உள்ளூர் செய்திகள்

முறிந்தது முதுகு; நிமிர்ந்தது நம்பிக்கை!

சென்னையின் மையப்பகுதி. அன்றாட வாழ்க்கைக்கு ஆட்டோ ஓட்டினால் தான், வருமானம் வரும் என்ற நிலை. ஒரே அறைதான் மொத்த வீடும். இங்கிருக்கும் சிறுவன் ஒருவன், விபத்தாலும் மற்ற பல காரணங்களாலும் முதுகெலும்பு முறிந்து எதிர்காலமே கேள்விக்குறியாக இருப்பவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும், சக்கர நாற்காலியில் பல ஊர்களுக்குச் செல்கிறான். 12 வயது நிரம்பிய இச்சிறுவனை, முதுகெலும்பு பாதிக்கப்பட்டோர் ஏன் அழைக்கிறார்கள்? இச்சிறுவன் அவர்களுக்கு ஏன் ஆறுதலாக இருக்கிறான்? அந்தச் சிறுவனான மனோஜிடமே கேட்டோம்: “மற்றவர்களைப் போல, ஓடி ஆடி விளையாடியவன்தான் நான். வீட்டினருகே விளையாடும்போது ஏற்பட்ட விபத்து, என் வாழ்க்கையை மட்டுமல்ல; பெற்றோரின் வாழ்க்கையையும் மாற்றிவிட்டது. விபத்து ஏற்பட்டதும், முதுகெலும்பு உடைந்துவிட்டது. மருத்துவர்கள் உயிரைக் காப்பாற்றி விட்டனர். ஆனால், முதுகுத்தண்டு முறிவைச் சரிசெய்ய முடியாது எனக் கூறிவிட்டார்கள். ஓடி ஆடி விளையாடும் பருவத்தில், நாற்காலியிலேயே அமர்ந்திருப்பது என்பது மிகப்பெரிய தண்டனை. மற்றவர்களோடு பேசுவது, பழகுவது என, எல்லாமே குறைந்து போனது. பள்ளி செல்லாமல், நண்பர்களோடு பேசாமல் தனிமையிலேயே இருந்தேன். உடல் இனி பல விஷயங்களுக்கு ஒத்துழைக்காது; குறிப்பாக வெகுநேரம் மல்லாந்து படுக்க முடியாது. சிறுநீர் கழிக்க யாருடைய உதவியாவது தேவைப்படும். மலம் வருகிற உணர்வே இருக்காது. வயிற்றுப்பகுதிக்கு கீழ் எந்த உணர்வும் இல்லாமல் இருப்பது மிகவும் கொடுமை. இப்படி இருப்பது எனக்கு மட்டுமல்ல, என் பெற்றோருக்கும் வேதனை. முதுகுத்தண்டு முறிவால் அவதிப்படும் பலருக்கும், மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. எனக்கும் என் பெற்றோருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. அந்த ஆலோசனைகள், எங்கள் மனதில் சிறிதளவு தைரியத்தை அளித்தன. வெளியே செல்லாமல் இருந்த நான், தெருவில் நண்பர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பேன். நண்பர்கள் சிலர் கேலி செய்வார்கள். மீண்டும் கூண்டுக்குள் அடைந்து கொள்வேன். அப்போதெல்லாம் பெற்றோர் ஆறுதல் கூறினர். மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனைகளும், பாதிக்கப்பட்ட பிறரைப் பார்த்தும், என் பெற்றோர் தங்களைத் தேற்றிக்கொண்டனர். விபத்து ஏற்பட்டு, ஓராண்டு சிகிச்சை, ஓய்வு என இருந்ததால், பள்ளி செல்ல முடியவில்லை. பின்னர், பெரும்பாலான பள்ளிகளில் எனக்கு இடம் அளிக்கவில்லை. இன்னும் சில பள்ளிகளில், உடல் குறைபாடு உள்ளவர்களுக்கான கட்டமைப்பு வசதிகள் இல்லை. என்னைப் போன்ற சிறுவர்களை எப்படி கவனித்துக்கொள்வது என்ற விழிப்புணர்வு அங்கே இல்லை.ஒருவழியாக, தனியார் பள்ளி ஒன்றில் இடம் கிடைத்து, நன்றாகப் படித்து வருகிறேன். பள்ளியில் சக்கர நாற்காலிக்கான வசதி அமைத்துக் கொடுத்ததோடு, ஒவ்வோராண்டும், வகுப்பறையை மாற்றாமல், அதே அறையையே எனக்காக வழங்கியிருக்கிறது பள்ளி.அதேபோல், என் பள்ளி விளையாட்டுத் துறை, எனக்கு நம்பிக்கையை விதைத்தது. நாற்காலியில் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகளை கற்றுக்கொண்டேன். தற்போது துப்பாக்கி சுடுதலில் சேர்ந்து கற்று வருகிறேன்; இன்னும் சில மாதத்தில் வரும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க தீவிர பயிற்சியில் இருக்கிறேன். படிப்பிலும் ஆர்வம். இப்போது பள்ளியில் நண்பர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறேன்”.நம்பிக்கையாகப் பேசினார் மனோஜ்.தமிழகத்தில் முதுகுத்தண்டு பாதிப்புள்ள பலருக்கும் ஆலோசனைகள் வழங்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார் மனோஜ். மருத்துவர்களும் மனோஜை பல ஊர்களில் நடக்கும் விழிப்புணர்வு முகாம்களுக்கும் ஆலோசனைகள், ஆறுதல், நம்பிக்கை கொடுக்க சென்னையிலிருந்து அழைத்துச் செல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !