டாக்டரைக் கேளுங்கள்
கலைவாணி, மதுரை: குழந்தையின்மை பிரச்னைக்கு ஹோமியோபதியில் தீர்வு இருக்கிறதா?குழந்தையின்மை பிரச்னைக்கு மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், தைராய்டு, நீர்க்கட்டிகள், வெரிகோசில், விந்தணுக்கள் குறைபாடு, பூச்சிக் கொல்லிமருந்துகள் கலந்த உணவு சாப்பிடுவது என்று பல காரணங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்த உணவுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் விந்தணுக்கள் குறைவு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், தைராய்டு, சினைப்பை நீர்க்கட்டிகள், மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றால் ஏற்படும் குழந்தையின்மை பிரச்னையை சரிசெய்ய முடியும். இயற்கையான முறையில் கருத்தரித்து குழந்தைப்பேறு அடைய முடியும். இதற்கு பக்கவிளைவுகள் இல்லாத ஹோமியோபதி மருந்துகள், திரவங்கள் உள்ளன. இவ்வாறான மருந்துகள் மூலம் ஆண்மைக்குறைவு, பெண்மைக் குறைவை சரிசெய்ய முடியும். விந்தணுக்கள் எண்ணிக்கையை கூட்டவும், வீரியமிக்க விந்தணுக்கள், கருமுட்டைகள் வெளிவரவும் உதவ முடியும். ஹோமியோபதி மருந்துகள் மூலம் குழந்தை இல்லாத தம்பதியருக்கு இயற்கை முறை கருத்தரிப்பு சாத்தியமே.- டாக்டர் என்.ஆர்.ஏ.மதுமிதா, ஹோமியோபதி மருத்துவ நிபுணர், மதுரை.சி.பார்வதி, ராமநாதபுரம்: எனக்கு 48 வயதாகிறது. விவசாய கூலி வேலை செய்கிறேன். எனது இடது கால் திடீரென அசைக்க முடியாமல் செயலிழந்தது. நாட்டு வைத்தியரிடம் காண்பித்தும் சரியாகவில்லை. நிரந்தர தீர்வு என்ன?அதிக பழு துாக்குவது, நீண்ட நேரம் நின்று வேலை செய்வதால் மூட்டு வலி வரும். இரு மூட்டுகளுக்கும் இடையே உராய்வு தன்மை இருக்கும் போது கால்களை எளிதாக அசைக்க முடியும். வயதாகும் போது அந்த பகுதியில் வழுவழுப்பு தன்மை குறையும். கால் செயலிழக்கும். 40 வயது கடந்தவர்கள் மூட்டு எலும்புகள் நன்றாக உள்ளதா என்பது குறித்த பரிசோதனை செய்ய வேண்டும்.கால்கள் செயலிழந்த நிலையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வது கட்டாயம். மூட்டு வலி என்றவுடன் பெரும்பாலானோர் நாட்டு வைத்தியம் முறையில் சிகிச்சை எடுக்கின்றனர். அதில் கட்டப்படும் கட்டுகளால் தோல் சேதமடையும். அதன்பின் அறுவை சிகிச்சை செய்வது கடினமாகும்.- டாக்டர் அருள் மோகன், உதவி பேராசிரியர், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை.குமார், சிவகாசி: எனக்கு 45 வயதாகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன். வைரஸ் காய்ச்சலாக இருக்குமோ என அச்சமாக உள்ளது. தொற்றுநோய் போல பரவுமா?காலநிலை மாற்றத்தில் காய்ச்சல் வருவது இயல்புதான். உடனேயே துவக்கத்திலேயே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும். எப்போதும் சுட வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும். தொடர்ந்து இருமல் வரும்போது காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.- டாக்டர் அய்யனார், அரசு மருத்துவமனை, சிவகாசி