வெங்கியைக் கேளுங்க!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிமழை பெய்யும்போது கருப்பு நிறத்தில் தெரியும் மேகம், இரவு நேரத்தில் பொன்னிறத்தில் தெரிகிறதே ஏன்?எஸ்.யுவராஜ், 11ம் வகுப்பு, பி.எஸ்.ஜி. சர்வஜன மேல்நிலைப் பள்ளி, பீளமேடு, கோவை.ஒளிவிளக்குக்கு நேராக காகிதத்தைப் பிடித்துப் பார்க்கவும். ஒளி ஊடுருவி மங்கலாகப் புலப்படும். ஒரு காகிதத்துக்குப் பதிலாக இரண்டு, மூன்று என எண்ணிக்கையை கூட்டிக்கொண்டே போகவும். குறிப்பிட்ட நிலையில் ஒளிக்கசிவு நின்றுவிடும். அதாவது, ஒளி ஊருடுவும் பொருளின் தடிமன் கூடினால் ஒரு கட்டத்தில் ஒளி ஊடுருவது நின்றுவிடும். மேகம் என்பது நீர் நுண்திவலைகள், நுண் பனித்துகள்கள், நீராவி, காற்று முதலியவற்றின் கலவை. சூரியஒளி இதன் வழியே ஊடுருவும் என்பதால்தான், மேகம் வெள்ளை நிறத்தில் பளிச்சிடுகிறது. இடி, மின்னலின்போது மழை மேகம் உருவாகிறது என்றால், முதலில் அந்த மேகத்தின் உயரம் கூடியிருக்கிறது என்று பொருள். அதாவது, அதன் தடிமன் அதிகரிக்கிறது, எனவே, அதன் வழியே ஊடுருவும் ஒளியின் அளவு குறைகிறது. அதன் அடிப்பாகம் சாம்பல் நிறத்தை அடைகிறது. மேகத்தின் உயரம் கூடக்கூட, அதன் அடிப்பாகம் மேன்மேலும் கருமை அடையும். மழை மேகத்தின் உயரம் கூடுதலாக இருப்பதால், கூடுதல் மழைப் பொழிவைத் தரும். மேகம், தானாக ஒளிரும் பொருள் அல்ல; சூரியனற்ற இரவில் நிலவொளி அல்லது நகரத்தின் சாலை விளக்குகளின் ஒளி மேகத்தின் மீது பட்டு ஒளிச்சிதறல் ஏற்படும். அடர்த்தி குறைவான மேகமாக இருந்தால், ஒளிச்சிதறல் குறைவாக நிகழ்ந்து, வெள்ளை நிறத்திலும், சற்றே அடர்த்தி கூடிய மேகமாக இருந்தால், ஒளிச்சிதறல் அதிகரித்து சிவப்புச் சாயல் கொண்ட பொன்னிறமாகத் தோன்றும்.பூரானுக்கு அதிக கால்கள் இருக்கின்றன. உருவத்துக்கும் உயிர்களின் கால்களுக்கும் என்ன தொடர்பு?காந்திராஜன், 5ம் வகுப்பு, ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.பெரிய விலங்கான யானைக்கு நான்கு கால்கள்; சிறிய விலங்கான மரவட்டை, பூரானுக்கு பற்பல கால்கள். கால்களின் எண்ணிக்கைக்கும் உடல் பருமனுக்கும் சம்பந்தமில்லை என்றாலும், உடலமைப்புக்குச் சம்பந்தம் உண்டு.பூரானுக்கு 15 முதல் 177 ஜோடி கால்கள் இருக்கும். மரவட்டைக்கு 200 ஜோடிக்கும் அதிகமாக இருக்கும். பூரானுக்கும் மரவட்டைக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? பூரானின் உடலில் உடற்கூறு துண்டத்தில் ஒரே ஒரு ஜோடி கால்கள்தான் இருக்கும். ஆனால் மரவட்டையில் ஒவ்வொரு உடற்கூறு துண்டத்திலும் இரண்டு ஜோடி கால்கள் இருக்கும். பூச்சிகள் என்று நாம் அழைத்தாலும், ஆறு கால்களை உடைய பூச்சிகளிடமிருந்து வேறுபட்ட தன்மை கொண்ட இந்த விலங்குகள், பலகால் உயிரிகளான மிரியாபோடா (Myriapoda) இனத்தைச் சார்ந்தவை. ஒரே மாதிரியாக இருக்கும் ரயில் பெட்டிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து ரயில் வண்டித் தொடரை உருவாக்குவது