உள்ளூர் செய்திகள்

வெங்கியை கேளுங்கள்

மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிதசை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு பேச முடியாத நிலையில் உள்ள ஸ்டீபன் ஹாக்கிங் தன்னுடைய கருத்துகளைப் பிறருக்கு எவ்வாறு தெரிவிக்கிறார்?தேவி ரம்யா (மின்னஞ்சல்)ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு 1985ல், நிமோனியா தொற்றுநோய் காரணமாக மூச்சு முட்டல் ஏற்பட்டது. தொண்டையில் ஓட்டை ஏற்படுத்தி மூச்சு விடுவதைச் சீர் செய்யும் சிகிச்சையில் அவருக்குப் பேசும் சக்தி போனது. இன்று பல கணினிகளில் நாம் வார்த்தைகளை தட்டினால் போதும் அந்த வார்த்தைகளைப் 'படித்து' ஒலி எழுப்பும் கணினி மென்பொருள்கள் உள்ளன. சுமார் முப்பது ஆண்டுகள் முன்னால் வால்டேர் வோல்ட்டோஸ் (Walter Woltosz) என்பவர் கையால் கணினி விசைப்பலகையை (Keyboard) தட்டினால் அதை உணர்ந்து வார்த்தைகளைச் சத்தமாக மாற்றும் மென்பொருளை உருவாக்கினார். கூர்மையான பயிற்சி மூலம் விரல் அசைவில் தேர்வான வார்த்தைகளைத் தெரிவு செய்து கணினி அதைச் சத்தமாக மாற்றும்படி அமைத்து ஸ்டீபன் ஹாக்கிங் மறுபடியும் 'பேசும் திறனை' பெற்றார்! இன்று மிகவும் ஆற்றல் வாய்ந்த கணினி கொண்டு கன்னத்தில் அவர் ஏற்படுத்தும் அசைவைக் கொண்டு வார்த்தைகளை உருவாக்கி சத்தம் எழுப்பும் நவீன கணினி கருவியை அவர் பயன்படுத்துகிறார். இது எளிதான காரியமல்ல. இங்கே அங்கே என ஒவ்வொரு வார்த்தைக்கும் சரியானபடி கன்னத்தில் அசைவுகளை ஏற்படுத்த வேண்டும். நீண்ட கால பயிற்சிக்கு பின்னர்தான் இது சாத்தியம். இவ்வாறு கணினி மூலம் பெரும் முயற்சியில் அவர் பேசி வருவது நிச்சயம் பெரிய சாதனைதான்.பேய் இருக்கிறதா? முதலில் தோன்றிய மனிதன் போல, முதலில் தோன்றிய பேய் எது?தவஸ்ரீ, 8ஆம் வகுப்பு, ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக், ஊரல்பட்டி, கொடைக்கானல்.மனிதன் மரணத்தின் மீது அச்சம் கொள்ளத் தொடங்கியபோதுதான் 'முதலில் தோன்றிய பேய்' உருவாகியது. பேய் என்பது கற்பனையே. ஆயினும் உலகில் சுமார் மூன்றில் ஒருவர் பேய் குறித்து நம்பிக்கை வைத்து உள்ளனர் என ஓர் ஆய்வு காட்டுகிறது. தூக்க நிலை மற்றும் மரண நிலைக்கு என்ன வித்தியாசம் எனத் தெரியாமல் குழம்பி மரணத்தை 'மீளாத்துயில்' எனக் கருதி இறப்புக்குப் பிறகு ஆத்மா, பேயாக மறு உலகில் அலையும் என்று முற்காலத்தில் பல சமூகங்களிலும் கற்பிதம் செய்தனர். இறந்த மனிதன் மறுபடி உயிர் பெறுவான் அல்லது மேலுலகிற்குச் செல்வான் என்ற கருத்தில் தான் சவப்பெட்டியில் உணவுப் பொருள் முதலியவற்றை அடைத்துப் புதைத்தனர். இன்று அறிவியல் வளர்ந்துள்ள நிலையில் மரணம் என்பது என்ன என நாம் மேலும் துல்லியமாக அறிந்து அதற்கும் நித்திரைக்கும் வெளித்தோற்றத்தைத் தவிர எந்தவிதத் தொடர்பும் இல்லை என விளங்கியுள்ளோம். தூக்க நிலையில் பார்வைக்கு அமைதியாகச் சலனம் இன்றித் தெரிந்தாலும் மூளை இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் மரணத்தில் மூளை முற்றிலும் செயல் இழந்து விடுகிறது. Na எனும் நைட்ரஜன் Cl எனும் குளோரைடு இரண்டும் பிணைந்து NaCl என்றால் உப்பு. இந்த வேதியியல் பிணைப்பு சிதைந்தால் உப்பு சுவை அற்ற இரண்டு வேதி பொருள்கள். அவ்வாறுதான் உயிரிவேதி பிணைப்பு உயிரின் உயிர்நாடி. உயிரிவேதி பிணைப்பு அற்றுப் போகும்போது ஏற்படும் நிலைதான் மரணம் என நவீன அறிவியல் கருதுகிறது. கானல் நீர் என்றால் என்ன? கானல் நீர் வெயிலில் மட்டும் தெரிவது ஏன்?எம். மிதுன்சாய், 5ஆம் வகுப்பு, திருவள்ளுவர் பிரைமரி ஸ்கூல், மடத்துக்குளம்.ஒரு கண்ணாடி கிளாசில் பாதி அளவு நீரை நிரப்பு. அதனுள்ளே ஒரு பென்சிலை வை. நீரும் காற்றும் சந்திக்கும் பகுதியில் பென்சில் வளைந்துள்ளது போன்ற காட்சி மயக்கம் ஏற்படும் அல்லவா? இதனை ஒளிவிலகல் பண்பு (Refraction) என்பர். அடர்த்தி கூடுதலான ஓர் ஊடகத்திலிருந்து அடர்த்தி குறைவான ஊடகத்துக்கு ஒளிக்கதிர் பாயும்போது நேரான பாதை சற்றே திசை திரும்பி வளைந்து விலகும். வெயில் காலத்தில் காற்று தரையின் அருகே வெப்பம் அடைந்து அடர்த்தி குறைவாக இருக்கும். அதே சமயம் மேலே உள்ள காற்று ஒப்பீட்டளவில் வெப்பம் குறைந்து அடர்த்தி கூடுதலாக இருக்கும். எனவே இந்த காற்று அடுக்குகள் வழி ஒளிக்கதிர்கள் வரும்போது அவை வளைந்து கானல் நீர் போன்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு வியப்பான செய்தி ஒன்று தெரியுமா? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பாக்தாத் நகரில் வாழ்ந்த அல் ஹசன் எனும் விஞ்ஞானிதான் கானல் நீர் குறித்து ஆய்வுகளை முதலில் மேற்கொண்டார். இந்திய விஞ்ஞானி சர். சி.வி.ராமன் இந்தக் கேள்விக்கு முழுமையான இயற்பியல் விளக்கம் அளித்து புதிரை அவிழ்த்தார். மின் கம்பியில் அமர்ந்தாலும் காக்கை போன்ற பறவைகளுக்கு ஷாக் அடிப்பதில்லையே, ஏன்?எஸ்.சக்திவேல், பி.என்.பாளையம், திருப்பூர்.ஷாக் அடிப்பது என்றால் மின்சாரம் நம் வழியாக பாய்ந்து செல்கிறது என்பதுதான். மிகு அளவில் மின்சாரம் நம் உடலின் வழியே பாய்ந்து செல்லும்போது நமது உடல் மின்தடையை ஏற்படுத்துகிறது. உலோகம் முதலிய பொருள்கள் மின்தடையை ஏற்படுத்தும்போது அவை சூடாகின்றன. மின்சாரம் வெகுவாகப் பாயும்போது மனித உடலிலும் அவ்வாறு வெப்பம் உயர்ந்து அந்தப் பகுதி எரிந்து போய்விடலாம். காலில் ரப்பர் செருப்பு அணிந்துகொண்டு வயர்மேன் மின்சார வேலைகள் செய்கிறார் அல்லவா? ரப்பரில் எளிதில் மின்சாரம் பாயாது. ரப்பர் போன்ற பொருள்கள் மின்கடத்தாப் பொருள்கள். காலிலே ரப்பர் செருப்பு அணிந்து மின்சார வயரை தொட்டால் நமது உடலில் மின்சாரம் செல்லும், ஆனால் காலிலே ரப்பர் செருப்பு உள்ளதால் தரையில் எர்த் ஆகாது. எனவே நம் உடலில் மின்சுற்று நடைபெறாது. அதே சமயம் காலிலே ரப்பர் செருப்பு அணிந்துகொண்டு மின்சாரம் உள்ளே வரும் வயர் மற்றும் மின்சாரம் வெளியே செல்லும் வயர் இரண்டையும் ஒவ்வொரு கையில் பிடித்துக் கொண்டால், நாம் மின்சுற்றின் பகுதியாக மாறி மின்சாரம் நமது உடலில் பாயும். மின்சாரம் பாயும் மின்கம்பியில் காக்கை போன்ற பறவைகள் உட்காரும்போது அவற்றின் ஊடே மின்சுற்று ஏற்படுவது இல்லை. எனவே அவற்றின் உடலில் மின்சாரம் பாய்ந்து மின்னோட்டம் ஏற்படாது. அவற்றுக்கு ஷாக் அடிக்காது. பறவையைப் போல நாம் அந்தரத்தில் பறப்பது இல்லை. கால்கள் தரையை தொட்டுக்கொண்டு இருப்பதால் சில சமயம் ரப்பர் செருப்பு போட்டிருந்தாலும் நம் உடலின் வழியாக மின்சாரம் எர்த் ஆகும் வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக மின்சாரத்தைக் கையாள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !