உள்ளூர் செய்திகள்

ஞானப் பற்களால் ஏற்படும் பாதிப்புகள்!

மேல் தாடை மற்றும் கீழ் தாடைப் பகுதிகளில் கடைசியாக அமைந்துள்ள பற்கள், 'விஸ்டம் டீத்' எனப்படும் ஞானப்பற்கள். மொத்தம் நான்கு ஞானப்பற்கள் உள்ளன. இந்த நான்கு ஞானப்பற்கள் 17 - 20 வயதுக்குள் முளைத்து அதன் இருப்பிடத்தை அடைந்து விட வேண்டும். நம் முன்னோர் இறைச்சி, பச்சை காய்கள் போன்ற அதிகமாக மெல்லக் கூடிய கடினமான உணவுகளை சாப்பிட்டனர். நாளடைவில் நாம் மென்மையான உணவுகளை அதிகமாக உட்கொள்ள துவங்கியதால் அதற்கு ஏற்ப தாடையின் பயன்பாடு குறைந்து அதன் அளவும் சிறியதாக மாற்றம் அடைந்து விட்டது. இந்த பரிணாம வளர்ச்சியின் காரணமாக, ஞானப்பற்கள் இடப் பற்றாக்குறையால் அதற்குரிய இடத்தில் நேராக முளைக்க இயலாத நிலையில், முழுதுமாக வெளியே வராமலோ அல்லது முழுதும் ஈறுகளுக்குள் புதைந்து விடவோ நேருகிறது. விளைவுகள் பாதியளவு அல்லது சாய்வாக முளைத்த ஞானப்பற்களை 'பிரஷ்' ஷால் சுத்தம் செய்வது மிகவும் கடினம். இதனால் பல் சொத்தை ஏற்பட்டு ஞானப்பற்கள் மற்றும் அருகில் உள்ள கடவாய் பற்கள் பாதிப்படையக் கூடும். மேலும் இவை அருகில் உள்ள கடவாய்ப் பல்லை இடித்து அவற்றை அரித்து விடும். பாதியளவு முளைத்த ஞானப்பற்களை சுற்றி அமைந்துள்ள ஈறு பகுதிகளில் சிக்கிக்கொள்ளும் உணவு துகள்கள், கிருமிகளை சுத்தம் செய்ய முடியாத காரணத்தால் அங்கு ஈறு பிரச்னை ஏற்பட்டு வீக்கம், வலி ஏற்படலாம். முறையாக வளர, போதிய இடம் இல்லாத காரணத்தால் இந்த ஞானப்பற்கள் அவற்றிக்கு முன் உள்ள பற்களைத் தள்ளி, முன் வரிசையில் அமைந்துள்ள பற்களில் பற்கூட்டத்தை ஏற்படுத்தக்கூடும்.மேலும் ஈறுகளுக்கு உள்ளே முழுமையாக புதைந்த ஞானப்பற்கள், கட்டிகள் உருவாக காரணமாக அமையலாம்.அறிகுறிகள்ஞானப்பற்கள் பொதுவாக எந்த அறிகுறியையும் விளைவிப்பதில்லை. ஆனால் அவற்றில் தொற்று ஏற்படும் போதோ அல்லது அருகில் உள்ள பற்கள் மற்றும் ஈறுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்போதோ, வலி முதலிய அறிகுறிகள் துவங்கும். மேலும் ஈறுகளில் வீக்கம், ஈறு வலி, ரத்த கசிவு, தாடையில் வலி, வீக்கம், வாய் துர்நாற்றம், விரும்பத்தகாத சுவை, வாயைத் திறப்பதில் கடினம், காது வலி முதலானவை ஏற்படலாம்.ஞானப்பற்களில் வலி, வீக்கம் இருந்தாலோ, பாதி மட்டும் முளைத்தாலோ அவற்றை எடுத்து விடுவதுதான் நிரந்தரத் தீர்வாகும். இந்த சிகிச்சை முறையானது வழக்கமான பல் அகற்றும் சிகிச்சை முறையைக் காட்டிலும் சற்று சவாலான சிகிச்சை முறையாகும்.ஆறு மாதத்திற்கு ஒருமுறை டாக்டரின் ஆலோசனையின்படி, 'எக்ஸ்ரே' எடுத்து பார்த்து, மேலே கூறிய அறிகுறிகளுடன் அருகில் உள்ள பற்களை பாதித்தால், அத்தகைய ஞானப்பற்களை உடனே எடுத்துவிடுவது தான் சிறந்த தீர்வாகும்.டாக்டர்.ஆர்.வி.அபராஜிதா,வேர் சிகிச்சை சிறப்பு பல் மருத்துவர்,கல்பாக்கம். 97919 06962drrvaparajitha@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்