உள்ளூர் செய்திகள்

அதிரடி மன்னன்

சுரேஷ் ரெய்னா பிறந்தநாள் : நவம்பர் 27, 1986காசியாபாத், உத்தரப் பிரதேசம்அப்போது அவருக்கு வயது 23. வங்கதேச சுற்றுப் பயணத்துக்கு இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு வந்தது. 2--0 என்ற கணக்கில் அந்தத் தொடரை அவர் தலைமையில் இந்தியா வென்றது. ஒவ்வொரு பந்துக்கும் வியூகம் வகுத்து, ஒவ்வொரு பந்து வீச்சாளரையும் சிறப்பாகச் செயற்பட வைத்து இளம் வயதிலேயே ஒரு கேப்டனாக வெற்றியை ருசித்தார். அவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா.கடந்த 2005இல், இலங்கைக்கு எதிராக தம்புலாவில் நடந்த ஒரு நாள் போட்டியில் 19 வயதில் அறிமுகமானார். அடுத்த ஆண்டிலேயே 'டுவென்டி - 20' விளையாடும் வாய்ப்பும் வந்தது. அவரது சிறப்பான ஆட்டத்தால் 2010இல் டெஸ்ட் அணியிலும் இடம் கிடைத்தது. இதில் அசத்திய இவர் அறிமுகமான போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அது தவிர, சர்வதேச அரங்கில் டெஸ்ட், ஒரு நாள், டுவென்டி-20 என மூன்றுவித போட்டியிலும் சதம் அடித்த முதல் இந்தியர் இவர்தான். வேகமான வளர்ச்சியாலும் நிதானமான ஆட்டத்தாலும் 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும் இடம்பிடித்தார். ஐ.பி.எல். தொடரில் 2008-2015 வரை தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடினார். இவர் 'சிக்சர்' அடிக்கும்போது, விசில் அடிக்கும் ரசிகர் கூட்டம் அதிகம். ஐ.பி.எல். தொடரில் அதிக போட்டிகளில் விளையாடியவர் (161), அதிக ரன் (4540) எடுத்த வீரர் போன்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரர். இதுவரை, தேசிய அணிக்காக 18 டெஸ்ட் (768 ரன்), 228 ஒரு நாள் (5568 ரன்), 65 'டுவென்டி-20' (1307 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார். 'மிடில்-ஆர்டரில்' இறங்கி அதிரடி காட்டுவதில் கில்லாடி. 'உலகின் தலைசிறந்த ஃபீல்டர்களில் மிக முக்கியமானவர் ரெய்னா!' என தென் ஆப்பிரிக்க அணியின் மிகச் சிறந்த பீல்டர் ஜான்டி ரோட்ஸ் பாராட்டி இருக்கிறார். ஃபீல்டிங் மட்டுமன்றி அவ்வப்போது, பந்தைச் சுழற்றும் ரெய்னா, விக்கெட் வீழ்ச்சிக்கும் கைகொடுப்பார். கடைசியாக, பிப்ரவரி 1, 2017 இங்கிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடந்த 'டுவென்டி-20' போட்டியில் பங்கேற்று விளையாடினார். அடுத்த வாய்ப்புக்கான காத்திருப்புகளுடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் அதிரடி மன்னன் ரெய்னாவுக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்க வாழ்த்துவோம்.சாதனைகள்!ஒருநாள் போட்டிகள்: தொடர்நாயகன் : 2, ஆட்ட நாயகன் : 12டுவென்டி-20: தொடர்நாயகன் : 1, ஆட்ட நாயகன் : 2


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !