உள்ளூர் செய்திகள்

பாலைவனமாகும் கடல்...

உலக பாலையாதல் மற்றும் வறட்சி நிலை தடுக்கும் நாள் ஜூன் 17மத்திய ஆசியாவில் உள்ளது ஏரல் கடல். பார்ப்பதற்கு பிரமாண்டமான கடல் போல் இருப்பதால் 'ஏரல் கடல்' என்கிறோம். உண்மையில் இது ஏரிதான். மிகப்பெரிய ஏரி. வடக்கில் கஜகஸ்தான் - தெற்கில் உஸ்பெக்கிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் நடுவே உள்ளது ஏரல் கடல். இதன் பரப்பளவு 68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். இது உலகின் நான்காவது மிகப்பெரிய ஏரி. இதெல்லாம் முன்பு. இப்போது இதன் நிலை வேறு. ஏரல் கடல் 1960களில் இருந்து வற்றிக்கொண்டே வருகிறது. முன்பு கடல் மட்டத்திலிருந்து 53 மீட்டர் உயரத்துக்கு நீர் தளும்பி நின்ற ஏரல் கடல், இப்போது நீரில்லாமல் வற்றிச் சுருங்கிவிட்டது. அதன் மொத்தப் பரப்பு, கால்வாசியாகவும் நீர் அளவு அதைவிடக் குறைவாகவும் சுருங்கிவிட்டன. தற்போது இந்த ஏரியின் ஒரு சிறிய பகுதியே எஞ்சியுள்ளது. இதனைச் சென்றடையும் ஆறுகளான அமு தர்யா (Amu Darya), சிர் தர்யா (Syr Darya) எனும் ஆறுகள் நீர்ப்பாசனத்திற்காக ரஷ்யாவினால் திசை திருப்பப்பட்டதில் இருந்து இக்கடலின் நீர்மட்டம் குறைந்துவருகிறது. ஏரல் கடல் பகுதியின் பொதுவான ஆழம் 43 மீட்டர். ஒரு காலத்தில் இப்பகுதியில் மீன்பிடித் தொழில் செழிப்பாக இருந்தது. ஏரி வற்ற ஆரம்பித்தவுடன் மீன் வளம் குறைந்து மீன்பிடித் தொழில் முற்றாகக் கைவிடப்பட்டுள்ளது. மத்திய ஆசியாவில் உள்ள கஜகஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து ரசாயனம் கலந்த நீர் இந்த ஏரியில் சேர்கிறது. ஆறுகள், பனி மலைகளின் நீர்வரத்து இல்லாத நிலையில் வெறும் ரசாயனக் கழிவுகள் சேரும் இடமாக ஏரல் கடல் மாறிவிட்டது. முன்பு கரையோரத்தில் இருந்த ஊர்கள் இன்றைக்கு நீர் இருக்கும் பகுதியிலிருந்து 70 கி.மீ. தள்ளி இருக்கின்றன. நிலப்பகுதி பாளம் பாளமாக உப்பு படிந்து வெடித்துக் கிடக்கிறது. அத்துடன் கடும் வெப்பம் காரணமாக இந்த ரசாயனக் கழிவு நீரும் மெல்ல மெல்ல வற்றிவிட்டது. ஏரல் கடல் பகுதி நீர் நிரம்பி இருந்தவரை மத்திய ஆசியாவில் தட்பவெப்ப நிலை சீராக இருந்தது. இப்போது முற்றிலும் நீர் வற்றிவிட்டதால் அது அடியோடு மாறிவிட்டது. குளிர்காலம் பனிக்காலமாகவும், கோடைக்காலம் தாங்க முடியாத அனல்காற்று வீசும் காலமாகவும் ஆகிவிட்டது. ஏரல் கடலின் அழிவை 1988ஆம் ஆண்டில் இயற்கைப் பேரழிவாக ரஷ்யா அறிவித்தது. நீரால் நிரம்பி, கடல் போலக் காட்சியளித்த ஏரல் கடலின் இன்றைய நிலை, இயற்கையையும் நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது.நம் நாட்டில், மாநிலத்தில் உள்ள நீர் நிலைகளின் நிலைமையும் இதுதானே...?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !