உள்ளூர் செய்திகள்

தண்ணீர் மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம்!

தண்ணீர் இல்லாமல், ஒரு வாரம் கூட, மனிதனால் உயிர் வாழ முடியாது. மனிதனின் முக்கிய உணவு தண்ணீர் தான். சாப்பாடு இல்லாமல், ஒரு மாதம் கூட, இருக்க முடியும். இதுவே வாழ்க்கைக்கும், தண்ணீருக்கும் உள்ள பிரிக்க முடியாத பந்தமாகும். ஒரு சராசரி மனிதன், தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீரை, உடலிலிருந்து வெளியேற்றுகிறான். உடலில் இருந்து தண்ணீர் வெளியேறும் அளவுக்கு தக்கபடி, சுத்தமான தண்ணீரை குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீரை குடிக்காமல் இருக்கும் போது, உடலிலுள்ள செல்கள் தண்ணீரின் தேவைக்காக ரத்தத்தை நாடுகின்றன. உடனே இதயம் வேகமாக துடிக்கத் துவங்குகிறது. இதனால் சிறுநீரகம் ரத்தத்தைத் தூய்மையாக்கும் செயலை, முழுமையாகச் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. எனவே சிறுநீரகத்தின் பணி, லிவர் போன்ற மற்ற உறுப்புகளுக்குத் தாவுகிறது. உடலே ஒரு அழுத்தமான சூழலுக்குத் தள்ளப்படுகிறது. இத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வு, சுத்தமான தண்ணீரை அவ்வப்போது குடிப்பதே. தினமும் காலையில் வெறும் வயிற்றில், ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பது, பெரும்பாலான நோய்களைக் குணமாக்கும். தினசரி குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லையென்றால், பல வியாதிகள் வர வாய்ப்புள்ளது. நீரினால் ஏற்படும் நோய்களை, நீரினால் பரவும் நோய்கள், நீரை அடிப்படையாக கொண்ட நோய்கள், நீருடன் தொடர்புடைய நோய்கள், நீர் பற்றாக்குறையால் ஏற்படும் நோய்கள் என, நான்கு வகையாக பிரிக்கலாம். நீரினால் நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணம், மனித மலம், குடிநீரில் கலந்து விடுவது தான். காலரா மட்டுமல்ல, டைபாய்டு, போலியோ, கல்லீரல் அழற்சி போன்ற பல நோய்கள் இப்படித்தான் பரவுகின்றன. இதில் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற நோய்கள், மரணத்தை ஏற்படுத்தக்கூடியவை. தடுக்கும் வழிகள்: மலம் குடிநீரில் கலக்காமல் தடுப்பது திறந்தவெளிகளில் மலம் கழிக்காமல் இருப்பது. அனைவரும் நவீன கழிவறைகளை உபயோகிப்பது. இதனால் தான் கழிவறை கட்ட, அரசு நிதியுதவி அளிக்கும் திட்டமெல்லாம் வைத்திருக்கிறது. கழிவு நீரும், குடிநீரும் கலக்காமல் தடுப்பது, நீரில், குளோரின் கலப்பது, நீரை காய்ச்சி, வடிகட்டி அருந்துவது, கைகளை நன்றாக கழுவுவது ஆகிய நடவடிக்கைகள் வாயிலாக, நோய் தாக்குதலை தடுக்கலாம். உடலில் ஏற்படும் நோய்களில், 75 சதவீதம் குடிநீரால் தான் வருகிறது. வாந்தி, பேதி, டைபாய்டு, காலரா போன்றவை, தண்ணீர் மூலம் தான் பரவுகின்றன. ஐஸ் வாட்டர் குடிக்க விரும்புபவர்கள், காய்ச்சிய நீரை குளிர்ப்பதனப் பெட்டியில் வைத்து, பயன்படுத்த வேண்டும். தண்ணீரை வெறுமனே சூடுபடுத்திக் குடிக்காமல், நன்கு கொதிக்க வைத்தால் தான் அதிலுள்ள கிருமிகள் மடியும். குடிநீர் தான் மனித உடலின் ஆதாரம். அந்த நீரை காய்ச்சிக் குடித்து, நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்