அணு இல்லாத அண்டம்!
சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் ஆகஸ்ட் 29அணுவின் மூலம் மின்சாரம் கிடைக்கிறது. அதுபோல, அணு ஆயுதங்களைத் தவறான வழிகளில் பயன்படுத்துவதால் பல பாதிப்புகளின் விளைவுகளும் நமக்கு 'அன்பளிப்பாகக்' கிடைக்கின்றன. அணு ஆயுதம் முதன்முதலாக, 1945ல் வீசப்பட்ட பிறகே அணு ஆயுதத்தின் கொடூரம் உலகுக்குத் தெரிந்தது. இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதுவே உலகின் முதலும், கடைசியுமான அணுகுண்டுத் தாக்குதல்! இந்தத் தாக்குதல்களால் இரண்டு நகரங்களும் முற்றிலுமாக நிலைகுலைந்தன. கதிர்வீச்சு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்தன!உலகில் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட சில நாடுகள் அணு ஆயுத சோதனை நடத்தி, தங்களை அணு ஆயுத நாடாக நிலைநிறுத்தியுள்ளன. உலகளவில் 1945ஆம் ஆண்டிற்குப் பின் இதுவரை 2000 முறை அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் கதிரியக்கமும் சுற்றுச்சூழல் பாதிப்பும் நாடுகளுக்கு இடையே பதற்றமும் ஏற்படுகிறது.உலக நாடுகளிடம் இருக்கும் அணு ஆயுதங்களை வைத்து, பூமியை 500 முறை அழிக்கலாம்! அதனால், அணுவைப் பயனுள்ள வழிகளில் பயன்படுத்த அனைத்து நாடுகளும் முன்வரவேண்டும். அப்போதுதான், அணு ஆயுதம் இல்லாத உலகம் அமையும். அணு ஆயுதத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் அதன் பரவலைத் தடுக்க வலியுறுத்தியும் ஐ.நா. சார்பில், இந்தத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.