உள்ளூர் செய்திகள்

கணித படிப்புகளுக்கு தனி பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் கணித படிப்புகளை பிரத்யேகமாக வழங்க, தனி கல்வி நிறுவனம் உள்ளது. அதன் பெயர் சென்னை மேத்தமெட்டிகல் இன்ஸ்டிடியூட் (Chennai Mathematical Institute-). 'சி.எம்.ஐ.' (C.M.I.) என, சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது, சென்னை சிறுசேரியில் இயங்கி வருகிறது. கணிதத்தில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட படிப்புகளை இங்கு படிக்கலாம். * இது 1986ம் ஆண்டில், ஸ்பிக் நிறுவனத்தால் துவங்கப்பட்டது. அப்போது 'ஸ்பிக் கணித நிலையம்' என்று அழைக்கப்பட்டது. சிறிய ஆய்வு மையமாக இயங்கியது. அப்போது, இங்கு பயின்ற ஆய்வு மாணவர்களுக்கு, சென்னை பல்கலைக்கழகம் அல்லது ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் உள்ள பிட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மூலம் பட்டங்கள் வழங்கப்பட்டன. * தற்போது, பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தன்னாட்சி பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது. * புகழ்பெற்ற கணித அறிஞர் சி.எஸ்.சேஷாத்ரி, இந்த நிலையத்தின் முதல் இயக்குனராக பணிபுரிந்தார். கணிதத்திற்காக லண்டன் ராயல் சொசைட்டி வழங்கும், மிகப் பெரிய அந்தஸ்தான எஃப்.ஆர்.எஸ்., (Fellow of Royal Society - F.R.S -- ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைட்டி) பட்டம் பெற்ற ஆறு இந்திய மேதைகளில் இவரும் ஒருவர். * 'பட்நாகர் விருது' போன்ற உயரிய விருதுபெற்ற அறிஞர்கள், இங்கு பணியாற்றி வருகின்றனர். * கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறைகளில், தரம் மிக்க ஆய்வு நிலையமாக சி.எம்.ஐ., திகழ்கிறது.* கற்றல், ஆய்வு ஆகிய இரு பிரிவுகளிலும் சிறப்பாக செயல்படும் வகையில், கணிதம் மற்றும் அது சார்ந்த முக்கிய துறைகளில் இளங்கலை (B.Sc.) மற்றும் முதுகலை (M.Sc.) பட்டப்படிப்புகள் 1998ம் ஆண்டில் தொடங்கப்பட்டன.தற்போது, இரு இளங்கலை, மூன்று முதுகலை, மூன்று முனைவர் பட்டப்படிப்புகள் உட்பட மொத்தம் எட்டு பிரிவுகளில் பட்டங்களை, சி.எம்.ஐ. வழங்கி வருகிறது. * இளங்கலையில் கணிதம் மற்றும் கணினி அறிவியல் சார்ந்த மூன்றாண்டு பட்டப்படிப்பும், கணினி மற்றும் இயற்பியல் சார்ந்த மூன்றாண்டு பட்டப்படிப்பும் வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.* முதுகலை பட்டப்படிப்பில் கணிதம், கணித பயன்பாடுகள் மற்றும் கணினி அறிவியல் பாடங்களில், பட்டங்கள் வழங்கப்படுகின்றன.முனைவர் பட்டத்திற்கு கணிதம், கணினி அறிவியல் மற்றும் இயற்பியல் ஆகிய மூன்று துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளலாம். இந்தப் பட்டப் பிரிவுகள் அனைத்துக்கும், நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம். முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வுடன், நேர்காணலும் உண்டு.நுழைவுத் தேர்வு எப்போது?நுழைவுத்தேர்வுக்கு, ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் விண்ணப்பிக்கலாம். மே மாதம் இரண்டாவது வாரத்தில் தேர்வு நடைபெறும்.தேர்வு பெறும் மாணவர்களுக்கு, படிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இளங்கலை மாணவர்களுக்கு 5,000 ரூபாய், முதுகலை பயில்பவர்களுக்கு 6,000 ரூபாய், முனைவர் ஆய்வுப் பட்டம் மேற்கொள்பவர்களுக்கு 16,000 ரூபாய். இந்த தொகை மாதா மாதம் வழங்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தகவல்களை அறிந்து கொள்ள https://www.cmi.ac.in/admissions/ எனும் இணையதள முகவரியை காணலாம்.இரா. சிவராமன், நிறுவனர், பை கணித மன்றம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !