வெங்கியை கேளுங்கள்!
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஉலகில் கனிம வளங்கள் குறைந்துவரும் நிலையை செயற்கைக் கோள்கள் எவ்வாறு கண்டறிகின்றன? அந்த செயற்கைக் கோள்களை எந்தெந்த நாடுகள் அனுப்பி வைத்துள்ளன?சு.அழகு நாச்சியார், 5ஆம் வகுப்பு, ஸ்ரீ முருகானந்த நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.தொலையுணர்வு செயற்கைக் கோள்கள் எனப்படும் வகை செயற்கைக் கோள்கள் கொண்டுதான் பூமியின் கனிம வளம் முதற்கொண்டு பல்வேறு வளங்களைக் கண்டறிகிறார்கள். இலைகள் பச்சை நிறத்தில் தென்படுவது ஏன் தெரியுமா? எல்லா நிறங்களையும் கொண்ட சூரிய ஒளிக் கலவையில், பச்சை தவிர ஏனைய நிறங்களை இலை உறிஞ்சிக்கொள்கிறது. பச்சை நிறத்தை மட்டும் உமிழ்கிறது. அதுபோல பூமியின் மேலே வந்து படும் சூரிய ஒளியின் பல்வேறு நிறங்களை, பல்வேறு கனிமங்கள் குறிப்பிட்ட அளவில் உறிஞ்சிக்கொள்ளும். நாம் பார்க்கக்கூடிய ஒளியை தவிர பிற மின் காந்த அலைகளும் சூரியனிலிருந்து வருகின்றன. அவற்றையும் பொருள்கள் அவற்றின் வேதித் தன்மைக்கு ஏற்ப உறிஞ்சிக்கொள்ளும். எந்தெந்த இடத்தில் எந்தெந்த அலைநீள மின்காந்த அலைகள் உறிஞ்சப்படுகின்றன என்பதை அறிந்து அங்கே பொதிந்துள்ள கனிம வளங்களைக் குறித்து அனுமானம் செய்யலாம். சில தொலையுணர்வு செயற்கைக் கோள்கள் குறிப்பிட்ட அலைநீளத்தில், மைக்ரோவேவ் போன்ற கதிர்களை செயற்கையாகச் செலுத்தி அது திரும்பி வரும் விதத்தை அளந்து அனுமானம் செய்வார்கள். அடுத்த அறையில் உட்கார்ந்து கொண்டே மணத்தை வைத்து அம்மா சமைக்கும் சாம்பார் குறித்து அறிந்து கொள்வது போலத்தான் இது. விண்கலம் எப்படி இயங்குகிறது? அது எப்படி புவி ஈர்ப்பு விசையைத் தாண்டி விண்வெளியை அடைகிறது?ஆ.கிஷன்காந்த் (6ஆம் வகுப்பு), ஆ.ஹஸ்வந்த் ராஜ் (8ஆம் வகுப்பு), லோட்டஸ் ஏ.என் வெங்கடாச்சலம் செட்டியார் பள்ளி, தேவகோட்டை.பூமியைச் சுற்றும் விண்கலம் உண்மையில் பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபடுவது இல்லை. கயிற்றில் கட்டிய கல்லைச் சுழற்றினால் கீழே விழாமல் சுழல்வது போல, கண்களுக்குத் தெரியாத ஈர்ப்பு விசையால் கட்டுண்ட விண்கலம் பூமியைச் சுற்றி வருகிறது. தரையில் உருட்டிய பந்து சிறிது தொலைவு சென்றதும் நிற்பது ஏன்? தரையின் உராய்வு விசை அதற்கு எதிராகச் செயல்படுவதால்தான் அல்லவா? அதுபோல வளிமண்டலமும் விண்கலம் சுழலும்போது அதற்கு தடை ஏற்படுத்தும். எனவேதான் காற்று மண்டலத்துக்கு மேலாக, சுமார் 300 - 400 கிலோ மீட்டருக்கு அப்பால் விண்கலத்தை ராக்கெட் கொண்டு ஏவி, அதன் பின்னர் அதை பூமியைச் சுற்ற வைக்கின்றனர். பூமிக்கு மேலே ஏவி சுழல வைத்தால் போதும். அதற்குப் பின் தொடர்ந்து நாம் அதனை செலுத்திக் கொண்டிருக்கத் தேவையில்லை. பூமியின் ஈர்ப்பு விசையில் அது, தானே பூமியைக் காலாகாலத்துக்கும் சுற்றி வந்து கொண்டிருக்கும்.ஏன் தண்ணீரும் எண்ணெய்யும் ஒன்று சேர்வதில்லை?சகா. சந்தியா, 6ஆம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக், காரைக்குடி.நீரின் மூலக்கூறில், ஒரு பகுதி நேர் மின்னேற்றமும் அதன் எதிர்ப் பகுதி எதிர் மின்னேற்றமும் கொண்டு இருக்கும். நீர் மூலக்கூறின் இந்த இரண்டு பகுதிகள் நேர் மற்றும் எதிர் மின்னேற்றம் கொண்ட Na+ Cl- ஐ பிடித்து இழுத்துப் பிரித்து விடும். பிரிந்த Na+ மற்றும் Cl- நீரின் இரண்டு முனையில் பிணைந்து கொள்ளும். இதுதான் கரைதல். நீர் மூலக்கூறில் ஒரு பகுதி நேர் மின்னேற்றமும் மறு பகுதி எதிர் மின்னேற்றமும் இருப்பதுபோல எண்ணெய் மூலக்கூறு இல்லை. ஒரு எண்ணெய் மூலக்கூறு மறு எண்ணெய் மூலக்கூறுடன் பிணைந்துள்ள பிணைப்பும் வலுவானது. மேலும் எண்ணெய் மூலக்கூறு பிரிந்து நீருடன் கலக்கத் தேவையான ஆற்றலை அந்த வேதிவினை உற்பத்தி செய்யாது. எனவேதான் எண்ணெய் நீரில் கரைவது இல்லை. எண்ணெய் அடர்த்தி குறைவு; எனவே நீரின் மேலே மிதக்கும்.காந்தத்திற்கு இரும்புப் பொருட்களை ஈர்க்கும் சக்தி எப்படி வந்திருக்கும்?சு. நவீன், 9, தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை.அறிவியல் பார்வையில், இரும்பு மீது மட்டும் காந்தத்தின் தாக்கம் என்பது சரியல்ல. காந்தம் குறித்து 1778ல் சோதனை நடத்திய செபால்டு ப்ருக்மான்ஸ் (Sebald Brugmans), காந்தப்புலத்தில் பிஸ்முத் (Bismuth) கவரப்படாமல் விலக்கமடைவதைக் கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து ஆய்வு செய்த மைக்கல் ஃபாரடே (Michael Faraday) சில பொருள்கள் காந்தப் புலத்தில் கவரப்படுகின்றன சில விலக்கப்படுகின்றன என அறிந்தார். விலக்கப்படும் பொருள்களை காந்தப் (Diamagnetic) பொருள்கள் எனவும், கவரப்படும் பொருள்கள் இணை காந்தப் (Paramagnetic) பொருள்கள் எனவும் வகைப்படுத்தினார். சில இணை காந்தத்தன்மை உடைய பொருள்கள் வீச்சுடன் கவரப்படுவதோடு அல்லாமல் அவற்றுக்கு நிலை காந்தத்தன்மை வர வைக்க முடிந்தது. இரும்பு, நிக்கல் போன்று காந்தப் புலத்திலிருந்து வெளியே எடுத்துவிட்டாலும் நிலையாகக் காந்தமாகத் தொடரும் பண்பு உள்ள பொருள்கள் சிறப்பாக அயக்காந்தப் பொருள்கள் (Ferromagnetic) என்பார்கள். பிளாஸ்டிக் உட்பட எல்லாவற்றின் மீதும் காந்தத்தின் தாக்கம் இருக்கும் என்பதுதான் மெய். நவீன குவான்டம் தத்துவ இயற்பியல் பிறந்த பிறகுதான் பொருள்களின் காந்தத்தன்மை குறித்து நமக்கு ஆழமாக விளங்கியது. எலக்ட்ரான் மின்னேற்றம் கொண்ட துகள், எதிர் மின்னேற்றம் கொண்ட துகள் சுழலும் போது காந்தப்புலம் உருவாக வேண்டும். அணுக்களுக்குள் எலக்ட்ரான் சுழலும்போதும் இவ்வாறே காந்தப்புலம் உருவாகும். ஆனால் பொதுவாக அணுக்களில் ஜோடி ஜோடியாக எதிரும் புதிருமாகச் சுழலும் இரண்டு ஜோடி எலக்ட்ரான்கள் இருக்கும். இவை இரண்டும் வெளிப்படுத்தும் எதிர் எதிர் காந்தப்புலம் ஒன்றை ஒன்று அழித்து மொத்தமாக காந்தப்புலம் அற்றுப்போகும். இவை ஊடுகாந்தப் பொருள்கள் (Diamagnetic). செம்பு, தங்கம், வெள்ளி போன்ற பொருள்கள் ஊடு காந்தப் பொருள்கள் ஆகும்.விண்வெளிப் பயணத்தின்போது விண்கலத்தில் இருந்து வெளியாகும் ஆக்சிஜன் என்னவாகிறது?மா.மலய குமார் பிஸ்வால், 12 ஆம் வகுப்பு, ஹோலி ஃப்ளவர்ஸ் பள்ளி, கரியமாணிக்கம், புதுச்சேரி.விண்வெளி வீரர்கள் மூச்சு விடும்போது விண்கலத்தில் உள்ள ஆக்சிஜனை எடுத்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவார்கள். விண்கலத்தில் ஒரு சிறப்புக் கருவி இருக்கும். அது கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சிக் கொள்ளும். அவ்வாறு உறிஞ்சப்படும் கார்பன் டை ஆக்சைடை வேதி வினை செய்து உடைத்து ஆக்சிஜனை மறுபடி தனியே பிரித்து எடுப்பார்கள். அவ்வாறு பிரித்து எடுக்கும் ஆக்சிஜனை மறுபடி விண்கலத்தில் புகுத்துவார்கள். ஆபத்துக் காலத்துக்கு என்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருந்தாலும் இவ்வாறு செயற்கைச் சுழற்சி முறையில்தான் விண்வெளி வீர்களுக்கு வேண்டிய சுத்தமான காற்றைத் தயார் செய்வார்கள்.