உள்ளூர் செய்திகள்

முத்து குளிக்க வாரீயளா?

நாங்கள் நால்வரும் அடிக்கடி ஹூடினி பற்றி பேசிக்கொண்டிருப்போம். காரணம், எங்கள் எல்லாருக்கும் மாஜிக் பிடிக்கும். மேஜிஷியன் எனப்படும் தந்திரவாதிகளிலேயே உச்சமான புகழை அடைந்தவர் ஹூடினி.“நமக்கு ஏன் மேஜிக் பிடிக்கிறது?” என்று ஞாநி மாமாவை கேட்டேன். “நம் உடல் இயங்கும் விதத்தைவிடத் தீவிரமாக நம் மூளை அதாவது சிந்தனை செயல்படுகிறது. சிந்தனையில் தோன்றும் கற்பனைகளையெல்லாம், உடலால் எல்லாராலும் நிறைவேற்ற முடியாது. அப்படி நிறைவேற்றிக் காட்டுகிற கலைகள் எல்லாம் நமக்குப் பிடிக்கும். கதை, சினிமா, ஜிம்னாஸ்டிக்ஸ், மேஜிக் எல்லாம் அப்படிப்பட்டவை.” என்றார்.ஹூடினி, ஹங்கேரியில் பிறந்து அமெரிக்காவில் செட்டில் ஆகி, பல நாட்டுக் காவல் துறைக்கு சவால்விட்ட தந்திரவாதி. கை, கால் இரண்டிலும் எத்தனை விலங்கு போட்டுப் பூட்டினாலும், திறந்துகொண்டு வந்துவிடும் தந்திரத்தில் அவர் புகழ் பெற்றவர். இதைப் பல நாடுகளில் நேரில் செய்து காட்டியிருக்கிறார். இதேபோல, பெட்டியில் அடைத்து வைத்துப் பூட்டினாலும் திறந்துகொண்டு வந்துவிடுவார். அவருடைய தந்திரக் காட்சிகள் எந்த அளவு புகழ் பெற்றன என்றால், ஒரே ஊரில் தொடர்ந்து ஆறு மாதம் தினசரி நிகழ்ச்சிகளுக்கு ஒப்பந்தம் செய்வார்கள். தந்திரங்கள் பற்றி அவர் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.ஹூடினியின் நெருங்கிய நண்பராக இருந்தவர், ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் கதைகளை எழுதிய, ஆர்தர் கானன் டாயில். “நெருக்கமாக இருந்த இருவரும், கடுமையாக சண்டையிட்டுப் பிரிந்தார்கள்” என்றார் மாமா. காரணம் ஹூடினி செய்வது மந்திரமா தந்திரமா என்ற சர்ச்சைதானாம். எழுத்தாளர் டாயிலுக்கு ஆவி, மறுபிறவி போன்றவற்றில் நம்பிக்கை இருந்தது. ஏதோ ஆவிகளின் துணையுடன் தான் ஹூடினி தந்திரங்களைச் செய்து காட்டுகிறார் என்று டாயில் நினைத்துக் கொண்டிருந்தார். “ஆனால் ஹூடினிக்கு அதிலெல்லாம் துளியும் நம்பிக்கை கிடையாது. அது மட்டுமல்ல; அப்படி ஆவிகளுடன், பேய்களுடன் பேசுகிறோம், மந்திர ஜாலங்கள் செய்கிறோம் என்று சொல்லிக்கொள்வோருக்கு எதிராக, கடுமையாக பிரசாரம் செய்து வந்தார். அதற்கென்றே ஓர் சங்கமே நடத்திவந்தார்.” என்றார் மாமா.ஹூடினிக்கு, பலருடன் சண்டை ஏற்பட்டது. “முதலில் ஹூடினியின் பெயரே அவர் சொந்தப் பெயர் இல்லை. அவர் பெயர் எரிக் வீஸ். புகழ்பெற்ற பிரெஞ்சு தந்திரவாதி ழான் ராபர்ட் ஹூடின் என்பவர் பெயரிலிருந்து ஹூடினை எடுத்து ஹூடினி ஆக்கிக் கொண்டார். பின்னால் ழான் ஹூடினுக்கு எதிராக கருத்துச் சொல்லி, அவர் ஆதரவாளர்களின் விரோதத்தைச் சம்பாதித்தார்.” என்றது வாலு.ஹூடினி சர்ச்சைக்குரிய மனிதராக இருந்தபோதும், அவர்தான் உலகம் முழுவதும் தந்திரவாதிகளுக்கு ஒரு மரியாதையும், வசதியும் வருவதற்கு முன்னோடியாக இருந்திருக்கிறார். அமெரிக்க தந்திரவாதிகள் சங்கத்தை ஏற்படுத்தி, அதற்கு நிறைய பணம் செலவிட்டார். மந்திரவாதி என்று சொல்லிக்கொள்ளும் போலித் தந்திரவாதிகளை அம்பலப்படுத்தவும் பணம் செலவிட்டார். “இதில் ஆச்சரியம் என்ன என்றால், ஹூடினி இறந்தபிறகு ஒருவேளை அவருடைய நம்பிக்கைக்கு மாறாக ஆவியாக திரும்ப வந்து பேசினால் அவருடன் தொடர்புகொள்ள, ஒரு ரகசிய சங்கேத வார்த்தையை அவர் மனைவிக்கு மட்டும் சொல்லி வைத்திருந்தார். ஆவிகளுடன் பேசும் நிகழ்ச்சியை நடத்துவோர் மூலம், சுமார் பத்தாண்டுகள் ஹூடினியின் மனைவி, ஹூடினி திரும்ப வந்து பேசுகிறாரா என்று ஆராய்ந்துகொண்டே இருந்தார். “பெட்டியில் அடைத்து கடலில் போட்டபோதெல்லாம் திரும்பி வந்த ஹூடினி, இந்த முறை ஆவியாக திரும்ப வரவே இல்லை.” என்றார் மாமா.“கடலுக்குள் பெட்டியில் போடுவது, தண்ணீர் பீப்பாயில் அடைத்து வைப்பது எல்லாம் மேஜிக்தான். ஆனால் அந்தத் தந்திரங்களை சொல்லிக் கொடுத்தால், கடலுக்குள் மூழ்கி முத்து எடுக்கப் போகிறவர்களுக்காவது பயன்படும்.” என்றான் பாலு. “இது வேறு. அது வேறு. இப்போதெல்லாம் மூழ்கி முத்தெடுப்பதைவிட, செயற்கை முத்து தயாரிப்பதுதான் அதிகம்.” என்றேன். “செயற்கை முத்து என்றால் எப்படிச் செய்வார்கள்?” என்று கேட்டான் பாலு. “இயற்கை முத்திலேயே இரு வகை இருக்கிறது. முதல் வகை, நிஜமாகவே இயற்கையில் சிப்பியின் வயிற்றில் உருவாகும் முத்து. இரண்டாவது வகை, சிப்பியை எடுத்து அதில் முத்து உருவாக கல்ச்சர் முறையில் தூண்டுவது. மூன்றாவது, முழுக்க செயற்கை. மீன் செதிள்களின் திரவத்தை கண்ணாடி குண்டு மீது பூசி ஒட்டி முத்துபோல தோன்றச் செய்வது.” என்றார் மாமா.“சிப்பிக்குள் முத்து எப்படி உருவாகிறது?” என்றான் பாலு. “ஒரு மணல் துகளை சிப்பியின் வயிற்றில் வைத்தால், அதைச் சுற்றி முத்து உருவாகும் என்று தவறாகக் கருதப்படுகிறது. உண்மையில் ஒட்டுண்ணி என்கிற பேரசைட் சிப்பிக்குள் சென்றால்தான் முத்து உருவாகும். முத்து வேறு எதுவும் இல்லை. அந்த ஒட்டுண்ணியைக் கொல்ல, அதன் மீது அடுக்கடுக்காக படியும் சிப்பியின் வயிற்றில் இருந்து வரும் சுரப்புதான்.” என்றார் மாமா.