உள்ளூர் செய்திகள்

சமையலில் மணக்கும் சோம்பு

பெருஞ்சீரகம் / சோம்புஆங்கிலப் பெயர்: ஃபென்னல் (Fennel)தாவரவியல் பெயர்: ஃபோனிகுலம் வல்கரே(Foeniculum vulgare)தாயகம்: கிரீஸ்வளரும் இடங்கள்: வட ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா, அமெரிக்காகாலநிலை: வறண்ட மற்றும் குளுமையான இடம்பெருஞ்சீரகம் 'அப்பியேசியாய்' '(Apiaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. நறுமணப் பொருட்களில் பூக்கும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சிறிய அளவில் இருக்கும் இந்தச் செடிகள், மஞ்சள் நிறத்தில் பூக்கும். இதன் இலைகள் இறகுகள் போல் இருக்கும். பெருஞ்சீரகம், நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் உணவில் சேர்க்கப்படும் பொருள். நல்ல மொறுமொறுப்பாகவும், லேசான இனிப்புச் சுவையோடும் இருக்கும் இதற்கு மருத்துவ குணங்களும் உண்டு.ஐரோப்பிய சமையலில் இதன் இலைகள், குமிழ்கள்(Bulbs) ஆகியவை சாலட், பாஸ்தா, காய்கறிகள் கொண்டு சமைக்கப்படும் பெரும்பாலான உணவுகளில் சேர்க்கப்படும். இத்தாலி உணவில் சாஸ் தயாரிக்கும்போது, பெருஞ்சீரகம் நிச்சயம் சேர்க்கப்படும்.கீரிஸிலிருந்துதான் இந்தியாவிற்கு பெருஞ்சீரகம் அறிமுகமானது. நம் நாட்டில் பெருஞ்சீரகம் இரண்டு விதமாகப் பயன்படுத்தப்படும். உணவு சமைக்கும்போது நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும். அதேபோல், செரிமானத்திற்காக வெறும் விதைகளை உண்பார்கள். முக்கியச் சத்துகள்:* நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட், வைட்டமின் ஏ,பி,சி ஆகியவை உள்ளன. * இதில் வைட்டமின் ஏ நிறைந்து இருப்பதால், கண் பார்வைக்கு நல்லது. அதனால் பண்டைய ரோமானிய மக்கள் கூர்மையான கண் பார்வைக்குப் பயன்படுத்தினர். * குறிப்பாக, கண்களில் உண்டாகும் குளுக்கோமா அறிகுறிகளைக் குறைக்க பண்டைய காலத்தில் சோம்பின் சாற்றைப் பயன்படுத்தினார்கள்.* இந்தியாவில் செரிமானத்திற்காகவும், இருமலுக்காகவும் பயன்படுத்தப்படும். * சைனஸ் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இது ஓரளவுக்கு உதவும். மேலும், இதன் மருத்துவ குணங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இதயத்தை வலுப்படுத்தல், மலச்சிக்கலை நீக்குதல், புற்றுநோய் தடுப்பு என பல நன்மைகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உலகளவில் இந்தியாதான் அதிகளவில் சோம்பு உற்பத்தி செய்கிறது. அதற்கடுத்து சீனா, சிரியா, எகிப்து, ஈரான் போன்ற நாடுகள் அதிகளவில் உற்பத்தி செய்கின்றன. இந்தியாவில் கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் சோம்பு உற்பத்தியாகிறது. - காரா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !