உள்ளூர் செய்திகள்

ஒரு ஊர்ல ஒரு ராணி

'வீராதி வீரம்மம்மா வீரகுலத்து ராணியம்மா' இப்படி ஒரு கும்மிப்பாட்டு தமிழில் இருக்கு. இது எந்த ராணியைப் புகழ்ந்து பாடப்பட்ட வரிகள்? ராணி மங்கம்மாளைப் பற்றியது. இவர் 1689 முதல் 1704 வரை ஆட்சி செய்தார். மதுரையை ஆண்ட சொக்கநாத மன்னரின் மனைவி. கணவர், மகன் அடுத்தடுத்து இறந்துவிட, தன் மூன்று மாத பேரக் குழந்தை விஜயரங்க சொக்கநாதரின் சார்பில் காப்பாட்சியாளராக ஆண்டார். அந்தக் காலத்தில் ராணிகளுக்கு நாட்டை ஆளும் உரிமை இல்லை. அதனால் ஆண்களின் சார்பில்தான் ராணிகள் ஆட்சி செய்ய வேண்டிய நிலை இருந்தது. மங்கம்மாள் சாலைகள் அமைத்தார், குளங்கள் வெட்டினார், சத்திரங்கள் கட்டினார், கோயில்கள் எழுப்பினார் என்று சொல்வது சலிப்பைக் கொடுத்தாலும் அதையும்தான் செய்தார். போக்குவரத்துக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் சாலைகள் முக்கியம் இல்லையா! பயணம் செய்யும் மக்கள் இரவு தங்குவதற்கும் உறங்குவதற்கும் இருப்பிடம் தேவை. அதற்காக சத்திரங்கள் கட்டி உணவளிக்கச் செய்தார். மனிதர்களும் கால்நடைகளும் நீர் அருந்த குளங்கள் வெட்டினார்.இவரின் ஆட்சிக் காலத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப் செஞ்சியைக் கைப்பற்றினார். அவரின் அடுத்த இலக்கு மதுரையாக இருந்தது. ஆனால் ராணி மங்கம்மாள் போரை தவிர்த்தார். ஔரங்கசீப் தளபதி சல்பீகார் அலிகானுடன் உடன்படிக்கை செய்துகொண்டார். கப்பம் கட்டினார். தன் வலிமை, மாற்றான் வலிமை ஆகியவற்றை அறிந்து நடந்துகொள்வதுதானே ராஜ தந்திரம்...அந்த சமயத்தில் மதுரைக்குக் கப்பம் கட்டும் நாடாக இருந்தது திருவிதாங்கூர். ஆனால் அப்போதைய மன்னர் ரவிவர்மா ராணி மங்கம்மாளுக்குக் கப்பம் கட்ட மறுத்தார். போர் தொடுத்து மதுரையின் ஒரு பகுதியை அழிக்கவும் செய்தார். மங்கம்மாள் பதிலுக்கு திருவிதாங்கூருக்குப் படைகளை அனுப்பி வென்றார். அங்கிருந்த பீரங்கி, பொன், பொருள் யாவற்றையும் கைப்பற்றி வரச் செய்தார். திருவிதாங்கூர் மன்னர் பணிந்தார். தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் ஷாஜியும் மங்கம்மாளுக்கு பயந்து பணிந்து நடந்துகொண்டார். தற்போது மதுரையில் உள்ள காந்தி மியூசியம், மங்கம்மாள் காலத்தைய அரண்மனைதான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !