அவகாட்ரோ எண்!
வேதியியல் பாடத்தில் 'அவகாட்ரோ' எனும் விஞ்ஞானியைப் பற்றிப் படித்திருப்பீர்கள். இவர் இத்தாலி நாட்டில் ஒரு பிரபுக் குடும்பத்தில் பிறந்தவர். குவாரிகுவா, செர்ரெட்டோ எனும் இரு மாவட்டங்களின் பிரபுவாக இருந்தார். அவகாட்ரோ முதலில் படித்தது சட்டம். வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார். அறிவியலில் அதிக நாட்டம் இருந்ததால், அறிவியல் பாடங்களைக் கற்கத் தொடங்கி, பிற்காலத்தில் ஆராய்ச்சியாளர் ஆகிவிட்டார். இவர் காலத்தில், ஜான் டால்டன் முதன்முதலாக அணுவின் தன்மையை (1808) விளக்கினார். அவகாட்ரோவுக்கு அணுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈர்ப்பு ஏற்பட்டது. மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து ஒரு கூற்றை வெளியிட்டார். 'அவகாட்ரோ ஹைபாதெஸிஸ்' (Avagadro Hypothesis), 'அவகாட்ரோ கூற்று' எனப்படும் அந்தக் கண்டுபிடிப்பு, இன்றளவிலும் அறிவியலின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகப் போற்றப்படுகிறது. 'ஏதாவது இரண்டு வாயுக்களை சம அளவில் எடுத்துக்கொண்டு, அவற்றை ஒரே அழுத்தத்திலும், ஒரே வெப்பநிலையிலும் வைத்தால், அவை இரண்டிலும் இருக்கும் மூலக்கூறுகளின் எண்ணிக்கை சமமாக இருக்கும்' என்பதே அந்தக் கூற்று. ஒரு தனிமத்தின் மிகச் சிறிய அடையாளக் கூறு அணு; அணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து மூலக்கூறுகள் வடிவத்தில் ஒரு தனிமத்தில் இருக்கும் என்பது இன்று நமக்குத் தெரியும். இதன் அடிப்படையில், ஓர் ஆக்ஸிஜன் மூலக்கூறில் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்கள் இருப்பதால், அதை O2 என்று குறிப்பிடுகிறோம். அவகாட்ரோ காலத்தில், 'எல்லாத் தனிமங்களும் அணுக்களாக மட்டுமே இருக்கும்; மூலக்கூறுகளாக இருக்காது; தனிமங்களின் கலவையான சேர்மங்கள்தான் மூலக்கூறுகளாக இருக்கும்' என்று விஞ்ஞானிகள் கருதினார்கள். அதனால், வாயுக்களில் இருக்கும் மூலக்கூறுகளைப் பற்றி அவகாட்ரோ சொன்னதை, அறிவியல் உலகம் அப்போது பொருட்படுத்தவில்லை.அவகாட்ரோ இறந்த பிறகு, கானிசரோ (Cannizaro) என்ற ஒரு வேதியியல் விஞ்ஞானி, அவகாட்ரோவின் கூற்றை நிரூபித்தார். அவகாட்ரோவின் கண்டுபிடிப்பால் பிற்காலத்தில் இரண்டு முக்கிய விஷயங்கள் நடந்தன. 1) அவகாட்ரோவின் தத்துவத்தைப் பயன்படுத்தி, அணுக்களின் எடையையும் அளவையும் மிகத் துல்லியமாக அளவிட விஞ்ஞானிகளால் முடிந்தது. ஓர் அணுவின் விட்டம் 0.00000008 செ.மீ. என்பதுவரை நிறுவினார்கள். 2) 2.016 கிராம் எடையுள்ள எந்த வாயுவிலும் 6.0221367X1023 என்ற எண்ணிக்கையில் மூலக்கூறுகள் இருக்கும் என விஞ்ஞானிகள் கணக்கிட்டார்கள். அவகாட்ரோவைச் சிறப்பிக்கும் வகையில், இந்த எண்ணுக்கு 'அவகாட்ரோ எண்' என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த எண் மிகவும் பெரியது. இந்த எண்ணிற்குச் சமமான அமெரிக்க டாலர்கள் இருந்தால், புவியில் வசிக்கும் ஒவ்வொருவரையும் 1,000 கோடி டாலர் வைத்திருக்கும் பணக்காரர் ஆக்கிவிடலாம்! அவகாட்ரோவின் முழுப்பெயர்கூட மிகவும் பெரியதுதான். லோரன்ஸோ ரொமனோ அமதியோ கார்லோ அவகாட்ரோ டி குவாரிகுவா இ டி செர்ரெட்டோ (Lorenzo Romano Amadeo Carlo Avagadro di Quarequa e di Cerreto).