உள்ளூர் செய்திகள்

செவ்வாய் கிரக பயணத்திற்கு இந்தியாவில் 1.3 லட்சம் விண்ணப்பங்கள்

செவ்வாய் கிரகத்திற்கு நாசா, அனுப்பவிருக்கும் இன்சைட் விண்கலம் மனிதர்களின் பெயர்களைத் தாங்கிச்செல்லப் போகிறது. அதற்குத் தங்களின் பெயர்களைப் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு இந்தியாவில் இருந்து 1.3 லட்சம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. மொத்தம் 24.2 லட்சம் பேர் தங்களின் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். உலக அளவில் செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல, தங்களது பெயர்களை பதிவு செய்திருப்பவர்களின் பட்டியலில் உலகிலேயே இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இங்கிருந்து 1,38,899 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதலிடத்தில் உள்ள அமெரிக்காவிலிருந்து 6,76,773 பேரும், இரண்டாமிடத்தில் இருக்கும் சீனாவில் இருந்து 2,62,752 பேரும் விண்ணப்பித்துள்ளனர். நான்காவது இடத்தில் உள்ள இங்கிலாந்திலிருந்து 96,241 பேர் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர். சமீப காலமாக, உள்நாட்டிலேயே தயாராகும் விண்கலங்கள் தொடர்ந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருவதால், இந்திய மக்களிடையே இதுகுறித்த ஆர்வம் மிகுந்துள்ளது. இதனால், நாசாவின் முயற்சிக்குத் தங்கள் பெயர்களைப் பதிய இவ்வளவு பேர் ஆர்வம் காட்டியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டதால், பெயர் பதிவுக்கான காலக்கெடு முடிந்துவிட்டது. இனி செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல விரும்புபவர்களை அனுப்ப விண்ணப்பிக்க முடியாது. இப்போதைக்கு, பதிவு செய்தவர்களின் பெயர்களை மட்டும் சின்ன மைக்ரோ சிப்பில் பதிவுசெய்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பவிருக்கிறது நாசா. மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதற்கான ஆரம்ப ஆசை இது.அடுத்த ஆண்டு (2018) மே மாதம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் கிளம்பும். நவம்பர், 2018ல் அது செவ்வாய் கிரகத்தில் இறங்கும். விண்கலத்தில் பறப்பதற்குப் பெயர் பதிவு செய்தவர்களுக்கு ஆன்லைன் போர்டிங் பாஸையும் நாசா வழங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !