உள்ளூர் செய்திகள்

கப்பலோட்டிய தமிழன்

(05.09.1872 - 18.11.1936)ஆங்கிலேயக் கப்பல்களுக்குப் போட்டியாகக் கப்பலோட்டி வெள்ளையர்களின் எண்ணங்களை மூழ்கடித்தவர். தமிழர்களை 'விடுதலை' என்ற ஒரே புள்ளியில் இணைத்து, தேசத் துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனையுடன் சிறை சென்றவர். ''நாம் எல்லோரும் பலமாக மூச்சுவிட்டால் போதுமே! அம்மூச்சுக் காற்றில் பறந்துபோகாதா வெள்ளையர் ஆதிக்கம்?” என்று கர்ஜனை செய்தவர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் (வ.உ.சி).திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் ஈர்க்கப்பட்டு விடுதலைப்போரில் பங்குகொண்டார். தொழிற்சங்கங்கள் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் இல்லாத காலம் அது! அப்போது தூத்துக்குடியில் கோரல் நூற்பாலையில் தொழிலாளர் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார். கொடுத்துக் கொடுத்துச் சிவந்திருந்த வ.உ.சி.யின் கரங்கள் சிறை சென்று, செக்கிழுத்தன; சணல் நூற்று, கல் உடைத்து உடம்பும் சிதைவுற்றது. தண்டனை முடிந்து விடுதலை பெற்ற, கப்பலோட்டிய தமிழனை அழைத்துப்போகக் கூட யாரும் வரவில்லை என்கிறது வரலாறு. மணக்குடவரின் திருக்குறள் உரையை வெளியிடும்போது அந்த நூலின் முகப்பில், 'இந்நூலின் எழுத்து, கட்டமைப்பு, அச்சு, மை யாவும் சுதேசியம்!' என்று குறிப்பிட்டார். இறக்கும்போது, மகாகவி பாரதியின்'' என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?'' என்கிற வரிகளைக் கேட்டபடி உயிர் துறந்தார் நம் செக்கிழுத்த செம்மல்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !