கார் விபத்தில் "சீட்பெல்ட் உயிர்காக்குமா?
காரில் சென்ற எனது நண்பர் சாலை விபத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூட்டினில் உள்ள பி.சி.எல்., என்ற இணைப்பு நார், பெமூர், பெல்விஸ் என்கிற எலும்புகளோடு, நெஞ்சிலும் அடிபட்டது. சிகிச்சைக்குப் பின் முன்னேற்றம் உள்ளது. சீட்பெல்ட் அணிந்து கார் ஓட்டியிருந்தால் இதை தவிர்த்திருக்கலாம் என்று டாக்டர் கூறுவது சரியா?சீட் பெல்ட் அணிந்தால் காயங்களை தவிர்த்து இருக்கலாம் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. தலைக்காயம், நெஞ்சில் காயம், முதுகெலும்பு மற்றும் தண்டுவடம் காயம், பெல்விஸ் எலும்பு முறிவது ஆகியவை உயிர்கொல்லும் காயங்கள். மேல்நாடுகளில் சீட் பெல்ட் கட்டாயப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டன. புள்ளியியல் விபரங்களின்படி, சீட் பெல்ட் அறிமுகப்படுத்தப்பட்ட பின், உயிர் கொல்லும் மோசமான காயங்கள் மிகவும் குறைந்துள்ளன. ஆதலால் வாகனம் ஓட்டும்போது, சீட் பெல்ட் அணிந்து ஓட்டுவது மருத்துவ ரீதியாக மிகவும் அவசியமானது.எனது வயது 24. இரண்டு ஆண்டுக்கு முன் கபடிவிளையாட்டில் முழங்கால் அடிபட்டு, இணைப்பு நார் அறுந்துள்ளது. தற்போது சில சமயங்களில் வலி உள்ளது. சமீபத்தில் கீழே விழுந்ததில், மெனிஸ்கஸ், ஏ.சி.எல்., என்ற உறுப்புகள் கிழிந்து இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதற்கு சிகிச்சை உண்டா?இரண்டு ஆண்டுக்கு முன்பு நடந்த கபடி விளையாட்டின்போதே, உங்கள் ஏ.சி.எல்., என்ற உறுப்பு அறுந்து போயிருக்கும். ஏ.சி.எல்., செயலற்று இருப்பவர்களுக்கு முழங்கால் நிலையற்ற தன்மை, மெனிஸ்கஸ் கிழிதல், ஆர்த்ரைட்டிஸ் வெகு விரைவில் உண்டாகும். ஏ.சி.எல்., கிழிதலுக்கு மாவுக்கட்டுப் போடுவது, பழங்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட தவறான சிகிச்சை. தற்போது ஏ.சி.எல்., கிழிதலை மூட்டு நுண்துளை சிகிச்சையில் சீரமைக்க முடியும். நீங்கள் இருவருடத்திற்கு முன்னே சீரமைத்து இருந்தால் பின் விளைவான மெனிஸ்கஸ் கிழிதலையும் தவிர்த்து இருக்கலாம். இப்போது மூட்டு நுண்துளை சிகிச்சை நிபுணரை கலந்து ஆலோசித்து உங்கள் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.நான், ஆறுமாதங்கள் முன் மூட்டுமாற்று சிகிச்சை செய்தேன். இப்போது வலி இல்லை. என் மூட்டை பாதுகாக்க மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ள வேண்டுமா?மூட்டுமாற்று சிகிச்சை செய்தபின், செயற்கை மூட்டை பாதுகாக்க பொதுவாக எவ்வித மருந்துகளும் எடுக்க தேவையில்லை. மூட்டுமாற்று சிகிச்சையின் நோக்கம் வலி நிவாரணிகள் இன்றி வாழ்க்கை நடத்துவதுதே. உடம்பின் வேறு பகுதிகளில், நோய் தொற்று வந்தால் அச்சமயத்தில் மூட்டினை கிருமிகளில் இருந்து பாதுகாக்க, முன்னெச்சரிக்கையாக டாக்டரிடம் ஆலோசனை பெற்று 2 நாட்களுக்கு மட்டும் ஆன்டிபயாடிக் மருந்து எடுத்துக் கொள்வது நல்லது.-டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,மதுரை. 93442-46436