உள்ளூர் செய்திகள்

பழமையான பழவேற்காடு

இந்தியாவின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரி, சிலிக்கா. 'இரண்டாவது பெரிய ஏரி' என்ற புகழ், நம்மூர் பழவேற்காடு ஏரிக்குத்தான். இந்த ஏரி, தமிழ்நாட்டின் வட மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்திலும், ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்திலும் பரந்து விரிந்து இருக்கிறது. இதன் மொத்த பரப்பளவு 481 சதுர கி.மீ. இது ஏறத்தாழ சென்னை மாநகரத்தின் பரப்பளவுக்கு இணையானது! தமிழ் நாட்டின் எல்லைக்குள் வரும் பரப்பளவு மட்டும் 153 சதுர கி.மீ. இந்த ஏரியில் 160 மீன் வகைகள், 12 இறால் வகைகள், 19 சிப்பி வகைகள், 100 பறவை இனங்கள் காணப்படுகின்றன. இதனால் இது, ஒரு சிறந்த மீன்பிடி பகுதியாகவும், பறவைகள் சரணாலயமாகவும், சுற்றுலாத் தலமாகவும் தற்போது விளங்குகிறது. ஆனால், ஒரு காலத்தில் தென்னகத்தின் முக்கியமான துறைமுகப் பகுதியாக பழவேற்காடு இருந்தது. கி.பி முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கிரேக்க ரோமானிய கடற்பயண வழிகாட்டி நூல், 'பெரிபுளூஸ் ஆஃப் த ரெட் சீ' (Periplus of the Red Sea). அதில், தென்னிந்தியாவின் கடற்கரை ஓரம் அமைந்து இருக்கும் மூன்று துறைமுகங்களில் ஒன்றாகப் பழவேற்காடு வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது. கிரேக்க அறிஞர் டாலெமி, கி.பி. ௨ஆம் நூற்றாண்டில் தொகுத்த துறைமுகங்களின் பட்டியலில் பழவேற்காடும் ஒன்று. 'பொதுகே எம்போரியன்' என்ற பெயரில் (Podouke emporion) அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பியர்கள் இந்த இடத்தை 'புலிகாட்' (Pulicat) என்று அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் 17ஆம் நூற்றாண்டின் மத்தியில், சென்னையை ஒரு துறைமுக நகரமாக வளர்த்தெடுக்கும்வரை, தென்னிந்தியாவின் முக்கிய துறைமுக நகராக பழவேற்காடு விளங்கியது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !