உள்ளூர் செய்திகள்

கேள்வி - பதில்

ஆ.யோகேஷ், திண்டுக்கல்: சொல்ல தயக்கமாக இருக்கிறது. நான் என் மனைவியை ஒரு தவறான வார்த்தையால் திட்டினேன். அதையே என் மகனும் சொல்கிறான். என்ன செய்வது; குழந்தைகளின் முன், பெற்றோர் செய்யக் கூடாத காரியங்கள் என்னென்ன?குழந்தைகள் முன்பாக, மற்றவரை அடித்தால், அவர்களின் மனதில் வன்முறை எண்ணத்தை அது வளர்க்கும். மற்றவர்கள் முன்பாக, குழந்தையின் குறைகளை பட்டியல் இடக்கூடாது. அப்படி செய்தால், அவர்களின் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் முன்பாக, அசிங்கமான வார்த்தைகளை உபயோக படுத்தக் கூடாது. அப்படி செய்தால், குழந்தைகளும் இயல்பாக பயன்படுத்த துவங்குவர். குழந்தைகள் தங்கள் கருத்துக்களை சொல்ல வந்தால், காது கொடுத்து கேட்க வேண்டும். 'பெரிய மனுஷன் மாதிரி பேசாதே' என்று அதட்டி ஒதுக்கினால், அவர்கள் சிந்தனை பாதிப்புக்கு உள்ளாகும்.து.ஜெயக்குமார், குழந்தைகள் மனநல மருத்துவர். சென்னைஎஸ்.திவ்யா, பார்வதிபுரம், சென்னை: நான் ஆறு மாத கர்ப்பணி; தூக்கம் சரிவர இல்லை. காரணம் என்ன?பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில், குடல் இயக்கத்தில் பிரச்னை ஏற்படுவது இயல்பு என, மருத்துவர்கள் கூறுகின்றனர். கர்ப்ப காலத்தில், உடல் எடை கூடுவதால் ஏற்படும் அழுத்தத்தால், அவ்வப்போது, இயல்புக்கு மாறாக சிறுநீர் வரலாம். இதனாலும், தூக்கம் பாதிக்கப்படலாம்.கர்ப்பம் தரித்ததும், பெண்களுக்கு குமட்டல் ஏற்படும். அப்போது, குடல் இயக்க திறனில், சிறிய குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், செரிமான பிரச்னை ஏற்படும். நெஞ்செரிச்சல், வாயு தொல்லை போன்ற உடல் உபாதைகளும் ஏற்படலாம். இதை தவிர்க்க காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும்; நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மாதாமாதம் குழந்தை வளர்ச்சியால், வயிறு பெரிதாகும்; அப்போது சிரமமின்றி படுக்க முடியாது; அதனாலும் தூக்கம் கெடும்.அ. சாந்தி, மகப்பேறு மருத்துவர், சென்னை.க.குருபிரசாத், மதுரை: எனக்கு வயது, 33. ஒருமுறை அலுவலகத்தில் மயங்கி விழுந்தேன். மருத்துவரிடம் சென்றபோது, உயர் ரத்த அழுத்தம் தான் காரணம் என்றார். உயர் ரத்த அழுத்தம் இருப்பதை எப்படி கண்டறிவது?சாதாரணமாக நினைத்து, புறக்கணிக்கும் ஓர் பிரச்னை தான் தலைவலி. ஒற்றைத் தலைவலி, தலைச்சுற்றல், மங்கலான பார்வை குறைபாடு போன்றவை, உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படக் கூடியவை தான்.மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, மிகவும் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், அதுவும் உயர் ரத்த அழுத்த அறிகுறி. சாதாரணமாக, சிறிது தூரம் நடந்தாலோ, எடையுள்ள பொருட்களை தூக்கினாலோ, மாடி படிக்கட்டுகள் ஏறினாலோ, அளவுக்கு அதிகமாக மூச்சு வாங்கினாலோ, உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகவே கொள்ள வேண்டும். மயக்க உணர்வு, எதிலும் கவனம் செலுத்த முடியாமை, அளவுக்கு அதிகமான சோம்பேறித்தனம் போன்றவையும், உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறியே.ச. ராஜேந்திரன், பொது மருத்துவர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !