வெங்கியைக் கேளுங்க!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. எனக்கு வயது 18. என்னுடைய குரலில் பெண் தன்மை இருக்கிறது. இதற்கு என்ன காரணம். மாற்றுவது எப்படி?நவீன்குமார், மின்னஞ்சல்ஒரே நீளம் உடைய மெல்லிய ஸ்ட்ரா, தடிமனான ஸ்ட்ரா இரண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள். பீப்பி ஊதுவது போல ஊதுங்கள். இரண்டின் ஸ்ருதியும் ஒன்றுபோல இருக்காது. நமது தொண்டையில் உள்ள குரல்வளையின் வழியாக, காற்றை பலமாகச் செலுத்தி குரல்வளையில் உள்ள குரல் நாண்களை அதிரச் செய்வதன் மூலமே நமது குரல் எழுகிறது. பிறக்கும்போது ஆண், பெண், குழந்தை எல்லோருக்கும் குரல் நாண் ஒரே நீளம் கொண்டவையாகவே இருக்கும். பருவமடையும்போது, ஆண்களில் அதிகரிக்கும் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) ஹார்மோன் குரல் நாண்களின் நீளத்தை அதிகரித்து, தடிமனாக்குவதால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. கழுத்தில் உள்ள 'ஆடம்ஸ் ஆப்பிள்' எனப்படும் தைராய்டு கார்டிலேஜ் குருத்தெலும்பு புடைத்து வெளிப்படும்போது, ஆண்களுக்கு 14 வயதில் குரல்வளையானது விரிவடைந்து குரல் உடைந்து மகரக்கட்டு ஏற்படும். சிலருக்கு சீக்கிரமே நடக்கலாம் அல்லது தாமதமாக நடக்கலாம்.பெண்களை விட ஆண்களின் குரல் நாண்கள் வேகமாக வளர்ச்சியடைவதன் காரணமாக, பெண்களின் குரல் நாண்கள் 1.25 செ.மீ. முதல் 1.75 செ.மீ. வளர்ச்சி அடையும்போது ஆண்களின் நாண்கள் 1.75 செ.மீ. முதல் 2.5 செ.மீ. வரை வளர்ந்துவிடும். இதன் காரணமாக ஆண்களின் குரலில் மாற்றம் ஏற்பட்டு பெண்களுக்கு இனிமையான கீச்சுக் குரலும், ஆண்களுக்குச் சற்று கடினமான குரலும் ஏற்படும். ஆண்களுக்கான ஆண்ட்ரோஜென் ஹார்மோன், பெண்களுக்கு அதிகமாகச் சுரந்தால் அல்லது ஆண்களைப் பொறுத்தவரை 15 வயதுக்கு மேலும் குரல்வளையானது விரிவடையவில்லை என்றால், குரலில் பெண்களுக்கு ஆண் குரலும், ஆண்களுக்குப் பெண் குரலும் ஏற்படும். மருத்துவரை அணுகி இவற்றைச் சரிசெய்வது பெரும்பாலும் இயலும். காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகுவது நலம்.2. நிலத்தடி நீர் எவ்வாறு உருவாகிறது? அந்த நீரின் சுவையானது ஆழத்தைப் பொறுத்து எவ்வாறு வேறுபடுகிறது?ல.மோனிஷ் ராம், 4ம் வகுப்பு,முஸ்லிம் நடுநிலைப் பள்ளி, தேனி.ஒரு சோதனை செய்து பாருங்கள். கண்ணாடிக் குடுவையில் கல், மண் போன்ற பொருட்களைப் போட்டு நிரப்புங்கள். மேலே மெதுவாக நீரை விடுங்கள். சிறிதுநேரத்தில் மேலே இருக்கும் நீர் கசிந்து ஒழுகி குடுவையின் கீழ் நோக்கி வருவதைக் காணலாம். அதனால்தான் வீட்டில் தொட்டிச் செடிகளை வளர்க்கும்போது, தொட்டியின் அடியில் நீர் கசிந்து தரையில் படாமல் இருக்க தட்டை வைக்கிறோம். இதே நிகழ்வுதான் நிலத்திலும் ஏற்படுகிறது. தரையில் விழும் மழை நீர், மண், கற்கள் இடையே உள்ள சிறிய துவாரங்களின் வழியாக பூமிக்கடியில் செல்லும். பூமிக்கு அடியில் செல்லும் நீர், ஒரே இடத்தில் தேங்குவது இல்லை. பள்ளம் நோக்கிப் பாயும்; எனவே பூமிக்கு அடியில் மேலும் பள்ளமான பகுதியில், மண், கல் இடுக்கு இருந்தால் அங்கே நீர் சென்று குவியும். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நிலத்துக்குள்ளே நீர் பாய்வதுதான் நிலத்தடி நீரோட்டம். எனவேதான் சில இடங்களில் அதிகமாகவும் சில இடங்களில் குறைந்தும் நிலத்தடி நீர் காணப்படும். பாறை, மண் போன்ற அடுக்கில் நீர் அளவு குறைந்து காணப்படும். சுண்ணாம்பு, கல், மணல் போன்ற செறிவு அதிகமாக உள்ள இடத்தில் கூடுதலாக நிலத்தடி நீர் கிடைக்கும். அந்த நீரின் சுவை ஆழத்தைப் பொறுத்து அமைவதில்லை. கசிந்து ஒழுகும் மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு நிலத்தடி நீரில் கரையும் பல்வேறு தாதுப் பொருட்கள் சேர்ந்து நீரின் தன்மை வேறுபடும். சில இடங்களில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் மாசு நீர் கலந்து, நச்சுப் பொருட்கள் நிலத்தடி நீரில் சேர்ந்து, நீரின் தன்மை மாறலாம்.3. எந்தப் பொருளை எரித்தாலும் புகை ஏன் வருகிறது? புகை வராமல் இருக்க என்ன செய்யலாம்?பொ.ஜெகன், 7ம் வகுப்பு, பழனியப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அவிநாசி.எந்தப் பொருளும் முழுமையாக எரிந்தால் அதிலிருந்து நீர், கார்பன்டை ஆக்சைடு மட்டுமே வெளியேற வேண்டும். ஆனால், எப்போதும் ஒரு பொருள் முழுமையாக எரிய போதுமான ஆக்சிஜனும் வெப்ப நிலையும் இருப்பதில்லை. எனவே முழுமையற்ற நிலையில், எரியாத பொருட்களே புகையாக வெளியேறுகிறது. ஆய்வுக் கூடங்களில் புகையே இல்லாமல் முழுமையாக எரிக்க முடியும், அப்போது புகை ஏற்படாது.4. கண்ணைச் சிமிட்டுவது ஏன்? ஒரு நேரத்தில் கண் வெண்மையாகவும், சிவப்பாகவும், மஞ்சளாகவும் இருக்கக் காரணம் என்ன?ரா. அஞ்சன நாராயண், 9ம் வகுப்பு, கோலப்பெருமாள் செட்டி வைணவமேல்நிலைப் பள்ளி, சென்னை.கண்ணாடியில் படியும் மழைத் துளிகளை காரில் 'துடைப்பான்' (Wiper) அகற்றிவிடுவதுபோல, இயற்கையாக நமது கண்களை உலராமல் ஈரப்படுத்தித் துடைத்துச் சுத்தப்படுத்தும் பணியே கண் சிமிட்டல். இயல்புக்கு மாறாக கண்கள் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் காட்சி தருவது பல்வேறு நோய் அல்லது உடல்நலக்குறைவைச் சுட்டுவதாக அமையும். கண் அயர்ச்சி, அலர்ஜி, கண்களில் தொற்றுநோய், உறக்கமின்மை போன்ற உடல் பாதிப்புகளாலும் கண்கள் சிவப்பாக இருக்கலாம்.ரத்தத்தில் பிலிருபின் (bilirubin) அளவு கூடும்போது, கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறலாம். அதேபோல சிக்கில் செல் அனீமியா இரத்தசோகை இருந்தாலும், கண்கள் மஞ்சள் நிறத்தில் தென்படலாம். சுமார் 28 வகையான நோய்களில் கண்கள் மஞ்சள் அல்லது சிவப்பாகத் தென்படலாம். எனவே கண்களின் நிறம் மாறினால் கண் மருத்துவரை அணுகுங்கள்.