உள்ளூர் செய்திகள்

வெங்கியைக் கேளுங்க!

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி'டிவி'யின் திரை, சீப்பு ஆகியவற்றுக்கு அருகே கையைக்கொண்டு செல்லும்போது முடிகள் ஈர்த்துக்கொள்வது ஏன்?சந்தோஷ்குமார், மின்னஞ்சல்.நிலை மின்சாரத்தின் (static electric) விளையாட்டே இது. தலையில் சீப்பைத் தேய்க்கும்போது, சீப்பில் இருக்கும் சில எலக்ட்ரான்கள் நகர்ந்து தலைமுடியில் சென்று ஒட்டிக்கொள்ளும். எனவே எலக்ட்ரான்களை இழந்த சீப்பு, நேர்மின்னேற்றம் அடையும். அதேபோல எலக்ட்ரான்களைப் பெற்றுக்கொண்ட தலைமுடி, எதிர் மின்னேற்றம் அடையும். நேர் எதிர் மின்னேற்றம் கொண்ட பொருட்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் அல்லவா? எனவே தான் சீப்புக்கு அருகே கையைக்கொண்டு செல்லும்போது, முடிகள் ஈர்த்துக்கொள்கின்றன. அதேபோல 'டிவி'யின் திரையில் எலக்ட்ரான்கள் வந்து விழுந்து, காட்சி ஏற்படுகிறது. எனவே, 'டிவி'யின் திரை இயங்கும் போதும், இயங்கிய பின் சற்று நேரம் கழித்தும் நிலை மின்சாரம் கொண்டு இருக்கும்.மருதாணி இலையை அரைத்துக் கையில் வைக்கும்போது சிவப்பாக மாறுவது ஏன்?பகலவன், 7ம் வகுப்பு, எம்.சி.சி. பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை.மருதாணி இலையில் லாசோன் (Lawsone) எனப்படும் C10H6O3 என்ற வேதிப்பொருள் உள்ளது. நமது தோல் செல்களில் உள்ள சில புரதங்களுடன் இந்த வேதிப்பொருள் பிணைந்துகொள்ள முடியும். தோல் செல்களில் வேதிப் பிணைப்பு காரணமாக, லாசோன் வேதிப்பொருள் படிந்துவிடுவதால், பல நாட்கள் அந்தச் சாயம் அப்படியே இருக்கிறது. நீரில் லாசோன் கரையாது; எனவே, இந்த வேதிப் பொருளை முதலில் தோலில் உள்ள செல்களில் படியச்செய்வதற்கு, ஏதாவது கரைப்பானைப் பயன்படுத்த வேண்டும். தேயிலைச் சாறு, சர்க்கரைக் கரைசல் முதலியன இதற்குப் பயன்படும். துருப்பிடிக்கும் அதே நிகழ்வான 'ஆக்சிஜன் ஏற்றம்' காரணமாக, நாள்பட லாசோன் நிறம் மாறும்; பின்னர் இயல்பாக புறத்தோல் செல்கள் மடிந்து புதிய செல்கள் தோன்றும்போது, மருதாணி சாயம் மங்கி மறையும். 'சர்க்கரைத் துளசி' நீரிழிவு நோயைத் தடுக்கும் என்கிறார்கள். அந்தத் தாவரத்தில் என்ன இருக்கிறது?ஜி. இந்துமதி, 7ம் வகுப்பு, பிரின்ஸ் மெட்ரிக், நங்கநல்லூர், சென்னை.சர்க்கரை, குளூகோஸ் போன்ற பல்வேறு மூலக்கூறுகள் நமது நாக்கில் இனிப்புச் சுவையைத் தூண்டும். தாவரப் பொருட்களிலிருந்து பிரித்து எடுப்பதை இயற்கை இனிப்பு எனவும், செயற்கை முறையில் தயாரிப்பதை செயற்கை இனிப்பு எனவும் கூறுகிறோம். பிரேசில், பராகுவே போன்ற தென் அமெரிக்க நாடுகளைத் தாயகமாகக் கொண்ட 'ஸ்டீவியா ரெபோடியானா' (Stevia Rebaudiana) எனும் சூரியகாந்தி குடும்ப தாவரம்தான் சீனித்துளசி அல்லது சர்க்கரைத் துளசி. தாவரவியல்படி, இது பேசில் வகை சார்ந்த தாவரம் இல்லை. இதன் இலையில் இனிப்புச் சுவை தரும் ஸ்டீவியோசைடு (stevioside), ரெபாடியோசைடு (Rebaudioside) போன்ற ஸ்டீவியால் கிளைகோசைடு (Steviol Glycosides) வேதிப்பொருட்கள் செறிவாக இருப்பதால், கரும்புத் தண்டில் இனிப்புச் சுவை