சமூக மாற்றத்தின் நாயகி!
அருந்ததி ராய்24.11.1961மேகாலயா அதுவரை இந்தியர்கள் யாரும் அந்தப் புகழைப் பெறவில்லை! சர்வதேச அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான 'புக்கர்' பரிசை, அவர் தனது முதல் நாவலுக்காகப் பெற்றபோது உலகமெங்கும் இந்தியாவின் புகழ் பரவியது. அத்தனை பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரர், எழுத்தாளரும் சமூகப் போராளியுமான அருந்ததி ராய்.பள்ளிப்படிப்பை கேரளத்திலும் தமிழகத்திலும் முடித்தார். பின்னர் கட்டடக்கலைப் பிரிவில் உயர்படிப்பை டில்லியில் படித்தார். கட்டடங்கள் பற்றிப் படித்து பொறியியலாளராக இருந்தாலும், அவருக்குள் இருந்த எழுத்தாளர்தான் முதலில் விழித்துக் கொண்டார். நாடகங்கள், கவிதைகள் எழுதினார். எதிலும் அவருக்குத் திருப்தியில்லை. ஒரு திரைப்படத்துக்கு அவர் எழுதிய விமர்சனம் கவனம் பெற்றது. அந்த ஆர்வத்தில் தன் இளமைக்கால நினைவுகளை 'சின்ன விஷயங்களின் கடவுள்' (The God of Small Things) என்ற தலைப்பில், நாவலாக எழுதத் தொடங்கினார். இதற்கு 1997இல் பெருமைமிக்க 'மான் புக்கர்' பரிசு கிடைத்தது.சமூக ஆர்வலர் மேதா பட்கருடன் சேர்ந்து நர்மதை நதியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்துப் போராடினார். பொதுச்சேவையில் தன்னை முழுவதுமாக இணைத்துக்கொண்டு சமூகப் பிரச்னைகள் குறித்த கருத்துகளையும் அரசியல் பார்வையையும் பத்திரிகைகளில் எழுதினார். தன் கருத்துகளை வெளிப்படுத்த அவர் என்றும் தயங்கியதில்லை. எழுத்துப் பணியைத் தாண்டி சமூகப் பிரச்னைகளுக்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார். குழந்தைத் தொழிலாளர் மீட்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு, அணுஉலை எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என, மக்களுக்கான நீதிக்காகப் போராடுவதற்காகத் தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்டிருக்கிறார் இந்தச் சமூகப் போராளி! இவரது முக்கியமான புத்தகங்கள்1.Broken Republic2. Capitalism A Ghost Story3. The End Of Imagination4. War Talk 5. The Ministry of Utmost Happiness6. The Cost of Living