காக்கும் கரங்கள் தடுப்பு மருந்துகள்!
நம் நாட்டின் தற்போதைய நிலை என்ன?கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, படிப்படியாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று பரவ துவங்கியது முதல் மத்திய - மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் வாயிலாக, தொற்றை கட்டுக்குள் வைப்பதில் கவனம் செலுத்தி வந்துள்ளன. துவக்கத்தில் இருந்தே, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தடுப்பு மருந்து தயாரித்து, 130 கோடி மக்களுக்கு போட வேண்டும் என்பதில், பிரதமர் நரேந்திர மோடி உறுதி யாக இருந்தார். தற்போது, அது செயல் வடிவம் பெற்று, 'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பு மருந்துகள் படிப்படியாக போடப்படுகின்றன.இந்த ஆண்டு இறுதிக்குள், 30 கோடி மக்களுக்காவது தடுப்பு மருந்து போட்டு விட வேண்டும் என்ற இலக்கு உள்ளது. பெருந்தொற்று ஏற்பட்டால், நம் மக்களுக்கு மட்டும் தடுப்பு மருந்து தருவது போதாது; அண்டை நாட்டு மக்களுக்கும், பாதுகாப்பு தர வேண்டும் என்பதும், பிரதமரின் விருப்பம் அதனடிப்படையில், 1 லட்சத்து, 50 ஆயிரம் டோஸ் கோவாக்சின், பூட்டான் நாட்டுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. மாலத்தீவுக்கு, 1 லட்சம் டோஸ்; நேபாளத்திற்கு, 10 லட்சம் டோஸ்; வங்கதேசத்திற்கு, 20 லட்சம் டோஸ்; மியான்மருக்கு, 15 லட்சம் டோஸ்; சேஷெல்ஸ், 50 ஆயிரம் டோஸ்; மொரீசியஸ், 50 ஆயிரம் டோஸ் என, இலவசமாக அனுப்பப்பட்டு உள்ளது.அடுத்ததாக இலங்கை, ஆப்கானிஸ்தான் என்று அண்டை நாடுகளுக்கு மட்டும், 1 கோடி டோஸ், தடுப்பு மருந்து அனுப்பும் திட்டம் உள்ளது. வளர்ந்த நாடுகள் என்று சொல்லும் பல நாடுகளும், தொற்று பரவல் ஏற்படும் நேரத்தில், தங்கள் பிரச்னையை மட்டும் பெரிதாக நினைக்கும் போது, நம் நாடு அண்டை நாட்டின் நலனிலும் அக்கறையுடன் செயல்படுகிறது.நம் நாட்டின் தடுப்பு மருந்துக்கு, உலகளவில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. வர்த்தக அடிப்படையில் பிரேசில், மொராக்கோ ஆகிய நாடுகள், தடுப்பு மருந்து ஏற்றுமதிக்கு ஒப்பந்தம் போட்டு உள்ளன. முதல் கட்டமாக, இரு நாடுகளுக்கும், தலா, 20 லட்சம் டோஸ் அனுப்பியுள்ள நிலையில், இங்கிலாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளும், நம் நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்தை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. ஆப்பிரிக்க நாடான டொமினிக்கா, முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்தை, தலா, 70 ஆயிரம் டோஸ் அனுப்பி உதவுமாறு, அந்நாட்டு பிரதமர் ரூஸ்வெல்ட் கேரிட், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தென் ஆப்ரிக்கா, கென்யா, நைஜீரியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றவையும், நம் நாட்டு தயாரிப்பை வாங்க விருப்பம் தெரிவித்து உள்ளன.ஏன் இந்த அளவு ஆர்வம்?நம் நாட்டில் தயாராகும் இரண்டு மருந்துகளும் பாதுகாப்பானவை; அடுத்தது, குறைந்த விலையில் வாங்க முடிகிறது. கொரோனா தொற்று ஆரம்பித்த நாள் முதல், உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், தடுப்பு மருந்து தயாரிப்பில் முன்னிலையில் உள்ள, நம் நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, தயாரிப்பு பணியை துவக்கின. உலக தடுப்பு மருந்து தேவையில், 50 சதவீதம் நம் நாட்டில் தயாரிக்கப்படுகிறது. 170 நாடுகளுக்கு நம் நாட்டு தயாரிப்பு ஏற்றுமதி ஆகிறது. புனே சீரம் நிறுவனம், பல்வேறு தொற்றுகளுக்கு, 1.5 கோடி டோஸ் தடுப்பு மருந்தை, ஒவ்வோர் ஆண்டும் தயாரித்து, ஏற்றுமதி செய்கிறது. உலகின் எந்த முன்னணி நிறுவனமும், இந்த அளவு தயாரிப்பதில்லை.நம் நாட்டின் நவீன மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை வியந்து பாராட்டியுள்ள உலக சுகாதார மையம் உட்பட பல்வேறு சர்வதேச நிறுவன தலைவர்களும், 'கோவிஷீல்டு, கோவாக்சின்' இரண்டும் கொரோனாவை எதிர்கொள்ள நம்பிக்கை தருவதாக கூறியுள்ளனர்.உலக மக்கள் அனைவரையும், கொரோனா தொற்றில் இருந்து காக்க தயாராக உள்ளதாக, பிரதமர் மோடியும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.