உள்ளூர் செய்திகள்

உறவுமேலாண்மை: இப்படியும் ஒரு அப்பா

கல்லுாரி மாணவி அவள். 'யாருடனும் என்னால் இயல்பாகப் பழக முடியாது' என்ற பயம் தான் அவளின் பிரச்னை.காரணம் அவளின் அப்பா. நினைவு தெரிந்த நாளிலிருந்து, அவளை வளர்த்த விதம் அப்படி.அவளின் அப்பா நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்; வசதிக்கு குறைவில்லை. ஆனால், அவர் இயல்பான அப்பா கிடையாது. பயங்கர, 'ஸ்ட்ரிக்ட்!' 1950 - 60களில் இருந்த அப்பாக்களைப் போன்றவர். விறைப்பாக, கண்டிப்புடன் தான் எப்போதும் இருப்பார். காலையில் எழுந்ததில் இருந்து இரவு துாங்கப் போகும் வரை, எல்லாவற்றிற்கும், 'ரூல்ஸ்' கடைபிடிப்பார். இவளின் அம்மா, கணவருக்கு கட்டுப்பட்டவர் என்பதால், அவரின் பேச்சை மீறி எதுவும் செய்வதில்லை.இப்படி ஒரு மிலிட்டரி அப்பா, அவருக்கு கட்டுப்பட்ட அம்மாவிற்கு நடுவில், ப்ரீ.கே.ஜி., வகுப்பில் சேர்ந்த நாளிலிருந்து, விதிகளை மட்டுமே வீட்டில் கடைபிடித்து வளர்க்கப்பட்டாள். வீட்டிற்கு நண்பிகள் வரக்கூடாது. யார் வீட்டிற்கும் போகக் கூடாது. 'பர்த்டே பார்ட்டி, கெட் டு கெதர்' என்று எதுவும் கிடையாது. நட்போடு, அப்பா எப்போதும் இவளிடம் பேசியதே கிடையாது. ஹைஸ்கூலுக்குப் போன போதும், யாருடன் நெருங்கி பழகியதில்லை என்றாலும் சக மாணவியர், அப்பாவுடன் வெளியில் செல்வது, சினிமா பார்ப்பது, அப்பாவோடு முந்தின நாள் நடந்த விவாதம் என்று, நட்போடு இருக்கும் அப்பாக்களைப் பற்றி பேசுவதைக் கேட்டபோது, 'இப்படியும் அப்பாக்கள் இருப்பார்களா!' என்று, வியப்புதான் முதலில் தோன்றியது. ஒரு தோழியைப் போல, மகளை நடத்தும் அப்பாக்களைப் பற்றி தொடர்ந்து கேட்டதில், 'நம் வாழ்க்கையில், எவ்வளவு பெரிய மகிழ்ச்சியை இழந்திருக்கிறோம்' என்று தோன்றி, இதுவே மனச் சோர்வைத் தர, சரியாக சாப்பிடாமல், துாங்காமல், வெறுப்புடனேயே இருந்தாள். தற்செயலாக ஒரு நாள் அவளின் வீட்டிற்கு வந்த பெரியம்மாவிடம், அவளின் பிரச்னையை சொல்ல, அவர் தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். இயல்பாக அவளுடன் பேச ஆரம்பித்தார். அப்போது, கண்டிப்பான அப்பாவால், தான் இழந்த மகிழ்ச்சியை சொல்லி இருக்கிறாள்! இந்த நிலையில் தான், என்னிடம் அழைத்து வந்தார். அதாவது, மிகவும் பழமையான சிந்தனையுள்ளவர் அவரின் அப்பா. இப்படி தான் வளர வேண்டும், இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று, இம்மி பிசகாமல், தன் பிள்ளைகளை வளர்த்திருக்கிறார். இப்போது, அனைவரும் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கின்றனர். இன்றைக்கு இருக்கும் நவீன காலத்திற்கும், தன் அப்பா, கடைபிடித்த வழியில் நடந்தால் தான், பிள்ளைகள் ஒழுக்கமாக வளருவர்' என்பது அவரின் நம்பிக்கை. ''இத்தனை காலமாக தான் பின்பற்றி வந்த நம்பிக்கைகள், நடத்தைகளில் இருந்து அவ்வளவு சுலபமாக அவரால் வெளி வர முடியாது. என்றாலும், கடந்த ஓராண்டாக அவரிடம் மெதுவாகப் பேசி, நல்ல ஒழுக்கத்தோடு, நம்பிக்கைகளோடு பெண் வளர வேண்டும் என்று, நினைப்பதில் தவறில்லை.''அதற்காக நட்போடு அவளிடம் பேசக்கூடாது என்பதில்லை. வீட்டைவிட்டு வெளியில் சென்றால், ஆயிரம் அனுபவங்களை குழந்தைகள் சந்திக்கின்றனர். அதில் நல்லதும் உண்டு, கெட்டதும் இருக்கிறது. நீங்கள் நட்போடு, இயல்பாக பேசினால் தான், பெற்றோரிடம் எல்லாவற்றையும் குழந்தை பகிர்ந்து கொள்ளும். நம், அவர்களை வழி நடத்த முடியும்,'' என்றேன்.தற்போது, 'சாப்பிட்டியாம்மா? காலேஜில் என்ன நடந்தது?' என்று, மகளிடம் கேட்கும் அளவிற்கு இறுக்கத்தை தளர்த்தி இருக்கிறார்.டாக்டர் வி.ஜெயந்தினி, மனநல சிறப்பு மருத்துவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !