UPDATED : ஏப் 18, 2024 04:25 PM | ADDED : ஏப் 18, 2024 02:04 PM
சென்னை வீக்எண்ட் கிளிக்கர்ஸ் அமைப்பானது சுமார் 2 ஆயிரம் புகைப்படக் கலைஞர்களை உறுப்பினர்களைக் கொண்டதாகும்.உறுப்பினர்கள் எடுத்த புகைப்படங்களை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில் கண்காட்சியாக வைத்துள்ளனர்.இது இவர்களின் பத்தாவது கண்காட்சியாகும்.
இந்த கண்காட்சியில் பெட்டக்குறும்பர் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த ரவிக்குமார் 'என் யப்பி மேதி' (அவரது பழங்குடியின மொழியில் 'என் அம்மா மேதி' என்பது பொருளாகும்.)என்ற தலைப்பில் தனது அம்மாவைப் பற்றி எடுத்த புகைப்படங்களை கண்காட்சியாக வைத்துள்ளார்.
இது குறித்து ரவிக்குமார் கூறியதவாது..மைசூர்-ஊட்டியை இணைக்கும் சாலையில் அமைந்துள்ள தேசிய பூங்காவின் ஒரு பகுதியான மசினகுடி இயற்கை மாறாமலிருக்கும் பூமியாகும்.இங்குள்ள பழங்குடியின மக்களில் நாங்களும் ஒருவர்.சிறுவயதிலேயே தந்தையைப் பிரிந்த என்னையும் என் சகோதரிகள் இருவரையும் என் தாய் மேதிதான் சாணம் தட்டியும்,காட்டில் விறகு பொறுக்கியம்,கூலி வேலைக்கு சென்றும் காப்பாற்றினார் தனது பலவித சிரமங்களுக்கு நடுவிலும் எங்களை படிக்கவைத்தார்.நான் பிளஸ் டூ படிக்கும் வரை வீட்டிற்கு மின்சாரமே கிடையாது,இருந்தாலும் மண்எண்ணெய் திரிவிளக்கில் எங்களை படிக்கவைத்ததுடன் வெளியூர் அனுப்பி கல்லுாரியிலும் என்னை படிக்கவைத்தார்.என ஊருக்கு சினிமா படப்பிடிப்பிற்கு வந்த கேமரா மேன் ஒருவருக்கு உதவியாளராக இருந்தேன். அப்போது தான் கேமராவின் மீது ஆர்வம் வந்தது எனக்கு சரியான பயிற்சி கொடுத்து கேமரா மேனாக மாற்றியது பழனிக்குமார் ஆவார்.என் தாயாரின் சிரமங்களை பார்த்தே வளர்ந்த நான் முதன் முதலில் டாகுமெண்டரியாக புகைப்படங்கள் எடுத்ததும் என் அம்மாவின் வாழ்க்கையைத்தான்,நான் எடுத்த படங்களை பார்த்துவிட்டு அதை கண்காட்சியாக வைக்கவேண்டும் என்று எனக்கு வாய்ப்பு கொடுத்தது சென்னை வீக்எண்ட் கிளிக்கர்ஸ் அமைப்பினராகும் நிறைய பேர் பார்த்து பாராட்டி வருகின்றனர் அனைவருக்கும் நன்றி என்றார்.இவரது புகைப்படங்கள் அடங்கிய இந்த புகைப்பட கண்காட்சி வருகின்ற 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது பார்வையாளர்களுக்கான நேரம் பகல் 11 மணி முதல் இரவு 7 மணிவரை அனுமதி இலவசம் --எல்.முருகராஜ்