@apollohospitals.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்