பேக் இடிக்குது, தள்ளி நில்லு!
இன்று பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்களைப் பார்ப்பது அரிது. சைக்கிள் தொடங்கி, வேன், பஸ், இரயில் என்று பயணம் செய்து பள்ளிக்குச் செல்பவர்களே அதிகம். இப்படிப் பயணிப்பதால், அவர்கள் என்ன மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்? 'நீண்ட துாரம் பயணம் செய்து, பள்ளி செல்வதில் உள்ள கஷ்டம் என்ன?' என்று கேட்டிருந்தோம். பதிலை, கோவை ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சொன்னார்கள்.சுபபாரதி, 12ஆம் வகுப்பு பஸ் பயணம்தான் மிகப்பெரிய சிக்கல். பல கண்டக்டர்கள், பஸ்சில் ஏறினாலே திட்டுவாங்க. சரியா, பஸ்ஸை ஸ்டாப்களில் நிறுத்த மாட்டாங்க. ஓடிப்போய்த்தான் வண்டியைப் பிடிக்கணும். கூட்டம் அதிகமாயிடுச்சுன்னா, விசில் அடிச்சுடுவாரு கண்டக்டர். பஸ் போயிடுமோன்னு ஒரே கவலை. இதன் நடுவில் எங்கே கவனமாகப் படிக்கறது?அபிநயா, 10ஆம் வகுப்புகாலையில், 5 மணிக்கு எழுந்திருச்சு ஒரு மணிநேரம் படிப்பேன். அப்புறம் கிளம்பி பள்ளிக்கு வர்றதுக்கு 8:45 மணி ஆயிடும். அம்மா, பிரேக்பாஸ்டை கையில கட்டிக் கொடுத்துடுவாங்க. ஸ்கூல்ல வந்துதான் சாப்பிட முடியும். இதில, மதிய உணவு, சில சமயங்களில் கெட்டுப்போயிடும். அதையும் வீணாக்காமல், பசிக்கு சாப்பிட்டு விடுவேன். திலோத்தனா, 9ஆம் வகுப்புபள்ளிக்குப் போறதுக்கு ரொம்ப தூரம் பயணம் செய்யணும். அதனால வீட்டில படிக்க முடியறதில்ல. பள்ளிக்கூடத்திலும் பயணம் செய்யும்போதும் படிக்கறதுதான். என்றைக்காவது குறிப்பிட்ட பஸ்சை தவறவிட்டால், ஒரு கி.மீ. நடந்துதான் வீட்டுக்குப் போகணும். காலையில், சிக்கிரமே எழுந்தால் மட்டுமே, பள்ளிக்குச் சரியான நேரத்திற்கு வரமுடியும். பல சமயங்களில், வகுப்பில் தூங்கிவிடுவதால், ஆசிரியர்களிடம் திட்டும் வாங்கியிருக்கேன்.சித்தேஷ், 11ஆம் வகுப்புஓட்டப்பந்தய பயிற்சிக்காக தினமும் காலை 4:45 மணிக்கு எழுந்துடுவேன். இதனால், பல நேரங்களில் அசதியில் பஸ்சில் தூங்கிடுவேன். அப்படித் தூங்கி, பக்கத்து ஊர்களில் இறங்கிய சம்பவங்கள் பலமுறை நடந்திருக்கு. விடுமுறை விட்டால் நாள் முழுசும் தூங்கியே கழிப்பேன்.ராகுல், 12ஆம் வகுப்புமுதல்ல எங்க ஸ்கூல் கிட்ட, பஸ் ஸ்டாப்பே இல்ல. சிக்னல்ல நிக்கிற பஸ்லதான் ஏறணும், இறங்கணும். இதனால, அடிக்கடி விபத்தும் ஏற்படும். அடுத்து, பஸ் கூட்ட நெரிசலில் சிக்கிப் பயணம் செய்யும்போது, எங்களைப் பார்த்துப் பரிதாபப்படுபவர்கள் குறைவு. 'பேக் இடிக்குது, தள்ளி நில்லு' என்று திட்டுபவர்கள்தான் அதிகம். ரொம்ப சங்கடமாக இருக்கும்.பிரநீத்ராமு, 9ஆம் வகுப்புஅதிகாலையில் எழுந்து பள்ளிக்கு வருவதால், தூக்கம் தூக்கமா வரும். படிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியாது. பலருக்குப் படிப்பதில்தான் கஷ்டம் இருக்கும், எங்களைப் போன்ற மாணவர்களுக்கு பள்ளிக்கு வருவதே கஷ்டம்தான்.