மனசே மனசே... குழப்பம் என்ன!
இதுவரை, அரவிந்த், 10 பள்ளிகள் மாறி இருப்பான். பள்ளி மட்டுமல்ல, பாடத் திட்டமும் மாறி விட்டது. சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் படித்த அவனை, மெட்ரிக் பாடத்திட்டத்திற்கு மாற்றி விட்டனர். இவ்வளவு குழப்பங்களுக்கும் பின்னால் இருந்த ஒரே காரணம், என்ன செய்தாலும், அவன் சரியாக படிக்க மாட்டேன் என்கிறான் என்பது தான். கடைசியில், வீட்டில், தனியாக ஒரு டீச்சர் வைத்து, பள்ளி நேரம் போக, மற்ற நேரங்களில், 'டியூஷன்' வேறு நடந்தது. அப்படியும், பெற்றோர் எதிர்பார்த்தது போல, அரவிந்தால் படிக்க முடியவில்லை. அவன் பெற்றோர், நன்றாகப் படித்தவர்கள். தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். அரவிந்த் ஒரே பையன். என்ன செய்வது எனத் தெரியாமல், டாக்டரிடம் அழைத்துச் சென்று, பல, 'டெஸ்ட்'டுகள் எடுத்தனர். தொடர்ந்து, மருத்துவமனைக்கு சென்ற போது, அரவிந்தை கவனிக்கும் நர்ஸ் ஒருவர், அவனின் பிரச்னையைப் புரிந்து, அவன் பெற்றோரிடம், 'நீங்கள் ஒரு மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்றால் நல்லது' எனச் சொல்லி, என் தொடர்பு எண்ணைக் கொடுத்திருக்கிறார்.அரவிந்திடம் பேசினேன். அவனுக்கு படிப்பில் ஆர்வமே இல்லை. 'லேர்னிங் டிஸ்எபிலிட்டி' எனப்படும், கற்றலில் குறைபாடு அவனுக்கு இருந்தது. அவனால், கவனமாகப் பார்த்து, எழுத்துக்களை படிக்க முடியவில்லை. எழுத்துக்களைப் படிக்க சிரமப்படும்போது, படிப்பில் இயல்பாகவே ஆர்வம் இருக்காது. கற்றலில் குறைபாடு என்பதில், பல வகைகள் உள்ளன. சில குழந்தைகளுக்கு, எழுத்துக்களை வாசிப்பதில் சிரமம் இருக்கும். சிலருக்கு நெருக்கமாக வரிகள் இருந்தால், ஒரு வரியை படிக்க முடியும்; அடுத்தடுத்த வரிகளை விட்டு விடுவர். இன்னும் சில குழந்தைகளால், சின்ன சின்ன வார்த்தைகளைக் கூட, மனதில் வைத்துக் கொள்ள முடியாது. பொதுவாக, கற்றலில் குறைபாடு உள்ளதா என்பதை, ஐந்து வயதிலேயே கண்டுபிடிக்கலாம். ஆனால், பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், குழந்தைகளின் ஆற்றலை கவனித்துப் பார்ப்பதில்லை. பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு எனும்போது, சரியாக படிக்காத குழந்தைகளை வடிகட்டுகின்றனர். 10 வயதிற்கு மேல், பெற்றோர், ஆசிரியர் எதிர்பார்ப்பதைப் போல, மதிப்பெண் பெறாவிட்டால், அந்த சமயத்தில், பல வழிகளிலும் குழந்தையை மதிப்பெண் பெற வைக்க முயற்சிக்கின்றனர். 'என்ன எட்டாங் கிளாஸ் படிக்கிற, இதுகூடவா தெரியலை... எத்தனை தடவை சொல்லிக் கொடுப்பது' போன்ற கடுமையான வார்த்தைகள், குழந்தைகளை இன்னும் தன்னம்பிக்கை இழக்கச் செய்கின்றன.அரவிந்த் விஷயத்திலும், அது தான் நடந்திருக்கிறது. இது போன்ற குழந்தைகள், எந்த மாதிரியான கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பதைக் கண்டறிய, பிரத்யேக வழிமுறைகள் உள்ளன. இவர்களின் திறனை சோதிப்பதற்கென்று, கேள்வித் தாள் இருக்கிறது. அதை வைத்து, அரவிந்தை சோதித்ததில், அவனுக்கு சில விஷயங்கள் புரியவே இல்லை. குறிப்பாக, புதிதாக கற்றுக் கொள்ளும் விஷயங்களை புரிந்து கொள்ள, மிகவும் சிரமப்பட்டான். ஐந்து வயதில் இந்தக் குறைபாடு தெரிந்திருந்தால், படங்களைக் காட்டி, அந்த வயதிற்கேற்ற விஷயங்களை கற்றுத் தரலாம். ஆனால், 13 வயதில் எந்த விஷயம் அவனுக்குப் புரிய வில்லையோ, அதைப் பொறுமையாக அவன் புரிந்து கொள்ளும் வரை, திரும்பத் திரும்ப சொல்லித் தர வேண்டும்; அதுதான் முக்கியம். இந்தக் குழந்தைகளுக்கென்று பிரத்யேக விதங்களில் கற்றுத் தர வேண்டும். அரவிந்திற்கு, சில வாரங்களாக, நானே நேரடியாகச் சென்று கற்றுத் தருகிறேன். நல்ல முன்னேற்றம் தெரிகிறது.10 வயதிற்கு மேல், பெற்றோர், ஆசிரியர் எதிர்பார்ப்பதைப் போல, மதிப்பெண் பெறாவிட்டால், அந்த சமயத்தில், பல வழிகளிலும் குழந்தையை மதிப்பெண் பெற வைக்க முயற்சிக்கின்றனர்எ. செந்தில் குமார்,மனநல ஆலோசகர், சென்னை.skumarpsy@gmail.com