சிற்றிலக்கியக் காலம்
குறவஞ்சி, கலம்பகம், பள்ளு, பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி, உலா, தூது, பரணி, முதலியவை சிற்றிலக்கியங்களாகும். சிற்றிலக்கியங்களை முதலில் பிரபந்தங்கள் என்றே அழைத்தனர். 'பிரபந்தம்' என்ற வடசொல்லுக்கு, நன்கு வடிவமைக்கப்பட்டது என்பது பொருள். சிற்றிலக்கியம் என்பது அளவில், பாடல் எண்ணிக்கையில், அடிகளின் எண்ணிக்கையில், சிறியதாக இருக்கும்.பெரும்பாலும் அகம், அல்லது புறம் ஏதேனும் ஒன்றைப் பற்றி கூறும். விதிவிலக்காக சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு. உ-தாரணம், கோவை.பாடப்படும் கடவுள், மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு பகுதி மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா. தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துக் காட்டும்.அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருட்களுள் ஏதேனும் ஒன்றை மட்டும் கொண்டிருக்கும்.கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரையில் நிறைய சிற்றிலக்கியங்கள் தோன்றியதால், அதைச் 'சிற்றிலக்கியக் காலம் என்று அழைக்கின்றனர்.