போல இந்த வகை உயிரிகளில் உடற்கூறு துண்டங்களின் தொகுப்பு காணப்படுகிறது. முற்காலத்தில் ஒவ்வொரு துண்டமும் தனித்தனியாகச் செயல்படும்படி இருந்தது. அந்த அழிந்துபோன உயிரிகளிடமிருந்து பரிணமித்தவைதான் பூரானும் மரவட்டையும். காலப்போக்கில் தலைப்பகுதி கண்டம் உணர்வதற்கும், தொண்டைப் பகுதி கண்டம் சலனம் செய்வதற்கும் என உருமாற்றம் நிகழ்ந்து, இன்றைய விலங்காகப் பரிணமித்து உள்ளது. நீளவாக்கில் திசுவும் உடலுறுப்புகளும் ரயில் பெட்டிபோல தொடர்ச்சியாக கண்டம் கண்டமாக சீராக அமைந்த உடற்கூறு கொண்ட இதுபோன்ற விலங்குகளை, சீரமைப்புக் கண்டம் (Metameres) என்று அழைப்பார்கள். இந்த அமைப்பின் மிச்ச சொச்சமே நமது முதுகெலும்பின் அமைப்பு.அந்தக் கால மனிதர்கள் போல இறைச்சி, மீன் போன்றவற்றை வேக வைக்காமல் சாப்பிட்டால் தீங்கு ஏற்படுமா?மு.அஃப்ரின் பாத்திமா, 10ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.தீயைப் பயன்படுத்தி சமையல் செய்யக் கற்றுக்கொண்ட பின்பே நவீன மனிதன் பிறந்தான். 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன், நவீன மனிதன் தோன்றுவதற்கு முன்பிருந்த மனித இன மூதாதையர்கள் தீயைப் பயன்படுத்தினார்கள். 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஹோமோ எரக்டஸ் (Homo erectus) இனம் தீயைப் பயன்படுத்தியது. நவீன மனித இனம், சுமார் 1,25,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் தீயைப் பயன்படுத்தி வருகிறது. எனவே, அந்தக் கால மனிதர்கள் போல இறைச்சி, மீன் போன்றவற்றை வேக வைக்காமல் சாப்பிடுவது தவறு! மனித பரிணாமத்தில் மூளையின் விகிதம் உயர்ந்து வரும்போது குடல்நாள நீளம் குறைந்து போனது. மனிதனின் எடையில் வெறும் 2 சதவீதம் இருக்கும் மூளைக்கு 20 சதவீதம் ஆற்றல் தேவைப்படுகிறது. இந்தச் சூழலில் அதிக ஆற்றலை குறைவான நேரத்தில் விரைவாக மனிதன் பெறவேண்டும் என்றால், எளிதாக உட்கொள்ளும் உணவின் ஆற்றலை மனித வயிறு ஜீரணிக்க வேண்டி வந்தது. இந்தச் சூழலில், சமையல் உதவியது என்கின்றனர் பரிணாம ஆய்வாளர்கள். சமைத்த உணவு சிறுசிறு துணுக்குகளாக மாறும் என்பதால், அதிலிருந்து எளிதில் மாவுச்சத்து, கொழுப்பு போன்ற பொருட்களை குடலால் எடுத்துக்கொள்ள முடியும். 5 மணிநேரம் உணவைக் கொறித்து உண்ணும் ஒரு சிம்பன்சிக்கு கிடைக்கும் ஆற்றலை, சமையல் மூலம் வெறும் ஒரு மணி நேரத்தில் மனிதனால் பெற முடிந்தது. மனிதன் மனிதனாக மாறியதற்கு, சமையலும் ஒரு காரணம் என்கின்றனர். இறைச்சி, காய்கறிகளை வேகவைக்காமல் உண்ணும்போது, சில சமயம் அது வழியாக கிருமிகள் செல்லக்கூடும் எனவும், சிலசமயம் வயிற்றில் அமிலச் சுரப்பு கூடுதலாக ஏற்படும் எனவும் எச்சரிக்கை செய்கின்றனர். காட்டில் வசித்து வந்தபோது, ஆதி மனிதன் சந்தித்த உணவுப் பற்றாக்குறையை இன்று நாம் சந்திக்கவில்லை. அதனால், அன்று செய்தது போல இன்றும் சமைக்காமல் உண்பதில் பிரச்னை ஒன்றுமில்லை என்பது ஒரு சிலரின் வாதமாக இருக்கிறது.