உள்ளூர் செய்திகள்

சிறுவனை மகிழ்விக்க டிரக்குகளின் அணி வரிசை

அமெரிக்க விஸ்கான்சின் மாநிலத்திலிருக்கும் டகோடா நகரில் வசிக்கும் சிறுவன் புபா (Bubba Cadd). செரிபரல் பால்ஸி (cerebral palsy) எனப்படும் மூளை முடக்குவாதத்தாலும், டேண்டி வாக்கர் (Dandy-Walker syndrome) எனப்படும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்ட சிறுவன். சக்கர நாற்காலி உதவியோடு மட்டுமே நடமாட முடியும். வீட்டினருகில் இருக்கும் நெடுஞ்சாலையில் போகும் டிரக்குகளை வேடிக்கை பார்ப்பது இவனது பொழுதுபோக்கு. சில ஓட்டுநர்கள் புபாவின் வீட்டருகில் வரும்போது, இவனுக்காக, ஒலிப்பானை (horn) ஒலிக்கச் செய்வார்கள். அதுவே புபாவிற்கு பெருமகிழ்ச்சியைத் தரும்.ஒரு நாள், மார்க் என்ற ஓட்டுநர், புபாவுக்கு ஒரு டிரக் நிறைய பொம்மைகளையும், டிரக் ஓட்டுநர்களுக்கான 'டீசர்ட்'டையும் பரிசாகத் தந்தார். அதைக் கண்ட புபா பெருமகிழ்ச்சி அடைந்தான். இதனை புபாவின் பெற்றோர் சமூக வலைத்தளங்களில் பகிர, அது பெரும் வரவேற்பைப் பெற்றது.இச்செய்தியால் கவரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட டிரக் ஓட்டுநர்கள் ஒன்று சேர்ந்து, கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி, புபாவின் 16வது பிறந்தநாளைக் கொண்டாடினர். அவ்விழாவைப் பற்றி புபாவின் பெற்றோர் முன்கூட்டியே அவனிடம் சொல்லவில்லை. பிறந்த நாளன்று புபாவை பூங்காவுக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு தனக்காக காத்திருந்த டிரக்குகளையும், ஓட்டுநர்களையும் கண்டு புபா ஆனந்த அதிர்ச்சி அடைந்தான். மெல்ல ஒரு டிரக்கில் ஏறி அதன் ஒலிப்பானை அழுத்தி, அந்த ஒலியைக் கேட்டு மகிழ்ந்த புபாவைக் கண்டு அனைவரும் நெகிழ்ந்தனர்.ரிக் (Rick Cadd) மற்றும் பெகி (Peggy), புபாவை ஒன்பது மாதக் குழந்தையாக இருக்கும்போது தத்தெடுத்து வளர்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !