உள்ளூர் செய்திகள்

தேவாரம் பாடினால் அப்பம்

மாணவர்கள் வகுப்புக்குள் நுழைந்து தங்கள் இடங்களில் அமர்ந்தார்கள். மறுகணம், அவர்களுடைய நாவில் எச்சில் ஊறியது.காரணம், ஆசிரியரின் அருகே ஒரு தட்டில் நிறைய அப்பங்களும் வடைகளும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்ததும் மாணவர்களுக்கு ஆசை.இதை அறிந்த ஆசிரியர் சிரித்தார், ''இவையெல்லாம் உங்களுக்குத்தான்'' என்றார். ''ஆனால், இவற்றைச் சாப்பிடவேண்டுமென்றால், நீங்கள் ஒரு போட்டியில் கலந்துகொள்ள வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு, ஓர் அப்பமோ, வடையோ கிடைக்கும்.''''என்ன போட்டி ஐயா?''''தேவாரம் ஒப்பித்தல் போட்டி'' என்றார் ஆசிரியர். ''நான் ஒரு தேவாரப்பாடலைப் பாடுவேன், பிறகு, அதை ஒரு மாணவர் படிப்பார், பின்னர், மீண்டும் அதே பாடலை நான் பாடுவேன். இப்படி மூன்றுமுறை ஒரே பாடலை நீங்கள் கேட்கலாம். அதன்பிறகு, அதை நீங்கள் மனப்பாடமாகச் சொல்லவேண்டும். அதுதான் போட்டி! ''''நல்லது ஐயா'' என்றார்கள் மாணவர்கள். போட்டி தொடங்கியது.முதலில், ஆசிரியர் ஒரு பாடலைப் பாடினார், அதை ஒரு மாணவர் புத்தகத்தைப் பார்த்துப் படித்தார், பிறகு, மீண்டும் ஆசிரியர் அதைப் பாடினார். இதற்குள் அப்பாடல் மாணவர்கள் மனத்தில் ஓரளவு பதிந்திருந்தது, அதை மனப்பாடமாகச் சொல்ல முயன்றார்கள்.இந்தப் போட்டியில் ஒரு மாணவர் வெற்றிபெற்றார். அவருக்கு ஓர் அப்பம் தரப்பட்டது.அடுத்த போட்டி, இன்னொரு பாடல், இம்முறையும் அதே மாணவர் வென்றார். அவருக்கு ஒரு வடை கிடைத்தது.தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்கள் வந்தன. அனைத்தையும் அம்மாணவரே சரியாக மனப்பாடம் செய்து ஒப்பித்தார். அப்பங்களும் வடைகளும் அவருக்குச் சென்றன.இப்போது, ஆசிரியர் முன்னால் இருந்த தட்டு காலியாகிவிட்டது. எல்லா தின்பண்டங்களும் அந்த மாணவரிடம் சென்றுவிட்டன.மாணவர்கள் அவரை ஏக்கத்துடன் பார்த்தனர். 'இந்த வயதில் இப்படியொரு நினைவாற்றலா?' என்கிற வியப்பு ஒருபக்கம்; 'அப்பமும் வடையும் தங்களுக்குக் கிடைக்கவில்லையே' என்கிற ஏமாற்றம் மறுபக்கம்.அந்த மாணவர் நல்ல அறிவானவர் மட்டுமல்ல; மிகவும் அன்பானவர். ''இத்தனை தின்பண்டங்களையும் நானே சாப்பிட இயலாது; வாருங்கள், எல்லோரும் பகிர்ந்து உண்போம்'' என்றார்.இதைக்கண்ட ஆசிரியர் மகிழ்ந்தார். அந்த மாணவரை மனம்திறந்து பாராட்டினார்.இப்படிச் சிறுவயதிலேயே தன்னுடைய திறமையாலும் பண்பாலும் எல்லோரிடமும் நற்பெயர் பெற்ற அவர். பின்னாளில் சிறந்த கவிஞராக, எழுத்தாளராகப் புகழ்பெற்றார். பல அருமையான நூல்களையும் பாடல்களையும் தந்து நம் மனத்தில் நிற்கிறார். அவர், 'கவிமணி' என்று போற்றப்படும் தேசிக விநாயகம்பிள்ளை!என்.சொக்கன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !