வெங்கியைக் கேளுங்க!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. காந்தங்களில் வட, தென் துருவம் இருக்கும். காந்தம் வட்டமாக இருந்தால் வடக்கு, தெற்கை எவ்வாறு அறிவது?பி. ஜெகதீஸ்வரி, 12ஆம் வகுப்பு, கே.ஆர்.எம். மெட்ரிக் பள்ளி, பெரம்பூர், சென்னை.நமக்குத் தெரிந்து துருவம் இல்லாத காந்தமே இல்லை. காந்தம் எந்த வடிவத்தில் இருந்தாலும், அவற்றுக்குத் துருவம் இருக்கும். பந்து வடிவில் இருக்கும் பூமிக்கு, வட, தென் காந்தத் துருவங்கள் உள்ளன என்பதை நாம் அறிவோம். வட்டமாக, கைவளை வடிவில் உள்ள காந்தத்தில் துருவங்கள் பல்வேறு வகையில் அமையலாம். * வட்டத்தின் ஒரு பாதி வட துருவமாகவும் இன்னொரு பாதி தென் துருவமாகவும் அமையலாம்* வளையத்தின் உட்பகுதி ஒரு துருவமாகவும் வெளிப்பகுதி இன்னொரு துருவமாகவும் அமையலாம்* வளையத்தின் மேல்பகுதி ஒரு துருவமாகவும் கீழ்ப்பகுதி இன்னொரு துருவமாகவும் அமையலாம் அல்லது பட்டை பட்டையாக வளையத்தில் பல வட, தென் துருவங்கள் அமையும்படியாகக் காந்தம் செய்ய முடியும். ஆகவே, காந்தம் எந்த வடிவத்தில் இருந்தாலும் வட, தென் துருவங்கள் நிச்சயம் இருக்கும். 2. மனிதர்களைப் போல் மற்ற உயிரினங்களுக்கும் தும்மல், விக்கல், வாந்தி ஏற்படுமா?ஜெ.லட்சுமிதேவிப்ரியா, 12ஆம் வகுப்பு, கே.சி.ஏ.டி. பதின்ம மேல்நிலைப் பள்ளி, சாத்தூர்.நுரையீரல் கொண்ட எல்லா விலங்குகளுக்கும் தும்மல் வரும், விக்கல் எடுக்கும். விக்கல், தும்மல், வாந்தி ஆகியவை உணவுக்குழாய், சுவாசக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால், அந்த அடைப்பைச் சுத்தம் செய்வதற்காக நிகழும் உடலியல் இயக்கங்களே! விலங்குகள் கொட்டாவிகூட விடும். இதுபோன்ற உடலியக்கச் செயல்கள் விலங்கினத்தில் பொதுவானது. நமது உடல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, நம்மை அறியாமலேயே செய்யும் பல காரியங்களில் தும்மல், கொட்டாவி, விக்கல், மயிர்க்கூச்செரிதல், சோம்பல் முறித்தல் போன்றவை அடங்கும்.3. ரோஜா போல் மற்ற பூக்களில் ஏன் முட்கள் இருப்பதில்லை?குணசேகரன், 5ஆம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.தாவரங்களுக்கு, முள் ஒரு பாதுகாப்பு. அந்த வகையில் ரோஜாக்களுக்கும் முள் உள்ளது. வெவ்வேறு தாவரங்களுக்கு வேறுவகையான பாதுகாப்புகள் இருக்கின்றன. சில தாவரங்கள் கசப்புச் சுவையையும், சில தாவரங்கள் உமிழும் வேதிப்பொருட்களையும் கொண்டு அதனைக் கடித்துக் குதற வரும் பூச்சிகளுக்கு விஷமாக மாறுகின்றன. இவை அத்தனையும் தாவரங்களின் வளர்ச்சிப் பரிமாற்றத்துக்காகவும் பாதுகாப்புக்காகவும் அமைந்துள்ளன.தாவரங்கள் போலவே, விலங்குகளுக்கும் பாதுகாப்பு அமைப்பு உண்டு. ஆமை மீது இருக்கும் ஓடுதான் அதற்குக் கவசம். போராட வேண்டும் என்பதற்காகவே சிங்கத்துக்குக் கூரிய நகங்கள் உண்டு. முள்ளம்பன்றிக்கு உடல் எல்லாம் முள். அதுபோல ஒவ்வொரு விலங்கினமும் தனித்தனியான பாதுகாப்பு அமைப்பைக் கொண்டுள்ளன.4. பூமிக்கும் கோள்களுக்கும் இடையில் இருக்கும் கடக்க முடியாத தொலைவை 'ஒளி ஆண்டுகள்' என்கிறார்கள். அப்படியிருக்க, இந்தத் தொலைவை எவ்வாறு வேகமாகக் கணக்கிட்டார்கள்?சபரிநாதன், 11ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கணபதிபாளையம், திருப்பூர்.சென்டிமீட்டர், மீட்டர், கிலோமீட்டர் போன்ற ஓர் அளவைதான் 'ஒளியாண்டு'. ஒளியானது ஒரு நொடியில் 3,00,000 கி.மீ. தொலைவு செல்லும். அதாவது ஒரு நிமிடத்தில் 180 லட்சம் கி.மீ. செல்லும். ஒரு நாளில் 259.2 கோடி கி.மீ. தூரம் ஒளி பயணிக்கும். அதுபோல ஓராண்டில் எவ்வளவு தொலைவு ஒளி பயணிக்குமோ அந்தத் தொலைவுதான் 'ஒளியாண்டு.' சூரியனுக்கு அருகே உள்ள விண்மீன், புரோக்சிமா சென்ட்டாரி (Proxima Centauri). இது சுமார் 4.22 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இதன் தொலைவை எப்படி அளவிட்டார்கள்? கையை நன்றாக நீட்டி உங்கள் முகத்தின் நேரே பெருவிரலை உயர்த்திப் பிடிக்கவும். இரண்டாவது கையால் மாறி மாறி வலது, இடது கண்களை மூடி ஒரு கண்ணால் விரலைப் பார்க்கவும். விரல் நகர்வது போன்ற தோற்றம் ஏற்படும். அதேபோல உலகின் இரு மூலையில் இரண்டு தொலைநோக்கி வைத்து, இதே விண்மீனைப் பார்த்தால் பின்புறம் உள்ள விண்மீன் திரையில் இந்த விண்மீனின் இடம் மாறிமாறி அமையும். இதை 'இடமாறு தோற்றப்பிழை' (Parallax) என்பார்கள். எவ்வளவு இடமாறு தோற்றப்பிழை என்பதை அளந்து, அந்த விண்மீனின் தோராயமான தொலைவை அளக்கலாம். இந்த முறையிலேயே வானில் உள்ள பல வான்பொருட்களின் தொலைவைக் கணக்கிடுகிறார்கள்.