உள்ளூர் செய்திகள்

தண்ணீரில் மூழ்குவோருக்கு கைகொடுக்கும் நண்பன்!

அலிஅஸ்கர் கல்கத்தாவாலா. கடலில் மூழ்கி மக்கள் உயிரிழப்பதைத் தடுக்க, மீட்பு டிரோனை உருவாக்கியுள்ளார். “கடல் எந்த அளவு அழகானதோ, அதே அளவுக்கு ஆபத்துகளும் நிறைந்தது. குளிக்கச் செல்பவர்கள், கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகம். இதற்கு தீர்வாகவே டிரோனை உருவாக்கியுள்ளோம். எங்கள் குடும்பம், கொல்கத்தாவில் கப்பல் கட்டுமானத்துறை பாரம்பரியத்தைக் கொண்டது. சிறுவயதிலிருந்தே கப்பல்களுடன் பரிச்சயம் உண்டு. ஜெர்மனியின் சீகன் பல்கலைக் கழகத்தில், மெக்கட்ரானிக்ஸ் (Mechatronics) முடிததேன். 2008 முதல், விசாகப்பட்டினத்தில், கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையுடன் இணைந்து பணிபுரிய ஆரம்பித்தேன். விசாகப்பட்டினத்தில், கடல் அலைகள் வலுவானவை. இங்கு குளிப்பவர்கள் கடலுக்குள் அடிக்கடி சிக்குவர். அவர்களைக் காப்பாற்ற டிரோன் ஒன்றை வடிவமைக்க முடிவெடுத்தேன். கடந்த செப்டம்பர் 2017இல் இதற்கான பணியை எனது சகோதரருடன் இணைந்து ஆரம்பித்தேன். இதில், ஆற்றல் கணக்கீடு, வடிவம், அளவு விகிதம், எடை, மிதக்கும் தன்மையளவு, காற்றியக்கம், அழுத்த சோதனை என சிக்கலான பல்வேறு பொறியியல் சவால்கள் எழுந்தன. ஐ.ஐ.டி. மாணவர்களை உதவிக்கு அழைத்தோம். அவர்கள் ஓரளவுக்குப் பிரச்னையை சரிசெய்தார்கள். கப்பல் பழுதுநீக்கத் துறையில் எனக்கு பல நண்பர்கள் உள்ளனர். அவர்கள் எங்கள் தயாரிப்பை இறுதி வடிவத்துக்கு கொண்டு வந்தனர். இணையத்தையோ, இன்னபிற கோபுர அலைவரிசையையோ சார்ந்து இந்த டிரோன் இயங்குவதில்லை. புயல் மற்றும் நிலநடுக்க காலத்தில், இணையத்திலும், தொலைத்தொடர்பு சிக்னலிலும் பிரச்னை உண்டாகும். எனவே, ரேடியோ அலைவரிசையை அடிப்படையாகக் கொண்டு இயங்குமாறு டிரோனை உருவாக்கியுள்ளோம். 10 கி.மீ., வரை தொடர்பு கொள்ளலாம். இந்த டிரோன் நொடிக்கு 14 மீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து செல்லும். 45 நிமிடங்களுக்குத் தொடர்ந்து இயங்கும். கடலுக்குள் யாராவது மூழ்குவதைக் கண்டால், டிரோனை நீரில் எறிய வேண்டும். பின்னர் ரிமோட் மூலம், அதை இயக்கலாம். கடலில் சிக்கிய நபருக்கு அருகில் டிரோனை கொண்டு போனால், அவர் அதைப் பற்றிக்கொண்டு மீண்டும் கரை வந்து சேரலாம். சுற்றுலாதுறை, கண்காணிப்புப் பணி, வெள்ளத்தால் சிக்கியவர்களை மீட்க என்று 12 வகையான தேவைக்காக, 6 வகையான கடல் டிரோன்களை உருவாக்கியுள்ளோம். இதன் எடை 12 கிலோதான். இராணுவத்தேவைக்காகவும் இதைப் பயன்படுத்த முடியும். இம்மாத இறுதியில், எங்கள் தயாரிப்பை விற்பனைக்குக் கொண்டு வருகிறோம்.” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !