உள்ளூர் செய்திகள்

முடிவுகளின் நாயகன்!

முடிவெடுத்தல்ஜவாஹர்லால் நேரு: 14.11.1889 - 27.5.1964மிகவும் எளிமையான முடிவைத்தான் எடுக்கவேண்டும். ஆனால், முடியவில்லை. எனக்குக் கதைப் புத்தகங்கள் படிப்பதுதான் பிடிக்கும். பள்ளிக்கூட நூலகத்துக்குள் போனால், என் கண்ணில் படுவதெல்லாம் நாவல்களும் சிறுகதைகளும் தான். ஆனால், அதையெல்லாம் தொட்டாலே, நூலகர் ஒரு மாதிரி முறைப்பார். வீட்டுக்கு எடுத்துப் போனாலோ, அம்மா முகத்தில் கலவரம் தெரியும். “சப்ஜெக்ட் புக்ஸா படிச்சா ஏதாவது பிரயோஜனம் இருக்கும். இதெல்லாம் எதுக்குப் படிக்கிறே?” என்று ஒரு நாள் கேட்டேவிட்டார். கதைப் புத்தகங்கள் படிப்பதே தவறோ என்ற எண்ணமே எனக்குள் உருவாகிவிட்டது. நான் நீண்டநேரம், நூலக அடுக்குகள் நடுவே நிற்பதை ஒரு நாள் அந்தப் பக்கம் வந்த உமா மிஸ் பார்த்தார். பேசிக்கொண்டு இருந்தபோது, தீர்மானம் எடுக்கமுடியாமல் நான் திண்டாடுவதைச் சொல்லிவிட்டேன். வழக்கம்போல், உமா மிஸ் அமைதி காத்தார்.“இதுக்கே இப்படி சொல்றீயா? ஜவாஹர்லால் நேரு மாதிரி இருந்தா என்ன பண்ணியிருப்பே?”“அவருக்கு என்ன பிரச்னை மிஸ்?”“நம் நாடே அவர் முடிவுகளை நம்பித்தான் இருந்துது. இந்தியாவுக்கு அப்போ சுதந்திரம் வந்தாச்சு. அதுவும் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிற்பாடு, பிரிட்டிஷ்காரன் கிளம்பிப் போயிட்டான். வல்லபபாய் படேல் அத்தனை சமஸ்தானங்களையும் ஒருங்கிணைச்சு ஒரு தேசமாக உருவாக்கிட்டார். இன்னொரு பக்கம், பாகிஸ்தான் பிரிவினை. பிரிட்டிஷ்காரர்கள் வேண்டுமென்றே இங்கே மோசமாக ஆட்சி செய்தார்கள். அதனால, ஒரே பிரச்னைகள். குழப்பங்கள். எந்தத் திசையில நாட்டை கொண்டுபோனால், இங்கே அமைதியும் சுபிட்சமும் ஏற்படும்னு யாருக்கும் தெரியல. அதைவிட, யாருக்குமே இவ்வளவு பெரிய நாட்டை எப்படி நிர்வாகம் பண்ணனும்னு தெரியாது.கொஞ்சம் யோசிச்சுப் பாரு. ஒரு பக்கம் எல்லாமே புதுசு. இன்னொரு பக்கம், ஒரே குழப்பம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக ஆலோசனை சொல்றாங்க. எது சிறந்த பாதை? எந்தப் பயணம் எதிர்கால இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தரும்னு முடிவெடுக்க வேண்டிய தருணம். மகத்தான பொறுப்பு. நாட்டுக்கே திருப்புமுனை ஏற்படுத்தற பொறுப்பு.அப்போ தான், கர்நாடகத்துல இருக்கும் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டிய மிகப்பெரிய பொறியியலாளரான விஸ்வேஸ்வரய்யா, நேருக்கிட்ட வராரு. “தொழில்மயப்படுத்து அல்லது அழிந்துபோ” என்ற கோரிக்கையை முன்வைக்கிறாரு. நேருவுக்கு அவருடைய கருத்து பிடிச்சுப் போச்சு. இந்தப் பெரிய தேசத்தை முன்னுக்குக் கொண்டுவரணும்னா, அறிவியல் அணுகுமுறைதான் உதவும்ங்கறதைப் புரிஞ்சுக்கிறார். அங்கே இருந்து அவருடைய துணிச்சலான முடிவுகள் ஆரம்பிக்குது.