உள்ளூர் செய்திகள்

5 நாட்கள் 10,000 ஏக்கர்!

இயற்கையாக வளர்ந்த மரங்களும், தாவரங்களும் கொண்ட பெரிய, சிக்கலான வடிவத்துடன் கூடிய ஒரு நிலவமைப்பையே நாம் காடு என்கிறோம். பூஞ்சைகள், புற்கள் தொடங்கி பரந்து விரிந்த ஆலமரங்கள், உயர்ந்து வளரும் பைன் மரங்கள் வரை அங்கு வளர்ந்திருக்கக்கூடும். ஏழு மீட்டர் அல்லது அதற்குமேல் உயரமாக வளரும் மரங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, காடு என்பதற்கான வரையறை செய்யப்படுகிறது. இப்படிப் பல்வேறு வகைத் தாவரங்கள், பறவைகள், விலங்குகள் காணப்படும் உயிர்த்தொகுதியான காடு, இயற்கைச் சமநிலையைப் பேணுவதில் பெரும்பங்காற்றுகிறது.இந்தியாவில், 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, 6,92,027 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு காடுகள் உள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்தப் பரப்பில் 21% ஆகும். ஒரு நாட்டில் குறைந்தபட்சம் 33% காடுகள் இருப்பது அவசியம்.நமது நாட்டில் குறைந்த பரப்பளவில்தான் காடுகள் உள்ளன. இந்நிலையில், மின்னல் தாக்குவது, வேனிற்காலத்தில் வெப்பநிலை உயர்வது, மரங்கள் உராய்வது போன்ற இயற்கைக் காரணங்களால் காடுகள் அழிகின்றன. இன்னொருபுறம் மனிதர்களின் பேராசை காரணமாகவும், அறியாமையாலும் காடுகள் அழிக்கப்படுகின்றன.இந்தியக் காடுகளில் 50% அளவு பகுதிகள் காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ விபத்துகளில், 95% மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை என்கிறது இந்திய வன அளவைக் கழக (Forest Survey of India) அறிக்கை. காட்டுத்தீ பாதிப்புகளால் இந்திய அரசு, ஆண்டுதோறும் சுமார் 1,100 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டமடைகிறது.காட்டிற்குத் தொடர்பற்ற மனிதர்கள் நடமாட்டம், ஆக்கிரமிக்கும் நோக்கில் காடுகளுக்கு நெருப்புவைப்பது, புகைப்பிடித்துவிட்டு அணைக்காமல் பீடி, சிகரெட் போன்றவற்றை எறிவது, மின்கசிவு ஆகிய காரணங்களால் செயற்கையான காட்டுத்தீ உருவாகிறது. கோர விபத்துகள்ஆங்கிலேயர் வருகைக்கு முன்னால் நடைபெற்ற காட்டுத்தீ விபத்துகள் பற்றி, வெகுசில தகவல்கள், தரவுகள்தான் நமக்குக் கிடைத்துள்ளன. மிதவெப்பமண்டலப் பகுதியான இந்திய மண்ணை வென்று ஒருங்கிணைத்த ஆங்கிலேய அரசு, தீ விபத்துகள் பற்றிய தகவல்களைச் சேகரித்தது. ஆனால், அவையும் முழுமையானவை அல்ல. சமீபத்தில் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, இந்தியாவில் நடைபெற்ற விபத்துகளில் அதிக சேதத்தை ஏற்படுத்திய ஒன்று. இந்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி அந்த வனம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. விபத்தை ஏற்படுத்தும் நோக்கில், மனிதர்களே நெருப்பு வைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதன் விளைவாக, ஐந்து நாட்களில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் வனம் கருகிச் சாம்பலானது.புலிகள் சரணாலயமான பந்திப்பூர் வனத்தில் வேங்கைகள், சிறுத்தைகள், யானைகள், காட்டு மாடுகள், மான்கள், ராஜநாகங்கள் உட்பட பாதுகாக்கப்பட்ட பல்லாயிரம் உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த விபத்தில் ஊர்வன, நிலத்தில் வாழும் பறவைகள், மெதுவாக நகரும் விலங்குகள் போன்றவை அதிக எண்ணிக்கையில் பலியாகியுள்ளன. முதிர்ந்த மரங்களின் அழிவினால் பறவைகள் மற்றும் விலங்குகள் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளன. மேலும் வனத்துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் மரணமடைந்தார். பலர் படுகாயமுற்றனர். கர்நாடக அரசு ஹெலிகாப்டர்கள் உதவியுடன் நெருப்பை அணைக்கப் போராடியது. அங்கிருந்து பரவிய காட்டுத்தீயின் நெருப்பு, தமிழக எல்லையை அடைந்து முதுமலை சரணாலயத்தின் சில பகுதிகளைச் சூறையாடியது. விரைந்து செயற்பட்ட தமிழக வனத்துறை, கடுமையாகப் போராடி தீயை மேலும் பரவாமல் தடுத்துவிட்டது. ஆயினும் தமிழக எல்லைக்குள் நாற்பது ஏக்கர் கானக நிலம் இவ்விபத்தில் பாதிக்கப்பட்டது. பின்னர், செயற்கைக்கோள் புகைப்படங்கள் வழியே பந்திப்பூர் வனப்பகுதியை ஆராய்ந்தனர். அதில் சுமார் பதினைந்தாயிரம் ஏக்கர் நிலங்கள் காட்டுத்தீயால் பாதிக்கப் பட்டிருப்பது உறுதியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !