உள்ளூர் செய்திகள்

இயற்கை வைத்தியம் வரம்

வெயில், மழை, குளிர் என, மாறி மாறி, மனித உடலை சீண்டும் காலநிலையில், சளி, காய்ச்சல் என்பது, பல இடங்களில் பார்க்க முடிகிறது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை சளி, காய்ச்சலால் அவதிப்படுவது, தவிர்க்க முடியாததாகி விட்டது.இதற்கு, சில இயற்கை வைத்திய முறைகள் கைவசம் உள்ளன. குழந்தைகளுக்கு, மார்பில் தேங்கியுள்ள சளியை போக்க, கற்பூரவள்ளி இலையின் சாற்றில், சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுப்பதன் மூலம், சளித் தொல்லையில் இருந்து விடுபட முடியும்.தொடர் இருமல் இருந்தால், வெங்காயத்தை பொடியாக நறுக்கி, தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின், அதை மெல்லிய துணியில் வடிகட்டி, வெங்காய சாற்றில், சர்க்கரை சேர்த்து பாகுபதமாக காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்த வெங்காய பாகை, ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் உட்கொள்ள இருமல், விடை பெறும்.கைகொடுக்கும் சிற்றரத்தை: உடல் சூடால் ஏற்படும் இருமல், வறட்டு இருமல் நீங்க, சீரகத்தை தூள் செய்து, அரை தேக்கரண்டி அளவுக்கு, வெந்நீரில் கலந்து, அதில் தேன் சேர்த்து குடித்தால், வறட்டு இருமல் விலகும். மிளகுத் தூள், பனை வெல்லத்தை சேர்த்துப் பிசைந்து, ஒரு சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால், உடல் சூடால் ஏற்படும் இருமல் சரியாகும்.தொடர் இருமலில் இருந்து விடுபட, 10 கிராம் அளவுக்கு சிற்றரத்தையை உடைத்து, நீர் விட்டு காய்ச்சி, கஷாயமாக்கி, அதோடு, இஞ்சி சாறு கலந்து உட்கொள்ள வேண்டும். நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன், ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன், சிறிது மிளகு தூள் கலந்து குடித்தால், இருமல் தணியும்.வறட்டு இருமல் நீங்க, சிறிதளவு பசும்பாலுடன், அரைத் தேக்கரண்டி மிளகு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில், சிறிதளவு பனங்கற்கண்டை சேர்த்துக் கலக்கி குடிக்க வேண்டும்; தொடர்ந்து மூன்று நாள் பருகினால், வறட்டு இருமல் குணமாகும்.அகத்தை சீர் செய்யும்: பொதுவாக எந்த வகையான இருமலையும் குணப்படுத்தும் ஆற்றல், சீரகத்துக்கு உண்டு. 10 கிராம் சீரகத்தை சுத்தம் செய்து, லேசாக வறுத்தெடுத்து, அம்மியில் வைத்து தூள் செய்து, அது எந்தளவில் இருக்கிறதோ, அதே அளவு, கற்கண்டை தூள் செய்து அத்துடன் கலந்து, காலை, மாலையில், அரை தேக்கரண்டி சாப்பிட்டு, அதன் பிறகு, வெந்நீர் குடித்தால் இருமல் குணமாகும்.ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால், இரண்டு தேக்கரண்டியளவு மிளகை வறுத்து, அதில் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். பின், ஒரு பகுதியை சர்க்கரை சேர்த்துக் காலையிலும், மறுபகுதியை மாலையிலும் குடித்தால், ஜலதோஷ இருமல் குணமாகும். இந்த, இயற்கை மருத்துவத்துக்கு காய்ச்சலை குணப்படுத்தும் ஆற்றலும் உண்டு.நெருங்காது காய்ச்சல்: காய்ச்சல் ஆரம்பித்தவுடன், மிளகுக் கஷாயம் குடித்தால், காய்ச்சலை விரட்டி விடும். நடுங்க வைக்கும் குளிர் காய்ச்சலில் அவதிப்படுவோர், சிறிது மிளகை தட்டிப் போட்டு, அதில் பனை வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர் விட்டு, அதை சுண்டச் செய்து, கஷாயமாக்கி குடித்தால் குணமாகும். வல்லாரை இலையுடன், மிளகு, துளசி இலையை சம அளவு எடுத்து, அதை மெழுகு பதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி, சுடுநீரில் அருந்தினால், காய்ச்சல் பக்கம் நெருங்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !