இக்கட்டான நேரத்தில் கைகொடுக்கும் மடக்கும் வீடு!
புயல், வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களை நாம் அடிக்கடி எதிர்கொள்கிறோம். அதுபோன்ற சூழலில், பலரும் வீடுகளை இழக்க நேரிடுகிறது. கடந்த, 2015இல் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் போது, 14ஆயிரம் பேர், இருப்பிடங்களை காலி செய்து, வேறு இடங்களுக்கு நகர்ந்தனர். இப்படி வீடிழந்தவர்களுக்கு உதவ, சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள், புதிய மடக்கும் வீடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். தற்காலிக வீடு என்ற யோசனை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. கொட்டகை, கூடாரம் போன்றவற்றில் தொடங்கி பல வடிவங்களில், அது செயற்படுத்தப்பட்டு வருகிறது. அதிலிருந்து ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கிய வீடு எந்த வகையில் வேறுபடுகிறது? இதுகுறித்து, நான்காமாண்டு, ஐ.ஐ.டி. சிவில் இஞ்சினியரிங் மாணவர் ஸ்ரீராம் கூறியதாவது: இந்த மடக்கும் வீடுகளை வேறு இடங்களுக்கு நகர்த்திக்கொள்ள முடியும். அலுமினியச் சட்டகங்களை அடிப்படையாக வைத்து இந்த வீடு உருவாக்கப்பட்டுள்ளது. டெலஸ்கோபிக் முறையை முன்மாதிரியாகக் கொண்டு இதை உருவாக்கியுள்ளோம். அதாவது தொலைநோக்கியை மடிக்கவும், சிறியதாகவும், பெரியதாகவும் விரிக்க முடியும். அது போல்தான் இதுவும். இந்த மடக்கு வீட்டை விரித்தால், இரண்டு தளங்கள் கொண்ட வீடு கிடைக்கும். ஒரே நேரத்தில் நான்கு குடும்பங்கள் தங்கலாம். 400 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த கூடார வீட்டை, 5x5 அடி பெட்டிக்குள் மடித்து வைத்துவிட முடியும். ஒவ்வொரு வீடும், 52 அடி நீள, அகலம் மற்றும் 40 அடி உயரமுடையது. மின்வசதிக்காக சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. நீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் உண்டு. ஒவ்வொரு அறையையும் தேவைக்கு தகுந்தாற்போல், மாற்றியமைக்க முடியும். எட்டு மாணவர்கள் இணைந்து இதை வடிவமைத்தோம். ஒவ்வொரு வீட்டுக்கும், 3 லட்சம் ரூபாய் தயாரிப்புச் செலவு ஆகும். அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய தேசிய அளவிலான சமூக நிறுவன யோசனை சவாலில் பங்கேற்று, இந்த மடக்கு வீடு திட்டத்தை முன்வைத்து முதல் பரிசைப் பெற்றுள்ளோம்.' என்று தெரிவித்தார்.