இருப்பது போல இதன் இலையே இனிப்பாக இருக்கும். இந்த மூலக்கூறுகள் சர்க்கரையின் இனிப்புச் சுவையைவிடவும் 250 - 300 மடங்கு கூடுதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவேதான், இதனை உள்ளூர் மக்கள் மிட்டாய் இலை (Candy Leaf), இனிப்பு இலை (Sweet Leaf), சர்க்கரை இலை (Sugar Leaf) என அழைத்து வந்தனர். கரும்பு மட்டுமல்ல; இலுப்பைப்பூ, பீட்ரூட் முதலியவையும் இனிப்புச் சுவை தரும்.இனிப்பைப் பெற சாதாரண சர்க்கரையைவிட 250 மடங்கு குறைவாக ஸ்டீவியா இனிப்பைப் பயன்படுத்தினால் போதும். இதனால் நாம் உட்கொள்ளும் கலோரி அளவு குறைவதால், உடல் பருமனைக் குறைக்க உதவும் எனவும் பலர் கூறுகின்றனர். எனினும் கூடுதல் இனிப்புச் சுவை தரும் பொருட்கள் நடைமுறையில் பயன் தருவதில்லை என, பல ஆய்வுகள் சுட்டுகின்றன. இதை உட்கொண்டால் சர்க்கரை நோய் அகலும் என்றோ, சர்க்கரை நோய் வராது என்றோ கூற முடியாது. சர்க்கரை நோயாளிகள் இனிப்பை ஆபத்தில்லாமல் சுவைக்க இதைப் பயன்படுத்தலாம், அவ்வளவே. சர்க்கரை செறிவாக உள்ள உணவை உட்கொள்ளும்போது, ரத்தத்தில் குளூகோஸ் அளவு கூடும்; சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஆபத்து. ஆனால், ஸ்டீவியா இனிப்பைப் பயன்படுத்தும்போது, ரத்த குளூகோஸ் கூடவில்லை என்பதால், சிலவகை சர்க்கரை நோயாளிகள் ஆபத்தில்லாமல் இதைப் பயன்படுத்தலாம் என்கின்றனர்.ஒருவரைப் போல் ஏழு பேர் இருந்தாலும், ஒவ்வொருவரின் கைரேகையிலும் வித்தியாசம் இருக்கிறதே அது எப்படி? எந்த விதத்தில் கைரேகை அமைகிறது?ச.விக்னேஷ்வரன், 9ம் வகுப்பு, கோலபெருமாள் செட்டி வைணவ மேல்நிலைப் பள்ளி, சென்னை.'ஒருவர் போல் ஏழு பேர்' என்பது வழக்கு நம்பிக்கையே தவிர, அதுதான் உண்மை என ஏற்கும் அளவுக்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. கருவில் சிசுவாக இருக்கும்போது, 10வது வாரத்தில் கைரேகை உருவாக ஆரம்பித்து 16வது வாரத்தில் நிலைபெறுகிறது. கைவிரல்களின் புறத்தோல், உள்தோல் இடையே ஏற்படும் வினைதான் கைரேகை. ரத்த அழுத்தம், ஹார்மோன் அளவு, ஆச்சிஜன் அளவு கைவிரல்களை மடக்கிய விதம் என, பலவேறு தாக்கங்களின் கூட்டு விளைவே கைரேகை.இந்தக் கூட்டு தூண்டுதலால் தோல் செல்களில் சில இடங்களில் கூடுதல் செல்கள் தோன்றி மேடாகவும், சில இடங்களில் குறைவான செல்கள் அமைந்து பள்ளங்களாகவும் ஆகி, கைரேகை அமைப்பு உருவாகிறது. இவை எல்லாம் நம்மால் கணிக்க இயலாதபடி தன் போக்கில் ஏற்படும் தற்போக்கு (random) வினை. எனவேதான், ஒருவருக்கு இருக்கும் அதே கைரேகை மற்றவருக்கு அமையாது எனக் கருதப்படுகிறது. சிசு உருவான பிறகு, பிற்காலத்தில் தோல் செல்கள் உதிர்ந்து புதிய தோல் செல்கள் உருவாகும்போது, ஏற்கெனவே இருந்த அதே அமைப்பில்தான் ஏற்படும். எனவே பிறக்கும்போது உள்ள அதே கைரேகை நாம் மடியும் வரை தொடர்கிறது.1901ல் முதன்முறையாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் துப்புத்துலக்க கைரேகையைப் பயன்படுத்தினர். அதுமுதல் இன்று வரை இரண்டு ஒத்த கைரேகைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !