வெங்கியை கேளுங்கள்!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிமோப்ப நாய்களை எவ்வாறு பழக்கப்படுத்துகிறார்கள்?ரா.நிஷாந்த், 3ம் வகுப்பு, பூலுவபட்டி, திருப்பூர்.விளையாட்டாகப் பழக்கித்தான் மோப்ப நாய்களைத் தயார் செய்கிறார்கள். பந்தைத் தூக்கிப்போட்டுப் பிடிப்பது; வாயில் கவ்விய டவலை பிடித்து இழுப்பது போன்ற விளையாட்டுகளில் தொடர்ந்து ஈடுபடுத்துவார்கள். விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் பந்து அல்லது துடைக்கும் துண்டில் போதை மருந்தைத் தடவி ஒளித்து வைப்பார்கள். ஒளித்து வைக்கப்பட்ட பொருளை நாய் சரியாகக் கண்டுபிடித்து, திரும்ப எடுத்து வந்தால் நாயை பழக்கப்படுத்துபவர் அதனுடன் விளையாடுவார். விளையாடும் ஆர்வத்தில் அதன் மோப்ப சக்தி கூடுதலாகும். பின்னர் பந்து அல்லது துண்டு இல்லாமலேயே குறிப்பிட்ட பொருளைக் கண்டுபிடிக்கும். இதற்கு ஜெர்மன் ஷெப்பர்டு, டாபர்மேன் போன்ற சில வகை நாய்களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.மழை பெய்த பின் கட்டாந்தரையில் புற்கள் முளைப்பது எப்படி?எம்.ஆஷிகா, மடிப்பாக்கம், சென்னை.அரிசி, கோதுமை போன்ற தாவரங்களும் புல் வகைதான். புற்களிலும் சிறுசிறு நுண்ணிய பூக்கள் பூக்கும், பல ஆயிரம் விதைகள் உருவாகும். மெல்லிய காற்றுகூட புற்களின் விதைகளை எடுத்துச் செல்லும். கட்டாந்தரையில் இவ்வாறு விழும் புல்லின் விதைக்கு தகுந்த சூழல் ஏற்படும்போது, கருவுற்று வளர்ந்து, புதிய புல் முளைக்கும். சில புல் வகைகள் நிலத்துக்கு அடியில் தனது வேரை வளரவிட்டு ஆங்காங்கே தலைதூக்கும்.நகமும், முடியும் இறந்த செல்கள்தானே! ஆயினும் இவை எப்படி தொடர்ந்து வளர்கின்றன?ஆர். அழகு மேகலா, இளநிலை விலங்கியல் இரண்டாம் ஆண்டு, இ.எம்.ஜி. யாதவா மகளிர் கல்லூரி, மதுரை.தலைமுடி இருக்கும் தடித்த தோலின் உட்பகுதியை நுண்ணோக்கி வைத்துப் பார்த்தால்தான் எப்படி வளர்கிறது என்பது புரியும். தடித்த தோலுக்குக் கீழே மயிர்க்கால்களில் புதிய செல்கள் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கின்றன. மயிர்க்காலில் உருவாகும் புதிய சிறப்பு வகை தோல் செல்கள், கெரட்டின் (Keratin) புரதத்தை வெளிப்படுத்துகின்றன. புதிதாக உருவாகும் செல்கள் பழைய செல்களை வெளியே தள்ளுகின்றன. மயிர்க்கால்களின் ஊடே அழுந்தி வெளிப்படும் இந்த செல்கள், ஒன்றுடன் ஒன்று பிணைந்து மடிந்து போகின்றன. இந்தச் செல்கள் உருவாக்கிய கெரட்டின் மட்டும் திரண்டுவிடுகின்றன. தேங்காய் நார் இழையைத் திரித்தால் கயிறு உருவாவதுபோல, கெரட்டின் இழைகள் திரிந்து முடியாகவும் நகமாகவும் மாறுகின்றன. மயிர்க்கால், நகக்கால் பகுதிகளில் உயிர்ப்புடன் உருவாகும் செல்கள், வெளிப்படும்போது மடிந்த செல்களாக மாறிவிடுகின்றன. நமது நகம் கெரட்டின் எனப்படும் ஒருவகை புரதத்தால் ஆனது. முடி, தடினமனான மேல் தோல் போன்றவற்றிலும் இதே புரதம்தான் இருக்கிறது. இந்தப் பகுதிகள் உடலின் சில சிறப்பான பகுதிகளைக் கவசமாகக் காக்கின்றன.ஆண், பெண் குரலில் வித்தியாசம் இருப்பது ஏன்?ச.இருளப்பன், 7ம் வகுப்பு, கேந்திரிய வித்யாலயா பள்ளி, காரைக்குடி.பிறக்கும் குழந்தையின் குரலில் ஆண், பெண் வித்தியாசம் இருப்பதில்லை. நான்கு வயதுக்கு மேல்தான் குரல் வித்தியாசம் தோன்றுகிறது. 15 வயதிற்குள் ஆண்களின் குரலில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுவிடும். பெண்களுக்கு, ஐம்பது வயது வரை மாற்றங்கள் குறைவு. அதன்பின்னரே குரலில் மென்மை போய் கரகரப்பு வரும். வீணையில் கம்பிகளை மீட்டினால் இசை வருவதுபோல, குரல்வளையில் உள்ள, 'குரல் நாண்கள்' எனப்படும் தசை மடிப்புகள் அதிரும்போது சப்தம் உருவாகிறது. இயல்பில் விறைப்பாக இருக்கும் குரல் நாண்களில், பேச முயலும்போது காற்று பட்டு, தெறித்து அதிர்வுகளை உருவாக்கும். இதுவே சப்தம் எழுவதின் தொடக்கம். அதன் பின்னர் வாய், உதடுகள், நாக்கு முதலியவையும் சப்தங்களைப் பேச்சாக மாற்ற உதவுகின்றன. இருந்தாலும் குரலில் மென்மை அல்லது கரகரப்பை உருவாக்குவது குரல்வளைதான்.பிறக்கும் தருவாயில் ஆண், பெண் குழந்தைகளின் குரல் நாண் ஓரளவு சமமாகவே இருக்கும். ஆணின் வளர்ச்சி நிலையில் குரல்வளை விரிவடைந்து விடும். கழுத்தில் உள்ள, 'தைராய்டு கார்டிலேஜ்' எனப்படும் குருத்தெலும்பு புடைத்து வெளிப்படும். இந்த மாற்றத்தையே 'குரல் உடைவது' என்கிறார்கள்.உடல் வளர்ச்சியின் தொடர்ச்சியாக, பூப்படையும் பெண்களுக்கு 1.25 செ.மீ. முதல் 1.75 செ.மீ. நீளமும், ஆண்களுக்கு 1.75 செ.மீ. முதல் 2.5 செ.மீ. நீளமும் குரல் நாண் இருக்கும். குரல் நாணின் நீளம் அதிகமானால் அது வெளிப்படுத்தும் அலைநீளம் கூடும்; அதிர்வெண் குறையும். ஆண்களைப் போல நீளம் கூடாமல் இருப்பதால் பெண்களின் குரலில் மென்மை தொடரும். குழந்தைகளுக்கு 300 முதல் 310 முறை குரல் நாண் அதிரும். இதேபோல் ஆணுக்கு 120 முதல் 130 முறையும், பெண்ணுக்கு 200 முதல் 220 முறையும் அதிர்கின்றன.