உள்ளூர் செய்திகள்

சிறுநீர் நன்கு பிரிய உதவும் சுரைக்காய்!

சத்துள்ள உணவே, ஆரோக்கியத்திற்கான மருந்து என்ற முன்னோர்கள், காய்கறிகளையே அதிகம் உட்கொண்டனர். நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில், ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. கிராமப்புறங்களில் வீட்டு தோட்டங்களில் விளைவிக்கப்படும் சுரைக்காய், உடலுக்கு சத்து தருவதோடு மருத்துவ குணமும் நிறைந்தது. சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன. இதில், 96.1 சதவீதம் ஈரப்பதமும், 0.2 சதவீதம் புரதமும், 0.1 சதவீதம் கொழுப்பும், 0.5 சதவீதம் தாது உப்புகளும், 0.6 சதவீதம் நார்ச்சத்தும், 2.5 சதவீதம் கார்போஹைடிரேடும் உள்ளது. இத்தகைய சுரைக்காயை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்:உடல்சூடு தணியும்: உடல் சூட்டைத் தணிக்க, சுரைக்காயை உணவில் அதிகம் சேர்க்கலாம். உடல் சூட்டை தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும் சுரைக்காயை பயன்படுத்தி, கோடை காலத்தை தைரியமாக எதிர்கொள்ளலாம். உடலுக்கு புத்துணர்ச்சி: சமைத்த சுரைக்காய் சிறுநீரை நன்கு பிரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி தந்து உடல் உறுதியை புதுப்பிக்க, இக்காய் பயன்படுகிறது. சில சமயங்களில், சிறுநீர் வெளியேறாமல் மீண்டும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு, உடலுக்கு பலவகையான இன்னல்களை ஏற்படுத்தும். இந்த நிலையை போக்கி, சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் உதவுகிறது. எனவே, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை ரசத்தையும் சேர்த்து அருந்தினால், படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். நாவறட்சி நீங்கும்: சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், இது தாகத்தை கட்டுப்படுத்தும். கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும், வறுத்த உணவு வகைகளையும் சாப்பிட்டவர்களுக்கு, அதிகமாய் தண்ணீர் தாகம் எடுக்கும். வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும், இதே போன்ற பிரச்னை ஏற்படுவதுண்டு. இவர்கள் அனைவருக்கும் ஏற்படும், நாக்கு வறட்சியை சுரைக்காய் நீக்கி விடுகிறது. கண்நோய்கள் நீங்கும்: ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய், இவற்றை நீர் விட்டு அரைத்து, சாறு பிழிந்து வாரம் இருமுறை, காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்படும். சுரைக்காயின் சதையை சிதைத்து, உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச சுட்டு சாம்பலாக்கி, தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும். இவ்வளவு நன்மைகள் தரும் சுரைக்காயை, வாதநோய், தொப்பை உள்ளவர்கள், மாதவிடாய் காலங்களில் பெண்களும், சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !