நூறு வயது வரை வாழ என்ன செய்ய வேண்டும்?
'சர்க்கரை கோளாறால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது' என்று சொன்னால், யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை; அதேநேரம், தங்கள் குடும்பத்தில், ஒருவருக்கு சர்க்கரை கோளாறு இருப்பது உறுதியானால், அதீத பயம், பதற்றத்துடன், அந்த செய்தியை எதிர்கொள்கின்றனர்.'இனி, பிடித்த உணவு எதையும் சாப்பிட முடியாது... இனிப்பை தொடக் கூடாதா... அவ்வளவு தான், வாழ்க்கையே முடங்கிப் போச்சு' என, பதறுகின்றனர்.'டாக்டர், என் வாழ்க்கையில் இனி லட்டு, பாதாம் அல்வாவை பார்ப்பதோடு நிறுத்தி விட வேண்டுமா... இனிப்பு சாப்பிட முடியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை...' என்று கேட்கின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய், 'சர்க்கரை இருக்கிறதா... மரண தண்டனை அறிவிப்பு வந்து விட்டது... இனி, அதை எதிர்கொள்ள வேண்டியது தான்...' என்று விரக்தியின் உச்சிக்கே செல்பவர்களையும் பார்க்கிறேன்.என்னுடைய, 40 ஆண்டு கால மருத்துவ அனுபவத்தில், இது போன்ற பயங்களையும், அர்த்தமற்ற நம்பிக்கைகளையும் விரட்ட, முயற்சி செய்து வருகிறேன். நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான கல்வியாளர் அவர். அவரின், 40வது வயதில், சர்க்கரை கோளாறு இருப்பது தெரிந்தது. என் தந்தை, மறைந்த டாக்டர் விஸ்வநாதனிடம் ஆரம்பத்தில் சிகிச்சை பெற்றார்.சில ஆண்டுகளுக்குப் பின், அவருக்கு மருத்துவ ஆலோசனை சொல்லும் பேறு எனக்கு கிடைத்தது. உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, டாக்டரின் ஆலோசனைகள், பரிசோதனைக்கு வர வேண்டிய நாட்கள் என்று, எதிலும் அவர் அலட்சியமாக இருந்ததேயில்லை; இன்று அவரின் வயது, 99. தற்போது வரை, நல்ல நினைவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். ரத்தத்தில், சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, ரத்த அழுத்தம், கொழுப்பு என்று, எல்லாமும் கட்டுக்குள் உள்ளது.நீண்ட காலம், சர்க்கரை கோளாறு இருந்தால் ஏற்படும் வேறு எந்த உடல் கோளாறுகளும், 60 ஆண்டுகளாக சர்க்கரை கோளாறுடன் வாழும் இவருக்கு இல்லை. 'இவர் ஏதோ அதிர்ஷ்டசாலி... இவர் ஒருவர் தான் இப்படி...' என்று நினைத்தால், அது தவறு. இவரைப் போல, சர்க்கரை கோளாறு உள்ள, 350 பேர், 90 வயதைக் கடந்தவர்கள். இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை தருகிறது.சர்க்கரை கோளாறு இல்லாதவர்களைக் காட்டிலும், கோளாறு இருப்பவர்கள், இன்னும் ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.