வெங்கியைக் கேளுங்க!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஎல்லா நாடுகளிலும் சூரியன் கிழக்குத் திசையில் மட்டும் உதிப்பது ஏன்? மாற்றுத் திசைகளில் உதிக்காதா?த.ராஜ்குமார், 10ஆம் வகுப்பு, ஆர்.கே.எம். உறைவிட உயர்நிலைப் பள்ளி, மயிலாப்பூர்.சூரியன் எங்கேயும் உதிப்பதில்லை! மாறாக, பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்வதால் உதிப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.ஓடும் பேருந்தில் இருந்து பார்த்தால் சாலையோரம் உள்ள பனைமரங்கள் எதிர்த் திசையில் ஓடுகிற தோற்ற மயக்கம் ஏற்படும். அதுபோல, மேற்கில் இருந்து கிழக்காக பூமி சுற்றும்போது, நிலையாக இருப்பதாகக் கற்பனை செய்தால், சூரியன் கிழக்கில் இருந்து மேற்குநோக்கி நகர்வது போன்ற தோற்ற மயக்கம் ஏற்படும். இதனால்தான் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைவது போன்ற மயக்கம் ஏற்படுகிறது. பூமியின் எல்லா இடங்களிலும் மேற்கிலிருந்து கிழக்காகவே பூமி சுற்றுகிறது. எனவே, கிழக்கில் இருந்து மேற்காக ஒவ்வொரு நாடும் ஒன்றன்பின் ஒன்றாக சூரியனை நோக்கி வருகின்றன. எனவே, சூரியன் கிழக்கில் உதிப்பது போன்ற நிகழ்வு பூமியெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது. தன்னைத்தானே பூமி சுற்றும்போது, ஒரு சமயத்தில் பூமியின் குறிப்பிட்ட பகுதி சூரியனை நோக்கி அமையும். அப்போது அங்கே பகல் ஏற்படுகிறது. பூமி சூரியனுக்குப் பின்பக்கம் போகும்போது, அந்தப் பகுதியில் இரவு ஏற்படுகிறது.குண்டாக இருப்பவர்களை ஒல்லியாக மாற்ற மருந்துகள் இருப்பதுபோல் குள்ளமானவர்களை உயரமாக்க முடியுமா?ஆ.விக்னேஷ், 6ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, குருவாயல், திருவள்ளூர்.குண்டு, பருமன், ஒல்லி என்பதெல்லாம் சதைக் கொழுப்பு தொடர்பானது. அதை ஓர் அளவுக்குள் கூட்டலாம், குறைக்கலாம். உயரம், குள்ளம் என்பது நமது எலும்புகளைச் சார்ந்து அமைகிறது. பிறக்கும்போது சிறிய அளவில் குருத்தெலும்பாக உள்ள எலும்புக்கூடு, வளர வளர முதிர்ச்சி அடைகிறது. எலும்புகளின் முனையில் படியும் முனைவளரித் தகடு எனும் படலம் வளரிளம் பருவத்தில் முதிர்ந்துவிடும். இந்த வளர்ச்சி 18 -- 25 வயதுக்குள் நடந்துவிடும். முனைவளரித் தகடு இறுகிவிடுவதால் அதற்கு மேலே எலும்புகள் நீண்டு வளர முடிவதில்லை. எனவே, அந்த நிலை வரை ஏற்படும் உயரமே வாழ்நாள் முழுவதும் நமது உயரமாக அமைந்துவிடுகிறது. வளரும் பருவத்தில் போதிய அளவு புரதச்சத்து கிடைத்தால் முடிந்த அளவுக்கு உயரம் கூடும். ஜப்பானில் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, கூடுதல் புரதம் அனைவருக்கும் கிடைத்த சூழலில் அவர்களது உயரம் சராசரி மூன்று அங்குலம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஆமையால் எவ்வாறு நூறு வயது வரை வாழ முடிகிறது?சௌ.சக்திபூஜா, 7ஆம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருச்சி.இந்தக் கேள்விக்கு முழுமையான பதிலை ஆய்வுகள் இதுவரை தரவில்லை. மரபணுவில் இதற்கான பதில் இருக்கலாம் என யூகம் செய்கிறார்கள். சிலவகை ஆமைகள், முன்னூறு ஆண்டுகள் கூட வாழ்கின்றன. சில விலங்குகள் மட்டும் ஏன் நீண்டகாலம் வாழ்கின்றன என்பதை ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். கரு உருவாகும் போது ஒரே ஒரு செல்தான். அந்த ஒரு செல் நகல் எடுக்கப்பட்டு 2, 4, 8, 16, 32 என பல்கிப் பெருகி வளர்ச்சி ஏற்படுகிறது. ஒரு பக்கத்தை ஜெராக்ஸ் செய்து அந்த ஜெராக்ஸ் நகலை வைத்து மறுபடி நகல் எடுப்பது போலவே! அவ்வாறு தொடர்ந்து நகலை ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டே இருந்தால், வார்த்தைகளின் வடிவம் மங்கிவிடும். அதுபோல செல்பிரிதல் மூலம் மரபணு நகல் எடுக்கும் போதும் சிலசமயம் பிழைகள் ஏற்படும். இந்தப் பிழைகளைக் களைய மரபணுவில் பிழை திருத்தும் பகுதியுள்ளது. நீண்டகாலம் வாழும் விலங்குகளில் பிழை திருத்தும் பகுதி திறன்மிக்கதாக இருக்கிறது என ஓர் ஆய்வு சுட்டுகிறது. இந்த இயக்கத்தைச் சரியாக அறிந்துகொண்டால் மனிதர்களின் ஆயுளையும் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.ராமேஸ்வரத்தில் மிதக்கும் கல்லைப் பார்த்தேன். அது எப்படி மிதக்கிறது?சி.சந்தோஷ்குமார், 9ஆம் வகுப்பு, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.அமெரிக்கா, பெர்க்லி ஆய்வகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் இந்த மர்மம் குறித்து ஆய்வு செய்துள்ளனர். கண்ணாடி புட்டியின் வாயை அடைத்து உள்ளே இருக்கிற காற்றை வெளியே வரமுடியாமல் செய்தால், நீரில் புட்டி மிதக்கும். மூடியில் உள்ள சிறு இடுக்கு வழியே நீர் கசிந்து பல காலம் ஆன பின்பே, மெல்ல மெல்ல புட்டி மூழ்கும். அதேபோல நுரைக்கல் வகையைச் சார்ந்த இந்தக் கற்களின் உள்ளே பல நுண்துளைகளும் வாயுக்களும் நிரம்பியுள்ளன. வாயு மிகுந்த இந்தக் கற்கள், அடர்த்தி குறைவு என்பதால் நீரில் மிதக்கின்றன.காலப்போக்கில் இந்தக் கற்களின் நுண்துளைகளிலும் நீர் கசிந்து உள்ளே செல்லும். அப்போது இந்தக் கற்கள் மூழ்கும். ஆயினும், கடல் வெப்பம் அதிகரித்தால் வெப்பத்தால் விரிவடையும் வாயுவின் காரணமாக மூழ்கிய கல் மேலே வரும் எனவும் கண்டுபிடித்துள்ளனர்.