இந்துஸ்தான் ஏர்கிராஃப்ட் லிமிடெட், இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ்னு எண்ணற்ற பொதுத் துறை நிறுவனங்களைத் தொடங்குறாரு.திட்டக் குழுவை அமைத்து, ஐந்து ஆண்டுத் திட்டங்களைக் கொண்டுவராரு.'நவீன கோவில்கள்'னு சொல்லப்படற, உருக்கு ஆலைகளை, பிலாய், ரூர்கேலா, துர்காபூர், பொகாரோ ஆகிய இடங்களில் ஆரம்பிக்கிறாரு. 'பசுமைப் புரட்சி'ன்னு சொல்லப்படற விவசாய வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்குறாரு. இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுக்காக சி.எஸ்.ஐ.ஆர்.ங்கற துறையை ஆரம்பிச்சு, இந்தியாவெங்கும் இருக்கும் பல்வேறு அறிவியல் ஆய்வாளர்களை வேலைக்குச் சேர்த்து, புதிய கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றங்களையும் கொண்டுவர ஏற்பாடு செய்யறாரு.எல்லாத்தையுவிட முக்கியம், ஹோமி பாபா என்ற மிக முக்கியமான அறிவியல் அறிஞர் தலைமையில், இந்திய அணுசக்தி துறையை உருவாக்கினது தான்.இதேபோல், இன்னிக்கு நீங்களெல்லாம் சேர விரும்பற ஐ.ஐ.டி.படிப்புகளை உருவாக்கினதும் நேருதான். டில்லியில இருக்கிற 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு அடித்தளமிட்டதும் அவருதான்.அரசியல் ரீதியாகவும் நேரு மிக முக்கியமான வழியைத் தேர்ந்தெடுத்தார். அன்னிக்கு அமெரிக்கா, சோவியத் யூனியன்னு உலகமே ரெண்டா பிரிஞ்சு கிடந்தது. இவர் துணிச்சலாக, 'அணிசேரா நாடுகள்' அப்படின்னு இன்னொரு கருத்தை முன்வெச்சு, பல நாடுகளை ஒருங்கிணைச்சார்.இந்தியாவை அறிவியல் பாதையில் அழைத்துச் சென்று, எதிர்கால தொழில்நுட்பப் புரட்சிகளுக்குத் தயாராக இருக்கிற ஒரு தேசத்தை உருவாக்கின பொறுப்பு நேருவுடையது.இதற்கு எத்தனை முடிவுகள் எடுத்திருக்கணும்? தப்பா போயிடுமா, தோல்வி வந்துடுமா, யார் என்ன சொல்வாங்களோ, எதிர்காலம் நம்மைக் குற்றஞ்சாட்டுமோ என்றெல்லாம் துளிகூட பயப்படாமல், தொடர்ந்து முடிவுகளாக எடுத்தவர் ஜவாஹர்லால் நேரு. 'நவீன இந்தியாவின் சிற்பி'ன்னு இதுக்காகத்தான் நாம அவரைப் புகழறோம். இன்னிக்கு நாம மிகப்பெரிய அளவுல வளர்ந்திருக்கோம்னா, அதுக்கு விதை, நேரு போட்டது. அதுக்குக் காரணம், அவருடைய முடிவெடுக்கும் துணிச்சல்.”நான் ஒரு கணம் ஆடிப்போய்விட்டேன். என் இயலாமையும் குழப்பமும் எனக்கே வேடிக்கையாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !