102 வயது விஞ்ஞானி மன உறுதிக்கு வெற்றி
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டேவிட் குட்ஆல், 102. இந்த வயதிலும், ஆஸ்திரேலியாவில் உள்ள எடித் கோவான் பல்கலைக்கழகத்தில், ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வீட்டிலிருந்து நான்கு பேருந்துகள் மாறி, 90 நிமிடங்கள் பயணித்து, பல்கலைக்கழகத்துக்கு சென்று வந்தார். இது டேவிட் குட்ஆலின் உடல்நலத்தை பாதிக்கும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கருதியதால், அவரை ஓய்வெடுக்கும்படி வலியுறுத்தியது. அவருக்கு கட்டாய ஓய்வளித்து, வீட்டுக்கு அனுப்ப முயன்று வந்தது. ஆனாலும், டேவிட் குட்ஆல் விடாப்பிடியாக பல்கலைக்கழக அலுவலகத்துக்கு சென்று வந்தார். இவருக்கு ஆதரவாக, ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், டேவிட் குட்ஆலின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அவரது வீட்டுக்கு அருகிலேயே பல்கலைக்கழகத்தின் மற்றொரு வளாகத்தில், அவருக்கு அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சக ஊழியர் ஒருவர் கூறுகையில், 'இந்த வயதிலும், அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும் என்ற டேவிட்டின் மனவலிமை போற்றுதற்குரியது. அவருடைய கோரிக்கைக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது' என்று தெரிவித்தார்.