உள்ளூர் செய்திகள்

காலில் செருப்பிருந்தக் கால்

கோடைக்காலம் வந்துவிட்டது. செருப்பு இல்லாமல் வெளியே கால்வைக்க முடியாது. வெறுந்தரையில் கால் வைத்தால் வெய்யில் சூடேறி இருக்கும் மண் சுட்டுவிடும். முற்காலத்தில் செருப்புக்கூட கிட்டாத பொருள்தான். இன்றைக்கு யாருமே செருப்பணியாமல் இருப்பதில்லை. அன்றைக்கு எங்கெங்கும் நிழல் மரங்கள் மிகுந்திருந்தன. செருப்பு போட்டுக்கொள்வதால் என்னென்ன விதங்களில் நன்மை ஏற்படும் என்று அக்காலத்தில் பாட்டாகவே பாடி வைத்திருக்கிறார்கள். பாடியவர் பெயர் தெரியவில்லை.கல்லும் உறுத்தாது காலில்முள் தையாதுஎல்லைமார்த் தாண்டன் சூடேறாது - தொல்லைவருமாலை இருளில் வழிநடக்கக் கூசாதுகாலில் செருப்பிருந்தக் கால்.செருப்புப் போட்டுக்கொண்டு நடந்தால், கால்களைக் கற்கள் குத்தி உறுத்தாமல் இருக்கும். காலில் முள்ளும் தைக்காது. மார்த்தாண்டன் என்றால் சூரியன். தரைக்கும் காலுக்கும் இடையே செருப்பு இருப்பதால், செருப்பின் எல்லையைத் தாண்டி சூரியனின் சூடு ஏறாது. மாலை இருள் நேரத்தில்தான் எதற்கேனும் வெளியே செல்வார்கள். அப்போதுதான் பூச்சி பொட்டுகள் வழியில் திரியும். அவற்றால் தீங்கு நேரும் என்று அஞ்சிக் கூசுவார்கள். காலில் செருப்பு இருந்தால், அத்தகைய தொல்லைகள் வருகின்ற மாலை இருளில் வழிநடப்பதற்கு எவ்விதக் கூச்சமும் இருக்காது. காலில் செருப்பு இருந்தால், இவையனைத்தும் நாம் அடையக்கூடிய நன்மைகள்.- தமிழ்மலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !