நீரில் ஒரு பிரமாண்டம்
நீர் யானைஆங்கிலப் பெயர்: 'ஹிப்போபோடமஸ்' (Hippopotamus)அறிவியல் பெயர்: 'ஹிப்போபோடமஸ் அம்பிபியஸ்' (Hippopotamus Amphibius)குடும்பம்: 'ஹிப்போபோட்டமிடே' (Hippopotamidae)* ஆயுட்காலம்: 40 - 50 ஆண்டுகள்* எடை: ஆண்: 1600 - 3200 கிலோ; பெண்: 600 - 2500 கிலோ* உயரம்: 6 அடி * நீளம்: 15 அடி* வாலின் நீளம்: 2 அடி* வகைகள்: நீர் யானை (Common Hippopotamus), பிக்மி நீர் யானை (Pygmy Hippopotamus)* இனப்பெருக்க காலம்: 8 மாதங்கள்நிலத்தில் வாழும் விலங்குகளில் யானைகளுக்கு அடுத்தபடியான பெரிய விலங்கு நீர் யானை. பாலூட்டி விலங்கான இது, ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தது. ஆற்றுப் பகுதி, ஏரி போன்ற நீர்நிலைகளில் கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் 40 நீர் யானைகள் வரை இருக்கும். பெண் நீர் யானைகளைவிட, ஆண் நீர் யானைகள் பெரியவை. 'ஹிப்போபோடமஸ்' என்ற கிரேக்கச் சொல்லுக்கு, 'நீர்க் குதிரை' என்று பொருள்.நீர் யானைகளுக்கு கண், நாசித் துவாரம், காது ஆகிய உறுப்புகள் தலையின் மேற் பகுதியில் இருக்கும். நீருக்குள்ளேயே இருந்தபடி தலையின் மேற்பகுதியை மட்டும் வெளியே நீட்டியபடி சுவாசிக்கும், பார்க்கும். தோல் பாகம் இளஞ்சிவப்பும் கருப்பும் கலந்த நிறத்தில், எண்ணெய்ப் பசையுடன் இருக்கும். வழவழப்பான தோலில் முடிகள் இருக்காது. நீருக்கடியில் இவை வேகமாகச் செல்லும். பகல் பொழுதை நீரிலும், இரவுப் பொழுதை நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள நிலத்திலும் கழிக்கும். பற்கள் கூர்மையாக, தந்தம் போன்று வலிமையுடன் இருக்கும். நீண்ட உருளை வடிவில் பருத்த உடல் அமைப்பைக் கொண்டிருக்கும். தலைப் பகுதி பெரியதாகவும், வாய்ப்பகுதி அகன்று தட்டையாகவும், முன்புறம் நீண்டும் காணப்படும். புற்கள், பாசிகள் போன்றவையே இவற்றின் உணவு. மூன்று வாரங்களுக்குத் தேவையான உணவைக்கூட உண்டு, சேமித்து வைத்துக் கொள்ளும். தங்கள் குட்டிகளை இவை நீருக்கடியில் பிரசவிக்கின்றன. குட்டிகள் நீருக்கடியிலேயே பால் அருந்தும்.- ப.கோபாலகிருஷ்ணன்