தமிழ்நாட்டில் முத்து எடுப்பது எப்படி இருக்கிறது?“ஒரு காலத்தில் தூத்துக்குடிக்கு முத்துநகர் என்று பெயர். இப்போது அந்த பழைய பெருமை இல்லை. மன்னார் வளைகுடா முழுக்க சிப்பிகள் உற்பத்தியாகும். ஆனால், கடலின் அடிப்பகுதியைச் சுரண்டும் அளவுக்குப் பிரம்மாண்ட வலைகள் போட்டு மீன் பிடிப்பதால், சிப்பிகள் பிஞ்சாக இருக்கையிலேயே அழிந்து விடுகின்றன. 1800 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழக முத்துகள் உலகம் முழுவதும் அறியப்பட்டிருந்தன. இப்போது இருக்கும் 1200 முத்து குளிக்கும் தொழிலாளர்களும் சங்குகள்தான் எடுக்கிறார்கள்.” என்றது வாலு.“ஏதாவது மேஜிக் நடந்து, மறுபடியும் சிப்பி உற்பத்தி அதிகமானால் வருங்காலத்தில் நானும் கூட டைவர் தொழிலுக்குப் போவதைப் பற்றி யோசிப்பேன்.” என்றான் பாலு. “கடல் ஆராய்ச்சிக்காக டைவிங் போகலாம். மற்றபடி மேஜிக் எல்லாம் மேடையில்தான் சாத்தியம். வாழ்க்கையில் அல்ல.”என்றார் மாமா.வாலுபீடியா 1: ஹாரி ஹூடினி ( 24-.3.-1874 -- 31-.10.-1926) தன் தந்திரங்களைப் பிரபலமாக்க திரைப்படங்களிலும் நடித்தார், தயாரித்தார். சில படங்களுக்குப் பின், “இந்தத் தொழிலில் வருமானம் குறைவு” என்று சொல்லி, சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். விமானம் ஓட்டுவதில் ஆர்வத்துடன் இருந்த ஹூடினி, சொந்தமாக ஒரு விமானம் வாங்கி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று, அங்கே விமானம் ஓட்டிய முன்னோடிகளில் ஒருவரானார்.வாலுபீடியா 2: அடைக்கப்பட்ட பெட்டிக்குள் ஒன்றரை மணி நேரம் இருப்பது, தண்ணீர் பீப்பாயில் தலைகீழாக இருந்து தப்பித்து வருவது போன்ற தந்திரங்களைச் செய்ய, தன்னுடைய மூச்சுப் பயிற்சியே காரணம் என்று ஹூடினி கூறியுள்ளார்.வாலுபீடியா 3: மன்னார் வளைகுடா பகுதியில், முத்துக் குளிப்பதற்காக கடலில் இறங்கும் தொழிலாளர்களிடம் ஒரு சம்பிரதாயமான பழக்கம் உண்டு. வேறு கருவிகள் இல்லாமல் இடுப்பில் ஒரு கயிற்றை மட்டுமே கட்டிக்கொண்டு மூழ்குவார்கள். கயிற்றின் மறுமுனை, கரையில் ஒருவரிடம் இருக்கும். மூழ்கியவருக்கு ஆபத்து என்றால், கயிற்றை உலுக்கி குறிப்பு காட்டவேண்டும். உடனே வெளியே தூக்கிவிடுவார்கள். கரையில் கயிற்றைப் பிடித்திருப்பவர் எப்போதும் மைத்துனராகவே இருப்பாராம். காரணம், கடலில் இறங்கியவருக்கு ஆபத்து என்றால், தன் சகோதரியின் தாலிக்கு ஆபத்து என்ற கவலையில் கரையில் இருப்பவர் உஷாராக இருப்பாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !